ஆர்.முத்துக்குமார்
பல்வேறு சிக்கல்களை சந்தித்து செயல்பட்டு கொண்டிருக்கும் ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு 500 புது விமானங்கள் வாங்க ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாக அறிவித்த செய்தி பலருக்கு ஆச்சரியத்தை தரும்!
சம்பளப் பாக்கி, பல ஆண்டுகளாக இருக்கும் கடன் சமை, லாபகரமில்லா பல சேவைகளை தொடர்ந்தாக வேண்டிய கட்டாயம் எனப் பன்முனை தலைவலிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியாவை டாடா குழுமம் எடுத்து நடத்த பெரும் தொகை கொடுத்து வாங்கிக் கொண்டது.
கையில் வந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் இப்படி மிகப்பெரிய முதலீடுகளாக 500 புது விமானங்கள் வாங்குவது சாத்தியமா? புத்திசாலித்தனமா? என விவாதங்கள் துவங்கி விட்டது.
இந்தப் புது வர்த்தக திட்டத்திற்கு முதலீடுகள் ரூ.2400 கோடிக்கும் மேலாகும்.
உங்களுக்கு தெரியுமா? ஏர் இந்தியா கடைசியாக வாங்கிய புது விமானம் 17 ஆண்டுகளுக்கு முன்பாம்! அப்போது 68 போயிங்கும் 43 ஏர்பஸ் ரக விமானங்களையும் வாங்கி உள்ளது.
தற்போது வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் விமானங்கள் 2024ல் பிற்பகுதியில் தான் கைக்கு வரும். 2025ல் எல்லா புது விமானங்களும் ஏர் இந்தியா வசம் வந்துவிடும்.
அமெரிக்காவும் பிரான்சும் இந்த ஒப்பந்தத்தின் பயனாக இந்தியாவுடன் நிலவும் உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று கூறி வருகிறார்கள்.
பொருளாதார மந்தநிலை நீடிக்கையில் இப்படி பல ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தம் மிக அவசியமானதாக இருக்கும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் வீழ்ச்சியை கண்ட ஒரு துறை சுற்றுலா துறையாகும் . அதன் அதிமுக்கிய கட்டுமானம் விமான சர்வீசுகளாகும்.
நம் நாட்டில் தற்போது 7 விமான சர்வீசுகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அவை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா, இந்திகோ, ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா மற்றும் கோ பர்ஸ்ட் ஆகியவையாகும்.
அந்த பட்டியலில் உள்ள ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா டாடா குழுமத்தின் நிறுவனங்கள் ஆகும்.
உலகெங்கும் சுற்றுலா துறை வளர துவங்கி விட்டது. ஆனால் விமான நிறுவனங்கள் நிதி பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏர் இந்தியா தற்போது இந்திய விமான பயணியர்களில் 9 சதவிகிதத்தை கையாளும் விஸ்தாரா விமான நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு செயல்பட இருக்கிறது.
அதாவது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான விரிவான விமான சேவைகள் கொண்டு சிறு நகரங்களை இணைப்பது, மிக குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை தருவது என்ற திட்டத்தை தரும் முயற்சியில் ஏர் இந்தியா விமானம் களம் இறங்கி விட்டது. அதன் தொடர்ச்சியே தனது விமான சேவையை அதிகரித்துக் கொள்வது.
கைவசம் நிறைய விமானங்கள் இருந்தால் உலகெங்கும் ஏர் இந்தியா சேவைகளை உறுதி செய்து விடமுடியும். கைவசம் இருக்கும் விமானங்களை கொண்டு இதர விமான நிறுவனங்களுக்கு வாடகைக்கு தந்து நிதி பற்றாக்குறையை நிவர்த்தியும் செய்து கொள்ள முடியும்.
இந்தியப் பயணிகளால் இன்றைய அதிகரிக்கப்பட்ட கட்டண விலைகளில் பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் பயணிக்கத் தானே செய்கிறார்கள். விரைவில் கூடுதல் விமானங்களுடன் தனது விமான சேவைகளை விரிவாக்கம் செய்தால் குறைந்த கட்டண டிக்கெட்டுகளையும் மீண்டும் உறுதி செய்ய வாய்ப்பு உண்டு.
இன்று உலக விமானத் துறைகளில் வளர்ச்சித் திட்டங்கள், லாபகர செயல்பாடுகளில் இந்திய விமானத் துறை முதல் ஐந்து இடத்தில் உலகப் பட்டியலில் இருக்கிறது.
ஆகவே விமான துறையில் மந்த நிலை நீங்கி, மீண்டும் முழுவீச்சில் பரபரப்பாக செயல்பட ஆரம்பிக்கும் நேரத்தில் இந்திய விமான துறை உலக அரங்கில் சிறப்பாக செயல்பட டாடா குழுமம் ஏர்இந்தியாவின் விரிவாக்கத்திற்கு அச்சாரம் போட்டு விட்டது. கூடவே வசதியான, சொகுசான பயணமாகவும் உயர்த்தி உலகதரச் சேவை தரும் நிறுவனமாக உயர்ந்தால் ஏர்இந்தியா தலைநிமிர்ந்து நடைபோடும். மீண்டும் மகாராஜா அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளும்.