சிறுகதை

உன்னத விலை – ராஜா செல்லமுத்து

ஆண்கள், பெண்கள் என்று மாணவர்கள் படிக்கும் கல்லூரியின் அருகில் இருந்தது, மாரிமுத்துவின் உணவு விடுதி.

அங்கு சாப்பாடு முதல் காபி வரை எல்லாம் மலிவான விலை விற்கப்பட்டன. அந்தக் கல்லூரியைச் சுற்றியிருக்கும் கட்டிட தொழிலாளர்கள். தோட்ட தொழிலாளர்கள் இன்னும் அந்த வழியாக வந்து போவாேர்கள் எல்லாம் அந்தக் கடையில் வந்து சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள்.

காரணம் பத்து ரூபாய்க்கு சாப்பாடு. ஐந்து ரூபாய்க்கு புரோட்டா.இரண்டு ரூபாய்க்கு இட்லி என்று ரொம்பவே மலிவாக இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் மாரிமுத்து கடையைப் பற்றி சிலாகித்துக் கொள்வார்கள். அந்த வழியாக காரில் வந்த சுப்பிரமணி அந்தக் கடையில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடையின் வெளியே எழுதி இருக்கும் விலைப் பட்டியலை பார்த்து வியந்து போனது மட்டுமல்லாமல் இந்த கடையில் சாப்பிடலாமா? வேண்டாமா? என்று தன் கார் டிரைவரிடம் கேட்டார்.

சார் விலை மட்டும் தான் குறைவு ஆனா இங்க இருக்கிற ஐட்டமெல்லாம் நல்லா இருக்குன்னு இந்த பக்கம் இருக்கிறவங்க சொல்றாங்க சாப்பிட்டு தான் பார்ப்போமே என்று சொன்னான் கார் டிரைவர்.

அரை மனதாக கடைக்குள் சென்ற சுப்பிரமணி அந்த கடையை நோட்டமிட்டார் .அவ்வளவும் பளிச்சென்று இருந்தது .

இதையெல்லாம் பார்த்த சுப்பிரமணி இங்கே சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்.

இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது இரண்டு பேருக்கும் சுப்பிரமணி கொடுத்த தொகை வெறும் 50 ரூபாயாக இருந்தது.

கல்லாவில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் மாரிமுத்து. அவரிடம் பில்லைக் கொடுத்த சுப்பிரமணி

ஐயா இவ்வளவு குறைவான விலைக்கு விக்கிறீங்க. ஆனா எல்லாம் தரமான பொருளா இருக்கு .எதுக்காக இப்படி செய்றீங்க இங்க இருக்கிற ஹோட்டல், பலசரக்கு கடை இன்னும் எல்லாமே வியாபாரத்த லாப நோக்கத்தோடு செஞ்சிகிட்டு இருக்கும் போது நிச்சயம் உங்களுக்கு இது நஷ்டத்த தான் ஏற்படுத்தும் .எப்படி இது உங்களால செய்ய முடியுது என்று சுப்பிரமணி கேட்டபோது

ஐயா நான் இந்த கடையை லாப நோக்கத்திற்காக நடத்தல.. எல்லாம் ஒரு சேவைக்காக தான் நடத்திட்டிருக்கிறேன்.காரணம் இளமையில் நான் பட்ட கஷ்டம். ஒருவேளை சோறுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கிறேன். நல்ல சாப்பாடு கிடைக்குமா அப்படின்னு ஏங்கி இருக்கேன் என்ன மாதிரி தானே இங்க இருக்க மனுஷங்க நினைச்சிருப்பாங்க இப்ப நான் நல்ல நிலைமையில, நல்ல இடத்தில் இருக்கேன். நான் பட்ட கஷ்டத்தை மத்தவங்க படக்கூடாது. குறைஞ்ச பட்சம் நல்ல உணவையாவது கொடுக்கலாம்னு நினைக்கிறேன். மற்றபடி எனக்கு லாப நோக்கமெல்லாம் எதுவும் வேண்டாம் என்றார் மாரிமுத்து.

மாரிமுத்து பேசுவதை வெறிக்கப் பார்த்தார் சுப்பிரமணி

எதையும் இலவசம்னு போட்டு பாருங்க .இங்க வர்றதுக்கு யோசிப்பாங்க .ஆனா ஒரு சின்ன தொகையை வச்சு நான் வைக்கிறதுனால தான் நீங்க கூட இங்க வந்து சாப்பிடுறீங்க எனக்கு அந்தப் பணம் கூட வேண்டாம் எல்லாருக்கும் இலவசமாக கொடுக்கணும்கிறது தான் என்னுடைய எண்ணம். ஆனா அதுக்கு மரியாதை இல்லாம போயிடும். கடைக்கு யாரும் வரவும் மாட்டாங்க .அதுக்குத்தான் இந்த உன்னத தொகை. இந்த உன்னத வேலைதான் என்ன உயர்ந்தது நான் காலம் உள்ள வரைக்கும் இதையேதான் கடைப்பிடிப்பேன் என் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்லி வச்சிருக்கேன் என்று மாரிமுத்து சொன்னபோது வியப்பின் உச்சிக்கு சென்றார் சுப்பிரமணி.

இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஆளா ?என்று நினைத்து சுப்பிரமணி காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் .

இரவு வரை பயணம் செய்துவிட்டு அவர் சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்தார்.

டிபன் சாப்பிட்டு போயிடலாமா என்று கார் டிரைவரிடம் சொன்னபோது

சரிங்க ஐயா சாப்பிட்டு போயிரலாம் என்று டிரைவர் ஆமோதிக்க

அங்கிருக்கும் ஒரு ஹோட்டலுக்குள் இருவரும் நுழைந்தனர்.

என்ன சாப்பிடுறீங்க? என்று சுப்பிரமணியிடம் வந்தார் வெயிட்டர்.

மெனு கார்டு குடுங்க என்று கேட்டார் சுப்பிரமணி.

மெனு கார்டை வாங்கி பார்த்த சுப்பிரமணிக்கு தலைசுற்றியது.

இரண்டு இட்லி 42 ரூபாய். ஒரு காபி 50 ரூபாய் .ஒரு சாப்பாடு 350 என்று விலைப் பட்டியலைப் பார்த்தபோது அவருக்கு

மாரிமுத்து கடையில் சாப்பிட்ட ஞாபகம் வந்தது .

நிச்சயம் அந்த மனிதர் மனிதராக இருக்க மாட்டார் .லாபம் மட்டுமே நோக்கம் என்று இயங்கும் இந்த உலகத்தில் மாரிமுத்து போன்ற மனிதர்களிடம் தான் இரக்கம் இன்னும் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே அதிக விலையுள்ள அந்த உணவு விடுதியில் மனம் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், சுப்பிரமணியம் அவரின் கார் டிரைவரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *