செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.24–

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை, உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும். நமது தலைமை நீதியரசர் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் எடுத்துக் கூற முடியும்.

நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும் சுதந்திரமாகச் செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது.

64 நீதிபதிகள் நியமனம்

இப்போது நான் துணை நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் மற்றும் அதிகரித்து வரும் வழக்குகளை சமாளிக்க மாநிலத்தில் புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் பற்றிய விவரங்களைப் பட்டியலிடுகிறேன்.

* கடந்த ஆண்டு மட்டும் சார்நிலை நீதிமன்றங்களுக்கு 64 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

* கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 வணிகவியல் நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிபதி நிலையில் அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டன.

* 3 வணிகவியல் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி நிலையில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

* திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் புதியதாக சார்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

* நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்திற்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

* வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது.

* காரைக்குடியில் ஒரு சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு முன்னெடுப்புகளை நீதித்துறைக்கு தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

* நீதித்துறையின் உயிரோட்டமாக விளங்கும் வழக்கறிஞர்களின் நலன் காப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூபாய் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும்.

* சட்டமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான கடந்த 14.4.2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இயங்கிவரும் பல்வேறு நீதிமன்றங்களை ஒரு புதிய 9 மாடி கட்டடத்தில் அமைக்கக் கூடிய வகையில் 20 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20-.4.-2022 அன்று 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அந்தக் கட்டடம் அமைந்தால் நீதித்துறை உட்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.

இந்தத் தருணத்தில், நீதித் துறையே முழுமையாக இங்கு வந்து வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகின்றேன்.

உயர்நீதிமன்றத்தில்

தமிழ் வழக்காடு மொழி

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை இங்கு வருகை புரிந்துள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசருக்கு முன்பாக நம் அனைவரின் சார்பாக நான் வைத்திருக்கின்றேன். நம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர், தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்களாக செயலாற்றும். நீதியரசர்களும் அதற்குத் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் ஆட்சியாக, சமூகநீதி ஆட்சியாக, நீதிநெறிமுறை கொண்ட ஆட்சியாக தமிழ்நாட்டு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இத்தகைய ஆட்சியில், நீதித்துறையினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் எந்தவிதத் தாமதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்கு ஒரே காரணம், மக்களுக்கான நீதியே மகத்தானது என்பதோடு, கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற அடித்தளத்தில் செயல்பட்டு வருபவர்கள் நாங்கள். இத்தகைய நெறிமுறைகளே எங்களை வழிநடத்துகிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை ஐகோர்ட்டும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும் இணைந்து நடத்திய இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, பி.என்.பிரகாஷ், எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட நீதிபதிகள், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், காஷ்மீர் ஐகோர்ட் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், சென்னை ஐகோர்ட் அரசு அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம், பார் கவுன்சில் சேர்மேன் பி.எஸ். அமல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அனைவரையும் ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வரவேற்று பேசினார். இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.