இஸ்ரேலுக்கு கமலா ஹாரீஸ் எச்சரிக்கை
நியூயார்க், ஜூலை 26–
அப்பாவிகளின் உயிரிழப்புகளை பார்த்துக்கொண்டு உணர்ச்சியற்று இருக்க முடியாது என்று கமலா ஹாரீஸ், இஸ்ரேல் பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகு ஆற்றிய உரையில், முழுமையான வெற்றி கிடைக்கும் வரையில், ஹமாஸ் மீதான போர் தொடரும் என்று கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸை சந்தித்து பேசியபோது, இஸ்ரேல் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்றும், காசாவின் நிலையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் எனவும் கமலா ஹாரிஸ் கூறியதாக தகவல்கள் வெளியானது.
உணர்ச்சியற்று இருக்க முடியாது
இந்நிலையில், நெதன்யாகுவுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் கூறியதாவது:–
“தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது. ஆனால், கடந்த 9 மாதங்களாக காசாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மிக முக்கியம். அங்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்பு, பசி கொடுமை, புலம் பெயரும் மக்கள் என இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உணர்ச்சியற்றவர்களாக நாம் இருக்க முடியாது.
குறிப்பாக நான் அமைதியாக இருக்க மாட்டேன். இந்த போர் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தப்பட்டு, பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் நேரம் இது” என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகு பேசிக்கொண்டிருந்தபோது வெளியில் போராட்டக்காரர்கள் தீவிரமாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்நதனர். வாஷிங்டன் டிசியில் ஒரு கொடி மரத்தில், ஏற்றி வைத்திருந்த அமெரிக்க கொடியை இறக்கிவிட்டு, பாலஸ்தீன கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றியிருந்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. வாஷிங்டன் மட்டுமல்லாது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இப்படி இருக்கையில் கமலா ஹாரிஸின் பேச்சு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.