ஆர்.முத்துக்குமார்
இந்திய பொருளாதாரத்தின் அதிமுக்கிய அங்கமாக இருக்கும் போக்குவரத்து துறையில் பெரிய முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பது ரெயில்வே துறையில் என்பதை அறிவோம். ஆனால் லாபகரமாக இயங்குகிறதா? என்று உற்று பார்த்தால் நஷ்டத்தில் இயங்குவது தெரிகிறது.
காரணம் ரெயில் பயணிகளுக்கு குறைந்த கட்டண சேவையே இதுவரை குறிக்கோளாக கொண்டு இயங்கிக் கொண்டு இருப்பது தான் உண்மை.
ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் முதியோர் சலுகைகள் அகற்றப்பட்டது. பிற ரெயில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் எல்லாம் விலக்கப்பட்டது. இதன் காரணமாக வருவாய் அதிகரித்து இருக்கும். ஆனால் லாபகரமாக இயங்காது.
முன்பை விட தரமான சேவைகள் வழங்கப்பட்டாலும் ரெயில் பயணிகளுக்கு பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த குறைந்த செலவு பயணம் இப்படி ஆடம்பர செலவாக மாறி வருகிறதே என வருத்தப்பட்டு பேசுகிறார்கள்.
ஏழைகளும் வசதி பெற்றவர்களும் அனுபவிக்கும் ஓர் தளம் ரெயில் சேவைகள் என்ற நிலை அதிகரித்து வருகிறது.
ரெயில் நிலையங்களில் சொகுசான ஓய்வறைகள், ரெயில் பிளாட்பார உணவகங்கள் மட்டுமின்றி இந்த ஓய்வறைகளில் விலை உயர்ந்த உணவு பதார்த்தங்கள் மற்றும் தெகட்ட தெகட்ட சாப்பிட்டு மகிழ
‘பப்பே’ (Buffet) அறுசுவை விருந்து என வழங்கப்பட்டும் வருகிறது. பலர் பிளாட்பாரம் டிக்கெட்டை எடுத்து இந்த உணவகங்களுக்கு வந்து ருசித்து சாப்பிடுவதும் உண்டு.
மேலும் ரெயில்களிலேயும் நமது இருக்கைக்கு பிற உணவகங்களிடம் இருந்து ஆன்லைனில் உணவு ரகங்களை ஆர்டர் தந்தால் ஒரு மணி நேரத்தில் வரக்கூடிய அடுத்த ரெயில் நம் கையில் மணக்க மணக்க தந்து விடுகிறது.
இப்படி பல நவநாகரிக நடைமுறைகள் இதர ரெயில்வே கட்டுமானத்தில் லாபகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதை மேலும் விரிவாக செயல்பட வைக்க பிரதமர் மோடி விவேகத்துடன் பல்முனை வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
வசதி படைத்தவர்கள் விரும்பும் சொகுசான அம்சங்கள் வருவதால் பயணிகளின் டிக்கெட் கட்டணம் அதிகரிக்காது. ஆனால் இதர வசதிகளின் வருவாய் அதிகரிப்பால் சலுகைகள் தொடரும் என்பதும் உறுதியாகும்.
சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சில ரெயில்வே திட்டங்களை தொடக்கி வைத்தார்.
அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 58 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
அம்ருத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 553 நிலையங்களை ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 33 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.
சென்னை கோட்டத்தில் சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, பரங்கிமலை, சூலூர்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் ஈரோடு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், பொம்மிடி, திருப்பத்தூர், சின்ன சேலம், நாமக்கல், கோவை வடக்கு ஆகிய ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் திருவண்ணாமலை, திருவாரூர், விருத்தாசலம், கும்ப கோணம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
மதுரை கோட்டத்தில் பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி ரயில் நிலையங்கள், பாலக்கோடு கோட்டத்தில் பொள்ளாச்சி என தமிழ்நாடு முழுவதும் 33 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் புதுச்சேரியில் மாகே ரயில் நிலையமும் மறுசீரமைக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 1,500 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
இப்படி ரூ. 41,000 கோடி மதிப்பில் 2000 ரெயில் திட்டங்கள் துவங்கியிருப்பதால் ரெயில் நிலையங்களில் ஆடம்பர செலவுகள் அதிகரித்து வருவாய் பெருகும். அத்துடன் ஏழை சாமானியன் விரும்பும் மற்றும் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யும் அம்சங்களும் தொடர வேண்டும் என்பதையும் உறுதி செய்தாக வேண்டும்.
சாமானியன் வெளியே இருந்து அதிக விலையில் குடிநீர் பாட்டில் வாங்கி வரும் நிலை சமீபமாக மாறி ரெயில் நிலைய குடிநீர் பாட்டிலே நல்லாத்தான் இருக்கு என்று நம்பி குறைந்த செலவில் வாங்கி மகிழ்வதைப் பார்க்கிறோம்.
ஆனால் தினக்கூலி சாமானியனும் குடிக்க சுத்தமான குடிநீர் கிடைப்பதும் அவசியமானது என்பது தான் நம் நாட்டின் நிலை என்பதை மறந்து விடக்கூடாது.