வாழ்வியல்

உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மோசமான விளைவுகள்

உயர் இரத்த அழுத்தத்தினால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிப்படையும் மனிதனின் உள் உறுப்புகளில் முக்கியமான ஒன்று இதயம் தான். கொழுப்பின் மூலம் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து இரத்த நாளங்களின் குறுக்களவு மிகவும் சுருங்கி விடுகிறது. இதனால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினால் இதயம் செயலிழக்க நேரிடலாம். அல்லது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வரவும் நேரிடலாம்.

நாம் அனைவரும் மூளையின் கட்டளைக்கு ஏற்பத் தான் செயல்படுகிறோம். நம் கை, கால்கள் முதல் அதிலும் குறிப்பாக வெளிப்புற உறுப்புகல் அனைத்தும் மூளையின் கட்டளையை ஏற்று தான் செயல் படுகின்றன. இந்நிலையில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தத்தினால் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களால் ஏற்படும் இரத்த அழுத்தம் தாங்க முடியாமல் இரத்த நாளம் உடைந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதனால் மூளையில் சில பகுதிகளில் இரத்தம் உறைகிறது.

இந்த இரத்த உறைதலினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பகுதிக‌ளுக்கும் அதிலும் குறிப்பாகக் கை, கால்களுக்குச் செல்லும் நரம்புக‌ளின் செயல்திறன் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்து முடங்கிப் போகும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு கை, கால்கள் செயலிழப்பதன் மற்றொரு பெயர்தான் வாதம் அல்லது பக்கவாதம். இதன் மூலம் நோயாளி படுத்தப் படுக்கையாகும் நிலையும் ஏற்படுகிறது.

அதிக இரத்த அழுத்தத்தின் அடுத்த இலக்கு மூளை, இதயத்தைத் தொடர்ந்து சிறுநீரகம் தான். இதற்கும் காரணம் இரத்தக் கொதிப்பு தான். இரத்தக் கொழுப்பு இருப்பது தெரியாமல் விட்டுவிட்டால் அது சிறுநீரகத்தைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்படும் திறன் குறைந்து இறுதியில் சிறுநீரகம் தன் செயல்படும் தன்மையை இழந்து விடும் நிலை உருவாகும். அதே சமயம் சிறுநீரகத்தின் செயல்திற‌ன் வேறு சில காரணங்களாலும் பாதிக்கப் படுகிறது. இவ்வாறு சிறுநீரகம் பாதிக்கப் படும்போது அது இரத்தக் கொதிப்பு உருவாகும் வாய்ப்பை அதிகப் படுத்துகிறது. ஒருவர் நீண்ட காலம் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனது சிறுநீரகங்களின் செயல்படும் திறனைத் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி சோதித்து அறிந்து கொள்வது கட்டாயமான ஒன்று ஆகும்.

பார்வை இழப்பு:

இரத்த அழுத்த அதிகரிப்பின் மூலம் ஏற்படும் மற்றுமொரு விளைவு தான் பார்வை இழப்பு ஆகும். நம் விழிக்கோளத்தின் பின்புறம் ஏராளமான இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை மூளையோடு தொடர்புடையவை ஆகும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தத்தினால் இரத்தக் குழாய்களில் ஒருவித வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பினால் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இதன் மூலம் பார்வை குறைவு மற்றும் குருட்டுத் தன்மை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மூளை செயலிழப்பது நிரந்தரமான பார்வை இழப்புக்கு இட்டுச் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *