ஆர் முத்துக்குமார்
தமிழகம் பத்தாம் நூற்றாண்டின் போது சோழர் ஆட்சி காலத்தில் நமது செல்வ சிறப்புகள் உலகமே அதிசயித்துப் பார்த்த ஒன்றாகும்! இன்று கல்வி துறையில் தமிழக அரசு செய்து கொண்டு இருக்கும் சாதனை அதையும் மிஞ்சும் சாதனையாகும்.
‘‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு; பல்விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’’ என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதி. அதை மெய்பித்திக் கொண்டு இருக்கிறது அதன் தலைநகர் சென்னை என்பதால் கல்வித்துறையில் தலைநிமிர்ந்து இருப்பது பெருமை சேர்க்கிறது!
சென்னைக்கு உள்ள பல பெருமைகளில் கல்வி கட்டுமானத்தில் செய்து இருக்கும் சாதனை அபாரமானது,
தரமான உயர் கல்விக்கான முகமாக சென்னை இருப்பதுதான் உண்மை.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 12-ம் தேதி (12.4.2024) வெளியிடப்பட்டது.
கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கல்வி நிறுவனம் சென்னை ஐஐடி. இந்த கல்வி நிறுவனம் 2019 முதல் தொடர்ந்து இந்த பிரிவில் முதலிடம் பிடித்து வருகிறது.
இந்த பிரிவில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ள கல்வி நிறுவனங்களில் 8 கல்வி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
இந்த பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 20வது இடத்தையும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 21வது இடத்தையும் சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 22வது இடத்தையும் சென்னை பல்கலைக்கழகம் 64வது இடத்தையும் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 85வது இடத்தையும் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 91வது இடத்தையும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 96வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் முதல் 100 இடங்களில் 8 உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள நாட்டின் ஒரே மாநகரம் சென்னைதான். இந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் 18 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளில் தமிழகம் 37 கல்லூரிகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் சென்னை மட்டும் 9 கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
லயோலா கல்லூரி 8வது இடத்தையும் மாநில கல்லூரி 13வது இடத்தையும் சென்னை கிறிஸ்தவ கல்லூரி 14வது இடத்தையும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி 30வது இடத்தையும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி 67வது இடத்தையும் ராணி மேரி கல்லூரி 71வது இடத்தையும் சமூக பணிக்கான சென்னை பள்ளி 73வது இடத்தையும் எத்திராஜ் கல்லூரி 79வது இடத்தையும் குருநானக் கல்லூரி 89வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆய்வு கல்வி நிறுவனங்கள் பிரிவில் நாட்டின் முதல் 50 நிறுவனங்களில் தமிழ்நாடு 9 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில் சென்னை 4 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. சென்னை ஐஐடி 2வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் 17வது இடத்தையும் சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 20வது இடத்தையும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 24வது இடத்தையும் பிடித்துள்ளன.
நாட்டின் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு 14 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இதில் சென்னை அதிகபட்சமாக 6 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. சென்னை ஐஐடி 1வது இடத்தையும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 13வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தையும் சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 53வது இடத்தையும் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 66வது இடத்தையும் வேல்டெக் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 86வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலாண்மை படிப்பு பிரிவில் நாட்டின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு 11 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில் சென்னை 5 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பிரிவில் தேசிய அளவில் சென்னை ஐஐடி 16வது இடத்தையும் கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனம் 34வது இடத்தையும் லயோலா வணிக மேலாண்மை நிறுவனம் 66வது இடத்தையும் அண்ணா பல்கலைழக்கழகம் 69வது இடத்தையும் சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 74வது இடத்தையும் பிடித்துள்ளன.
மருந்தியல் (Pharmacy) படிப்பு பிரிவில் தேசிய அளவில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 12 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 5 சென்னையில் உள்ளன. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 11வது இடத்தையும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 31வது இடத்தையும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆய்வு நிறுவனம் 64வது இடத்தையும் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் கல்லூரி 78வது இடத்தையும்,பி.எஸ். அப்துர் ரகுமான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 84வது இடத்தையும் பிடித்துள்ளன.
மருத்துவம் (Medical): நாட்டின் சிறந்த 50 மருத்துவ கல்வி நிறுவனங்களில் 7 தமிழகத்தில் உள்ளன. இதில், 4 சென்னையில் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை தேசிய அளவில் 10வது இடத்தையும் சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 12வது இடத்தையும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 18வது இடத்தையும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 20வது இடத்தையும் பிடித்துள்ளன.
பல் மருத்துவம் (Dental): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்த 40 கல்வி நிறுவனங்களில் தமிழகம் 9 கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் சென்னை மட்டுமே 6 கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இதில் சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் தேசிய அளவில் 1வது இடத்தையும் எஸ்ஆர்எம் பல்மருத்துவக் கல்லூரி 7வது இடத்தையும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 10வது இடத்தையும், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 13வது இடத்தையும் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 20வது இடத்தையும் எஸ்ஆர்எம் காட்டாங்கொளத்தூர் பல்மருத்துவக் கல்லூரி 32வது இடத்தையும் பிடித்துள்ளன.
சட்டம் (Law): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் முதல் 40 கல்வி நிறுவனங்களில் தமிழகம் 2 கல்வி நிறுவனங்களை மட்டுமே கொண்டுள்ளது. அதில் ஒன்று சென்னையில் உள்ளது.
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் (Architecture and Planning): இந்தப் பிரிவில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் 40 கல்வி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 4 நிறுவனங்கள் உள்ளன. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 11வது இடத்தையும் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 22வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் 34வது இடத்தையும் பி.எஸ். அப்துர் ரகுமான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 40 வது இடத்தையும் பிடித்துள்ளன.
இவை தவிர இந்திய கடல்சார் பல்கலைழக்கழகம், கணித அறிவியல் நிறுவனம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் இணைய கல்விக்கழகம், நுண்கலைக் கல்லூரி , அரசினர் ஓவியக்கல்லூரி, தக்சின் பாரத் இந்தி பிரச்சார சபா , கலாச்சேத்ரா ஃபவுண்டேஷன் என பல்வேறு தேசிய கல்வி நிறுவனங்கள் சென்னை மாநகரின் அடையாளங்கள் ஆகும்.