செய்திகள்

உயிரிழந்த மாணவி பிரியா குடும்பத்திற்கு வீடு– சகோதரருக்கு அரசு வேலை: தமிழக அரசு முடிவு

சென்னை, நவ. 16–

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா குடும்பத்திற்கு வீடு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்–உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர். அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், அவரது சகோதரர்களில் ஒருவருக்கு ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

அதன்படி பிரியாவின் சகோதரர்கள் 3 பேரில் யாருக்கு அரசு வேலை தர வேண்டும் என்பதை அவரது குடும்பத்தார் முடிவு செய்து சொன்னால் அவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பிரியாவின் பெற்றோர் இன்று முடிவு செய்து அரசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய பிரியாவின் தாய், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வீடு வழங்க முடிவு செய்துள்ளது. மாணவி பிரியா குடும்பத்திற்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *