செய்திகள்

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சத இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி, அக். 21–

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்திய ஒன்றிய அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என பாரதீய ஜனதா அரசு அறிவித்தது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதற்கு எதிராக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டப் போராட்டம் நடத்தின. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மத்திய அரசு இதனை அமல்படுத்தாமல் இருந்தது. இதற்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தது. இதன் பின்னரே மத்திய அரசு ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது.

இந்த நிலையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சந்திரசூட், விக்ரம்நாத், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த் 7-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றார்.

அடுக்கடுக்கான கேள்வி

இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர். அதாவது, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது? எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது. மேலும் சினோ கமிட்டி அடிப்படையில்தான் உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சொல்கிறது. அந்த சினோ கமிட்டி அறிக்கையை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லையே. அதை ஏன் தாக்கல் செய்யவில்லை?

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. உயர்ஜாதி ஏழைகள் 10 சதவீத இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்பதை எப்படி வரையறை செய்தீர்கள்? உயர்ஜாதி ஏழைகளின் சொத்துகளை கணக்கில் எடுக்காமல், வருமானத்தை மட்டும் எப்படி கணக்கில் எடுக்க முடியும்? ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் இருப்பது போல, உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் உள்ளதா? இத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் 28-ந் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *