சிறுகதை

உயிர்ச் சகோதரர்- ராஜா செல்லமுத்து

கொட்டித் தீர்க்கும் வெப்பத்தை வெளியேற்றவும் வியர்க்கும் வியர்வையை விரட்டியடிக்கவும் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி, ஃபேன் காற்று, வெட்ட வெளி என்று சுற்றித் திரிந்த முகிலன், குமரன், சேது, காமுத்துரை, சிவக்குமார் என்ற நண்பர்கள் கடலில் குளித்துக் கரையேறினால் சூட்டைக் குறைக்கலாம் என்று கடல் தேடி ஓடினார்கள். மொத்த வெப்பமும் ஒன்று சேர மெரினா கடற்கரையில் குவிந்து கிடந்தார்கள் மக்கள் . அலைகளில் விழுந்து குளித்து சூடு குறைத்த மனிதர்களின் வெப்பத்தை வாங்கிய கடலலைகள் கரையில் மோதி மோதி தன் மேல் படர்ந்த சூட்டைக் கக்கிக் கொண்டிருந்தது. மணல் வெளி முழுவதும் காலடிகள். உப்புச் சுமந்த கடல் காற்றில் மிதந்து வந்தது மீன் பொறிக்கும் வாசம். சலசலக்கும் மனிதச் சத்தங்களின் ஊடே எல்லார் நாசியிலும் ஏறியது மக்கா சோளம் சுடும் ருசி. குளம்படியில் மணல் பறக்க, ஒரு பெண்ணைத் தூக்கிச் சுமந்து சென்று கொண்டிருந்தது, ஒரு வாடகைக் குதிரை. ஆர்வ மிகுதியில் ஊ, ஊ என்று குரல் கொடுத்த படியே வந்தார்கள் முகிலன், குமரன், பாண்டி, சேது, காமுத்துரை, சிவக்குமார் என்ற நண்பர்கள்.

ஏற்கனவே குவிந்து கிடந்த ஜன சந்தடிகளுக்கு மத்தியில் உள்ளே நுழைந்தார்கள் நண்பர்கள். ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் அத்தனை பேரும் அலைகளில் நனைந்து , கடலில் குதித்தார்கள். அதோடு இந்த நண்பர்களும் சேர மெரினா கடற்கரை மனிதத் தலைகளால் நிரம்பி நிறைந்தது.

அலையில் ஆடி என்று குளித்துக் கொண்டிருந்தார்கள். பாண்டி மட்டும் திரைகள் தாண்டிப் போய்கொண்டே இருந்தான்.

“டேய் பாண்டி, அதுக்கு மேல போகாதே; , வேண்டாம்டா , அங்க ஆழம் அதிகமா இருக்கும். அங்க போகாதே ” என்று கத்திப் பார்த்தார்கள் நண்பர்கள்.

பாண்டி கேட்பதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே இருந்தான்..அலைகளில் ஆடிஆடி மனிதர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். பாண்டி வரையறுக்கப்பட்ட இடத்தைத் தாண்டிப் போய் கொண்டே இருந்தான் . அதுவரையில் பொறுமை காத்த நண்பர்கள் , குளிப்பதை மறந்து விட்டு பாண்டியைத் தேடினார்கள்.

பாண்டி பாண்டி நண்பர்களின் கூக்குரல் அலைகளாேடு சேர்ந்து அவன் பெயரை உச்சரித்தது. பாண்டியைக் காணவில்லை. பதறிப் போன நண்பர்கள் கரையேறினார்கள்.

டேய், பாண்டிய எங்கடா காணோம் என்று ஒருவருக்கொருவர் பதறித் துடித்தார்கள்.

நான் எவ்வளவாே சொன்னேன்டா. அவன் கேக்கல. இப்ப என்ன பண்றது? தலையில் கை வைத்து அழுது புலம்பினார்கள். இவர்கள் அழுவதைப் பார்த்த சிலர்

“தம்பி, நீங்க எவ்வளவோ சொல்லிப் பாத்தீங்க. ஆனா, அந்தத் தம்பி தான் கேக்கல நீங்க ஒடனே போலீசுக்கு இன்பார்ம் பண்ணுங்க. காலா காலத்தில தேடுனா தான் ஆள கண்டுபிடிக்க முடியும். இல்ல கஷ்டம் தான் ” சுற்றியிருப்பவர்கள் சொல்ல

கதறியழுத நண்பர்கள் காவல் துறைக்குத் தகவல் சொன்னார்கள்:

“தம்பி, எவ்வளவு சொல்லியும் கேக்க மாட்டிங்கிறிங்க. கடல்ல குளிக்க கூடாதுங்கிற சட்டம் இருக்கு. அத யாரும் மதிக்கிறதில்ல. ஒரு அளவுக்கு மேல கடல்ல போக கூடாதுங்கிற வரையறை இருக்கு . அத யாரும் சட்ட பண்றதில்ல. இப்ப பாருங்க. யாருக்கு நஷ்டம். எள வயசு போச்சு. நீங்க பாட்டுக்கு ஏதாவது பண்ணிர வேண்டியது; கடைசியில குய்யோ முறையோன்னு கத்துறது. போங்க; ஆள் வருவாங்க ” என்று அவர்களைத் துரத்தினார், உயரதிகாரி

“சார், எங்க பிரண்ட் பாண்டி, ” என்று அழுதவர்களை

“இப்ப அழுது என்ன பிரயோசனம். கடல்ல எறங்கும் போதே அந்த யாேசனை வந்திருக்கனும்” என்று கடிந்து கொண்டார், அந்த போலீஸ் அதிகாரி

இனி இவர்களிடம் பேசி பிரயோசனம் இல்லை என்று நினைத்த நண்பர்கள் கடல் நோக்கி ஓடினார்கள்.

பாண்டி ,கடலுக்குள் காணாமல் போன விஷயம் கடற்கரைப் பகுதி முழுவதும் பரவியிருந்ததால் ஆட்கள் அங்கு குழுமியிருந்தார்கள்.

பாண்டி பாண்டி என்று குரல் எடுத்துக் கூப்பிட்டும் அவன் வரவே இல்லை. சுற்று முற்றும் பார்த்தார்கள். மீட்புப் பணியினரும் வருவதாகத் தெரியவில்லை.

பாண்டி என்று சேது கடலுக்குள் குதித்தான். அவன் அப்படிக் குதிப்பதைப் பார்த்த அத்தனை நண்பர்களும் பதறிப் போனார்கள். பாண்டி பாண்டி என்று சொல் மட்டும் கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் குரலும் அடங்கிப் போனது. அதற்குள் மீட்ப படையினரும் வந்து சேர்த்தார்கள். கடலில் குதித்த சேதுவும் காணாமல் போனான்.

உங்களுக்கு அறிவே இல்லையா? என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா ? என்று திட்டித் தீர்த்தார்கள் மீட்பு பணியாளர்கள்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த இடமே ரணகளமானது. பாண்டியைக் கடலுக்குள் இருந்து தூக்கி வந்தான் சேது. மற்றவர்கள் ஓடிச்சென்று அவர்களைத் தாங்கிப்பிடித்தார்கள்.

இரண்டு பேரையும் மூச்சிரைக்க மூச்சிரைக்க தூக்கிக்கொண்டு கடற்கரை மணலில் போட்டார்கள் . அப்போது பாண்டியின் வயிற்றில் இருந்த தண்ணீரை எடுத்து அவனை உயிர் பிழைக்க வைத்தார்கள் .சேது அரக்கப் பரக்க விழித்துக் கொண்டிருந்தான்.

” உனக்கு இந்த தைரியம் எப்படி வந்தது ?என்று கேட்டபோது

“என்னுடைய நண்பன் செத்துருவானோன்னு பயமா இருந்தது. அதுதான் நானே கடல் குதிச்சுட்டேன்” என்று சொன்னான்

” உனக்கு நீச்சல் தெரியுமா?” என்று மீட்புப் படை வீரர்கள் கேட்டார்கள்.

‘‘ தெரியாது’’ என்றான் சேது.

அனவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

” இது உண்மையிலே நீங்க உங்க நண்பர் மேல வச்சிருக்கிற மிகுந்த பாசத்தை காட்டுது.ஒரு சகோதரனை விட நீங்க சிறப்பா இருந்திருக்கீங்க “என்று அங்கிருந்தவர்கள் சேதுவைப் பாராட்டினார்கள்.

கடல் அலைகள், கரையை நாேக்கி வேக வேகமாக வந்து கொண்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *