செய்திகள்

உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் சோமசுந்தரத்தை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு

காஞ்சீபுரம், மார்ச் 26 –

உத்திரமேரூரில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.சோமசுந்தரத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த ஒரு வார காலமாக தமிழ் நாட்டிலுள்ள 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான ஆதரவை தருவதை கண்கூடாக பார்க்கிறேன். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி.

தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கூறி செய்ய முடியாததை எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் இப்போது அப்படி அவர் களால் செய்ய முடியாது.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாமானியர்கள். அவர்கள் மக்களை சந்தித்து, அவர்களது கஷ்டங்களை புரிந்து அதற்கேற்றபடி தேர்தல் அறிக்கையை தயாரித்து, மக்கள் பாராட்டக்கூடிய அளவில் வெளியிட்டுள்ளார்கள்.

ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500, பெண்கள் சமையல் செய்ய சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில் ஆண்டுக்கு விலையில்லாமல் 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்கள் மேம்பாட்டுக்காக தமிழகத்தில் அதிக திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். அதை புரிந்து கொண்ட அரசு பெண் களுக்காக அதிக திட்டங்களை தீட்டியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கல்வி கடன் ரத்து என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மறக்கக் கூடாது.

அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்றவற்றால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந் துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, எதிரி கட்சியாகத்தான் செயல் படுகிறது. கொரோனா காலத்தில் மக்கள் துயர் துடைக்க அரசு ரூ.1000 கொடுப்பதாக சொன்னபோது அதை தடுக்க நினைத்தது.

தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் இல்லாமல் எந்த அளவுக்கு பொதுமக்கள் தவித்தனர் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கொரோனா தொற்று இந்தியா முழுக்க பரவியபோது எந்த மாநிலத்திலும் செய்யாத அளவுக்கு அதிக அளவில் பரிசோதனை செய்து அதை கட்டுக்குள் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சீ பன்னீர்செல்வம், மாநில டான்சில்க் தலைவர் பூக்கடை ஆர்.டி. சேகர், மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பாமக மாநில நிர்வாகி பொன்.கங்காதரன், தமாக மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தம்மன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தென்னேரி என்.எம்.வரதராஜூலு, வர்த்தக பிரிவு செயலாளர் வாலாஜாபாத் மார்க்கெட் வி.அரிக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் திருப்புலிவனம் கே. பிரகாஷ்பாபு, களியாம் பூண்டி தங்கபஞ்சாட்சரம், கே.ஆர்.தருமன், முன்னாள் துணை சேர்மன் மானம்பதி அ.ரவிசங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *