சிறுகதை

உயர்வு | ராஜா செல்லமுத்து

“நான் எப்படியிருக்கேன்… ராஜேஷ்”

“நல்லாயிருக்கீங்க”

“என்னோட முடி எப்படி இருக்கு?

“நல்லா இருக்கே”

“எவ்வளவு வளந்திருக்கு”

“பரவாயில்ல”

“கொஞ்சம் அதிகமாவே வளந்திருக்குன்னு நெனைக்கிறேன்’’.

“அப்பிடியா?”

“ஆமா …ராஜேஷ் எனக்கு அப்படி தான் தெரியுது.

“சரி ஹேர்கட்பண்ணுங்க’’,

“ஆமா அப்படித்தான் நினைக்கிறேன்’’.

முடிவெட்டுறதுக்கு இவ்வளவு யோசனையா?

என்ன ராஜேஷ் இவ்வளவு சாதாரணமா சொல்ற, முடிவெட்டுறது பெரிய விசயமில்லையா?

“ம்”

“நீ எங்க முடிவெட்டுவ?’’

“சலூன்ல”

“பெறகு நானென்ன வீட்டுலயா வெட்டுவேன் .சொல்லிக்கொண்டே கடகடவெனச் சிரித்தான் சரவணன் .

‘‘முடிவெட்டுறது என்னமோ பெரிய விசயமா பேசிட்டு இருக்கீங்க”

என்ற ராஜேஷின் கேள்விக்கு உடனே பதில் சொன்னான் சரவணன்,

“நான் 1988 ல இருந்து ஒரே கடையில தான் முடிவெட்டுட்டு இருக்கேன்.

“அப்படியா ?”

“நான் முதன் முதலா முடி வெட்டும் போது ஒரே ஒரு சேர் மட்டும் தான் இருந்தது. ஆனா, இன்னைக்கு வளர்ச்சி எப்படி இருக்குன்னு தெரியுமா? என்ற சரவணனின் பேச்சு வியப்பாய் இருந்தது.

“என்ன சொல்ற சரவணா ”

“ஆமா ராஜேஷ், நீ வந்து பாரு, என்று தன் டூவிலரில் அவனை உட்கார வைத்துக் கொண்டு சலூன் கடைக்குக் கூட்டிப்போனான். போகும்போதே இருவரும் பேசிக் கொண்டே சென்றனர்.

“ராஜேஷ், நீ எந்த கடையில முடி வெட்டுற

“அப்படின்னு எந்தக்கடையும் இல்ல. எங்க கெடைக்குதோ அங்க தான்,

“ஓ, கெடைக்கிற எடத்தில் வெட்டிக்கிறீங்க அப்படித்தான’’

“ஆமா”

“ஏன் நீ ஒரே கடையில வெட்டக் கூடாது”

“ஒரே கடையிலயா?

“ஆமா” நானெல்லாம் ஒரே கடையில தான வெட்டுறேன்.

நம்ம டேஸ்ட்டு அதான் சரி.’’,

“ஓ”

“ஆமா ராஜேஷ் என்று பேசிக் கொண்டே இருவரும் சலூன் கடைக்குச் சென்றனர்.

அது கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. செருப்புகள் வெளியே குவிந்து கிடந்தன, அது ஏ/சி போடப்பட்ட அறையாகவே இருந்தது.

சரவணனா வா, ஒக்காரு. இன்னும் நாலு பேரு தான் இருக்காங்க. அவங்க போகவும் நீ வெட்டலாம் என்று அந்தச் சலூன் கடை முதலாளி சொல்ல, சரி நீங்க பாருங்க என்று சொல்லிய சரவணனும் ராஜேஷ்ம் சலூனின் வௌியே காத்திருந்தனர்.

சலூன் கடையைப் பாத்துப் பிரமித்தார்கள்,

யூனிபார்ம் போட்ட ஊழியர்கள் , கண்ணாடி, ஏ/சி, வேலைக்கு ஆட்கள்.

ஆனால் நான் பாரு அப்ப இருந்து அப்படியே தான் இருக்கேன்.

உழைப்பு உழைப்புன்னு சொல்றாங்க. நானும் தான் ஒழைச்சேன் இன்னும் உருப்படல ஆனா இதைப் பாரு. எப்படி ஒசந்து நிக்குதுன்னு

சரவணன் நாம எல்லாரும் உழைக்கத் தான் செய்றோம்,

ஆனா எப்படி எதுக்காக எப்படி உழைக்கிறோம்ங்கிறது தான் முக்கியம் நாம விழலுக்கு உழைக்கிறோமோ? விதைக்கு உழைக்குறோமா? அப்படிங்கிறது ரொம்ப முக்கியம் சரவணன். தடம் பார்த்து நடக்கணும். எடம் பார்த்து நிக்கணும். சிறப்பு பாத்து தான் உழைக்கணும். அப்பதான் நாம முன்னேற முடியும். இல்லன்னுவையி அவ்வளவு தான். வருசம் பூரா உழைச்சாலும் உழைப்பு தான் மிஞ்சும் என்று ராஜேஷ் சொல்ல , சரவணனுக்கு அது சுரீரென்றது

“சரவணா வா, முடிஞ்சிருச்சு, என்று சலூன் கடைக்காரர் கூப்பிட இருவரும் உள்ளே சென்றார்கள்.

சலூன் கடைக்குள் சென்றதும் சுற்றிப் பார்த்தார்கள். அது முப்பரிமான கண்ணாடி போல எல்லாப் பக்கமும் அவர்கள் பிம்பம் காட்டி நின்றது. இதைப்பார்த்த இருவரின் பிரமிப்பு அடங்கவே இல்ல.

இருவரின் முகக்கண்ணாடி வழியாக அவர்களின் இதயக்கண்ணாடியிலிருந்த அழுக்கையும் பொறாமைத்தீயையும் இனம் கண்டுகொண்ட சலூன் கடைக்காரர் அமைதியாகச் சொன்னார்: ‘‘ தான் என்கிற அகந்தை, சுயநல உணர்வு, பொறாமையை எண்ணத்திலிருந்தும் பேச்சிலிருந்தும் செயலிருந்தும் முழுமையாக அகற்றினால்தான் நீங்கள் உழைக்கும் உழைப்பு உங்களுக்கு  நல்லபலன் தரும்.  என் வாடிக்கையாளரின் விருப்பத்தை அன்பு , நேர்மை நாணயமாக நான் நிறைவேற்றுவதால்த்தான் இந்த வளர்ச்சி. இதுவே உழைப்பின் வெற்றி’’ .

இதைக்கேட்டதும்….

ராஜேஷும் சரவணனும் வெட்கித் தலைகுனிந்து போனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *