நாடும் நடப்பும்

உயர் தொழில்நுட்ப புரட்சியில் ‘இந்தியாவிலேயே தயாரிப்பு’


ஆர். முத்துக்குமார்


அலுமினிய உலோகத் துண்டிலிருந்து ஆகாய விமானம் வரை தயாரிக்க டாடா நிறுவனம் தயாராகி விட்டது!

இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ-748 ரக விமானங்கள் காலாவதியானதால் அதன் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து சி-295 ரக விமானங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 16 விமானங்களை ஏர் பஸ் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள செவிலே எனுமிடத்தில் தயாரித்து அளிக்கும். எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் கட்டுமானம் செய்து அளிக்கும். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் (டிஏஎஸ்எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனம் கூட்டாக தயாரித்து விமானங்களை அளிக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதைப் பாராட்டியுள்ள ரத்தன் டாடா – இதனால் விமான தயாரிப்பு துறையில் இந்தியா புதிய இலக்குகளை எட்ட வழி ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத் தன்மை கொண்ட சி-295 விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. மேலும் விமானப் படையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இது இந்தியாவில் தயாரிக்கப்படுவது விமான கட்டுமானத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் 15 ஆயிரம் திறன் மிகு பணியாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் என்று ஏர்பஸ் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் ஷோல்ஹோர்ன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமான

‘இந்தியாவிலேயே தயாரிப்பு’ புது உத்வேகத்தை இந்த ஒப்பந்தம் தருகிறது. இப்படிப்பட்ட உயர் ரக தயாரிப்புகளில் நமது பொறியாளர்கள் நம் மண்ணிலேயே அனுபவம் பெற ஆரம்பித்து விட்டால் அது உயர்தர தொழில்நுட்ப புரட்சியை நம் நாட்டில் வித்திடும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *