போஸ்டர் செய்தி

உயர் கல்வித் துறைக்கு ரூ.186 கோடி கட்டிடங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்தார்

Spread the love

சென்னை, ஜூன் 25–

உயர் கல்வித் துறைக்கு ரூ.186 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (24–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல வகை தொழில் நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 176 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழகத்தை அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவ மாணவிகள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையிலும், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர் கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர் கல்வி கற்பதற்கு ஏதுவாக கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளை துவக்கியுள்ளது. இதன் மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 48.6 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக் கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி

மேலும், கிருஷ்ணகிரி – அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பர்கூர் – அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கட்டப்பட்டுள்ள 35 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வகக் கட்டடங்கள்;

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

வேலூர் மாவட்டம், நரியனேரி – திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்;

திருவண்ணாமலை – அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், நூலகம், கழிவறைக் கட்டடங்கள் மற்றும் வடிகாலுடன் கூடிய அணுகு சாலை;

சென்னை சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வியாசர்பாடி – டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஜார்ஜ் டவுன் – பாரதி மகளிர் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 45 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டடங்கள்; சேப்பாக்கம் – மாநிலக் கல்லூரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 360 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 90 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக்கட்டடம்;

கோவை அரசு பொறியியல் கல்லூரி

ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள் பணிமனை மற்றும் இதரக் கட்டடங்கள்;

கோயம்புத்தூர் – அரசு பொறியியல் கல்லூரியில் 15 கோடியே 50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய விடுதிக் கட்டடங்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 48 குடியிருப்புகள் மற்றும் கலந்தாய்வுக் கூடம்; மேட்டுப்பாளையம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், கருத்தரங்கக் கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள்;

கோயம்புத்தூர் – பாரதியார் பல்கலைக்கழகத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மைய கருவி மயமாக்கல் வசதிகள், நீச்சல் குளம், அறிவியல் ஆய்வகம் மற்றும் மகளிர் விடுதிகளுக்கான பொது உணவுக்கூடம்;

அவினாசி அரசு கலைக் கல்லூரி

திருப்பூர் மாவட்டம் – அவினாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்கள்; திருப்பூர் – சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டடங்கள்;

திருவாரூர் – திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கும்பகோணம் – அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு – அரசு கல்வியியல் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 33 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டடங்கள்;

கடலூர் மாவட்டம், சிதம்பரம் – அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் – பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 27 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டடங்கள்;

நாமக்கல் – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் – நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குமாரபாளையம் – அரசு கல்வியியல் கல்லூரியில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 40 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகக் கட்டடங்கள்;

திருச்சி – பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், முசிறி – அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டடங்கள்; திருச்சி – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக் கட்டடம் மற்றும் மைய கருவிமயமாக்கல் ஆய்வகக் கட்டடம்;

குளித்தலை அரசு கலைக் கல்லூரி

கரூர் மாவட்டம், குளித்தலை – அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரூர் – அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 26 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டடங்கள்;

திண்டுக்கல் – எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நிலக்கோட்டை – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 30 கூடுதல்வகுப்பறைகள்மற்றும் 6 ஆய்வகக் கட்டடங்கள்; மதுரை – ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மேலூர் – அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 25 கூடுதல் வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் கழிவறைக் கட்டடங்கள்;

சிவகங்கை – ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை – அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பூலான்குறிச்சி – வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

காரைக்குடி – அழகப்பா கலைக் கல்லூரியில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 43 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகக் கட்டடங்கள்; காரைக்குடி – அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 1 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டடங்கள்;

ராமநாதபுரம் – சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் – புத்தூர், சீனிவாசா சுப்புராய பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணி மனைக் கட்டடம்;

என மொத்தம் 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில் நுட்ப கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன், கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) சி.ஜோதி வெங்கடேசுவரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *