போஸ்டர் செய்தி

உயர்மின் கோபுர விவகாரம்: சட்டசபையில் அண்ணா தி.மு.க. – தி.மு.க. காரசார விவாதம்

Spread the love

சென்னை, ஜூலை 19–

சட்டசபையில் உயர்மின் கோபுர விவகாரம் தொடர்பாக அண்ணா தி.மு.க. – தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தி.மு.க. உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பின்னர், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவைக்கு ஒரு தகவலை தெரிவிப்பதாக கூறினார்.

அப்போது அவர் கூறும்போது, உயர்மின் கோபுரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஒரு தகவலை தெரிவித்திருந்தார். மதுரை, இலங்கை இடையே கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் உயர்மின் கோபுரத்திற்கு பதிலாக மாற்று வழியை கண்டறியவேண்டும் என்றார்.

ஆனால் தற்போது, தொழில்நுட்ப நிபுணர்கள் மதுரை, இலங்கை இடையே கேபிள் மூலமாக மின்சாரத்தை கொண்டு செல்ல முடியாது என தெரிவித்து விட்டனர். கோபுரம் அமைத்து தான் கொண்டு செல்ல முடியும் என அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்போது உயர்மின் கோபுரத்திற்கு எதிராக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த செய்கிறார்கள். உயர்மின் கோபுர திட்டம் நாட்டு நலனுக்கு அவசியமானது. இந்த விஷயத்தில் விவசாயிகள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறார்கள். கூடுதலாக நஷ்ட ஈடு கேட்கிறார்கள். போராட்டம் காரணமாக தமிழகத்தில் தான் பாதிப்பு ஏற்படும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை தூண்டாமல் இருக்க எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை

அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், அமைச்சர் இங்கு சில விளக்கங்களை சொல்லியிருக்கிறார். அவர் எங்களை சமாதானப்படுத்துவதைவிட, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சமாதானப்படுத்த வேண்டும். அவர்களை அழைத்து பேச வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கையில், அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளை போராட தூண்டுகிறார்கள் என்றார்.

அமைச்சர் தங்கமணி பேசிக்கொண்டிருக்கும்போது, தி.மு.க. உறுப்பினர் செந்தில்பாலாஜி இருக்கையில் இருந்து எழுந்து வேகமாக கத்தி பேசினார். அமைச்சரை பேசவிடாமல் இடையூறு செய்தார். இதற்கு அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஒரு விளக்கத்தை தந்திருக்கிறார், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதில் அளிக்கிறார். ஆனால் அமைச்சர் பேசும்போது குறுக்கிட்டு பேசுவது, சரியானது அல்ல. இது அவையின் மரபை மீறிய செயலாகும் என்றார்.

கையை தூக்கினால் வாய்ப்பு வழங்கப்படும்

அப்போது சபாநாயகர் தனபால் பேசுகையில், அமைச்சர் ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதற்கு பதில் அளிக்க எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது உறுப்பினர் குறுக்கிட்டு பேசுவது தவறானதாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது. நீங்கள் பேச விரும்பினால் கையை தூக்குங்கள். அப்படி செய்தால், அதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

அப்போது மு.க.ஸ்டாலின் கூறும்போது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை தூண்டிவிடுவதாக பேசியதற்கு தான் செந்தில் பாலாஜி பதில் அளித்தார் என்றார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்து கொண்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் பேசி முடித்தபின் தான் அடுத்த உறுப்பினர்கள் பேச வேண்டும். தரகுறைவாக பேசுவது தவறான ஒன்றாகும். அது முறையானது அல்ல. எதிவாக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி கேட்டு தான் பேச வேண்டும். கையை நீட்டி பேசுவது தவறு என்றார்.

அப்போது சபாநாயகர் தனபால் கூறும்போது, அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது குறுக்கிட்டு பேசுவது தவறு. திடீரென குறுக்கிட்டு பேசுவது சரியான மரபு அல்ல. கையை உயர்த்தி வாய்ப்பு கேட்டிருந்தால், அனுமதி கொடுத்திருப்பேன். இடையில் குறுக்கிட்டு பேசுவது அவையின் மரபுக்கு ஏற்கதக்கது அல்ல. எனவே உறுப்பினர் செந்தில்பாலாஜியை எச்சரிக்கிறேன் என்றார்.

அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, அமைச்சரின் பதிலை மனபூர்வமாக ஏற்கிறேன். அவர் பொதுவாக யாரையும் சீண்டும் வகையில் பேசுபவர் அல்ல. எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என்று கூறியதால் தான், எங்களது உறுப்பினர் பேசினார். வாய்ப்பு கேட்காமல் குறுக்கிட்டு பேசியது வருந்ததக்கது தான் என்றார்.

விவசாயிகளை பீதி அடைய செய்கிறார்

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்கோபுரத்திற்கு அடியில் நின்று கொண்டு டியூப் லைட்டை பிடித்து காட்டுகிறார். இது விவசாயிகளை பீதியடைய செய்யும் செயல் இல்லையா? மின்சாரத்தை கொண்டு செல்ல மின்கோபுரங்கள் அவசியம். மின்கோபுரம் இருந்தால் தான், மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒரு மின்கோபுரத்திற்கு அடியில் டியூப் லைட்டை எரிய வைத்து பீதி அடைய செய்கிறார். தீர்வு காண்பதற்கு பதிலாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றார்.

அதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி பேசும்போது, நான் இதை சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதை பதிவு செய்து வந்து ஒருவர் என்னிடம் காட்டினார். விவசாயிகளை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். உங்களது ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரம் அடியில் நின்று கொண்டு டியூப் லைட்டை எரிய வைக்கிறார். இதனால் நாட்டு நலன் பாதிக்கும் என்றார்.

அதை தொடர்ந்து பல தி.மு.க. உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டனர். ஆனால் இத்துடன் பிரச்சினை முடிந்துவிட்டது. வேறு யாரையும் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *