செய்திகள்

உயர் படிப்புக்கு ஆசிரியர்கள் ஆலோசனை : இது பற்றி சிந்திப்பாரா முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்: அன்றே சொன்னார் அண்ணா


ஆர்.முத்துக்குமார்


சக மனிதர்களின் உயிர் காக்கும் மகத்துவம் பெற்ற மருத்துவ படிப்புக்கு இடம் பிடிக்க இயலாமல் ‘நீட்’ தேர்வில் தோல்வியுற்ற சில மாணவர்கள் ‘எல்லாம் போச்சு’ என்ற மனநிலையில் உயிர் மாய்த்துக் கொள்வது பற்றி படிக்கும்போது மனம் கனக்கத்தான் செய்கிறது.

இம்முறை சென்னை நகரில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாது போன மாணவன் குரோம்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த 51 வயது செல்வகுமாரின் மகன் ஜெகதீஸ்வரன். இருமுறை தோல்வியுற்ற நிலையில் மன உளைச்சலில் இருந்து மீண்டு வர முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது மன வேதனையை தருகிறது.

அவனுக்கு காரியங்களை முடித்து விட்டு 2 நாட்களில் தந்தை செல்வசேகரும் தன் உயிரை விட்டிருக்கிறார். இது அவரது குடும்பத்தாருக்கும் இது பற்றி ஊடகங்களில் தெரிந்து கொண்டவர்களும் அதிர்ந்துள்ளனர்.

மகன் நன்கு படிக்க வேண்டும்; மருத்துவராக வேண்டும் என கனவு கண்டவர்; அதற்கு தேவையான குறைந்தபட்ச தகுதியே +2 படிப்பும் ‘நீட்’ பரீட்சையும் என்பது தான் உண்மை.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு படிக்க வேண்டிய பல அறிவார்ந்த பாடங்களும் சந்திக்க வேண்டிய கடினமான பரீட்சைகளுக்கும் தயாராக இருக்கிறானா? என்பதை பரிச்சித்து பார்க்கும் படலத்திலேயே மனம் சோர்ந்து துவண்டு விட்டது ஏன்? இப்படி தைரியமின்றி இருக்கும் மனநிலையில் பிற்காலத்தில் நல்ல மருத்துவராக உயரும் தகுதிகளை பெற்று இருப்பாரா?

‘நீட்’ பரீட்சை வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு விவாதம் அரசியல் களத்தில் அரசியல்வாதிகள் உரிய முடிவு எடுக்கட்டும்.

ஆனால் பள்ளிப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ உயர் படிப்பும் பொறியியல் உயர் படிப்பும் ஒரு மாணவருக்கு சாத்தியம் என்பதை மறந்து விடக் கூடாது.

என் பக்கத்து வீட்டுக்காரர் தங்கள் பிள்ளைகளை மருத்துவராகி விட்டாரே. அல்லது பொறியியல் படித்து நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறாரே என்று பார்த்து அதையே தங்களது பிள்ளைகள் மீது திணிப்பது இனியும் தொடரக் கூடாது.

என்ன படிக்கலாம்? என்ற கேள்விக்கு பண வசதியும் ஆசைகளும் மட்டுமா இறுதி முடிவு எடுக்கக் காரணமாக இருக்க வேண்டும்?

அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் மாற்றங்களில் மிகப்பெரிய பங்காற்றலில் இன்று கல்லூரியில் காலடி எடுத்து வைக்க இருக்கும் மாணவர்களே இருப்பார்கள். என்ன படிப்பு படித்து இருந்தாலும் அந்தக் கட்டத்தில் தற்சமயம் உள்ள நிதி வசதிகளை விட அதிகமாகவே சம்பாதிப்பார்கள் என்பதில் சந்தேகமே தேவையில்லை!

இன்றைய தலைமுறை கையில் பைக்கை வாங்கிய கையோடு அதன் மாதாந்திர கடன் திரும்பத் தருவதை பாரமாகவின்றி, தங்களது கடமையாக ஏற்று அதைப் பெற்றோரிடம் தெரிவித்து சம்பாதித்து திரும்ப தருபவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆக குறைந்தபட்ச வருவாய் உறுதியாகி விட்ட சமுதாய சூழலில் தங்களுக்கு பிடித்தமான துறையில் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்க குறைந்தபட்சம் பட்டதாரி படிப்பை முடித்திருக்கும் வயதை எட்ட வேண்டும்.

ஆனால் பள்ளிப் பருவத்திலேயே நீ மருத்துவர் நீ பொறியியல் நிபுணர், நீ பட்டய கணக்காளர் என வர்ணித்து படிக்க வைத்து வருவதும் அப்படி படித்து பட்டம் பெற்றால் தான் நீ வெற்றி பெற்றவனாக மதிக்கப்படுவாய் என அறிவுறுத்தி வளர்க்கப்படுகிறார்கள்.

விளையாட்டு, ஓவிய துறைகளில், கலை பண்பாட்டில் சாதிக்க தகுதி பெற்றவர்களை எப்படி மருத்துவராகவும் பொறியாளராகவும் சாதிக்க முடியும்?

பல்துறைகளில் விட்டவர்கள் நிச்சயம் உண்டு. அதை தங்கள் பிள்ளைகளிடம் பெருவாரியான பெற்றோர்கள் நம்பிக்கையுடன் இருப்பது அவர்களது பாசத்தினால் வரும் வெளிப்பாடு! உண்மையில் அவர்களது பிள்ளை எதில் நிபுணராக வருவார்? என்பதை பற்றி அக்கறையின்றி இனியும் இருக்கக் கூடாது.

தங்களின் பிள்ளைகளின் பலம், பலவீனங்களை தெரிந்து கொண்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்காமல் தங்களது ஆசைகளுக்காக மருத்துவ படிப்பையோ, பொறியியல் படிப்பையோ திணிப்பது சரியா?

ஒருவர் தன் வல்லமையை புரிந்து கொண்டுதானே ஆடுகளத்தை தேர்வு செய்து கால் பதிக்க வேண்டும். நல்ல கிரிக்கெட் வீரர் திடீரென நீச்சல் குளத்தில் குதித்து போட்டியில் ஜெயிக்க முடியாது அல்லவா?

பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒரு முறை தனியாக மனம் விட்டு பேசி தங்கள் பிள்ளைகளின் இலக்குகளை நிர்ணயிக்க சந்தர்ப்பம் உருவாக்கப்பட வேண்டும்.

பள்ளிகளின் அருகாமையில் உள்ள கல்வியாளர்கள், சமூக நல விரும்பிகள் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டு இது போன்ற கலந்துரையாடலில் பங்கேற்க வைத்து ஆலோசனைகள் வழங்க வைக்கலாமே!

ஒரு மாணவனுக்கு அதிக உற்சாகத்தை தரும் படிப்புத் துறையை ஆசிரியர் தெரிந்து கொள்ளத் தேவையான யுக்திகள் பெற்றவராக இருக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பயிற்சிகள் தரப்பட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

மருத்துவரான பிறகும் பொறியாளர்களும் தொடர் கல்வி அதாவது Continuing Education அவசியத்தை உணர்ந்து அதை பின்பற்றுகிறார்கள், அதை நேரமின்மை காரணமாக புறம் தள்ளி விட்டால் தொடர்ச்சியான தொழில் முறை வளர்ச்சி பாதிக்கும்.

இதுபோன்ற தொடர் கல்வியின் ஒரு அங்கமாக மேல் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்திட புலமையை ஆசிரியர்கள் பெற வைப்பது தான் இன்றைய மத்திய – மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

அண்ணா வழியில் திமுக ஆட்சியை ‘திராவிட மாடலாக’ அறிவித்து அரவணைத்து நல்லாட்சியை வழங்கி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாவின் முக்கிய கூற்றான ‘ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்’ என்பதை மறவாமல் ஆசிரியர்களின் ஏற்றத்திற்கு பல்வேறு வசதிகளை தந்ததுடன் நின்று விடாமல் சமுதாய சிற்பிகளாக என்றும் செயல்பட சமுதாய மறுமலர்ச்சியின் முக்கிய பங்காற்றும் பொறுப்பில் இருக்கும் அவர்களின் ஞானம் , அறிவு வளர்ச்சிக்கும் நல்ல செயல் திட்டத்தை உருவாக்கி அறிவித்தால் நல்லது.

‘நீட்’ அரசியலைத் தன் அரசியல் புலமையால் எதிர் கொண்டு நல்ல முடிவுகளை எடுக்கட்டும். ஆனால் அதுவரை மாணவர்களின் வளர்ச்சி தடைபடாது இருப்பதிலும் கவனம் வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும். எதிர்கால வளர்ச்சிகளை உறுதி செய்ய வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *