செய்திகள்

உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: மகாராஷ்டிர கவர்னர் உத்தரவு

கவர்னர் உத்தரவை எதிர்த்து சிவசேனை சுப்ரீம் கோர்ட்டில் மனு

மும்பை, ஜூன் 29–

மகாராஷ்டிரா அரசியல் களம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் போர்க்கொடியால் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில கவர்னர் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் மகா விகாஸ் அகாடிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிவசேனை சார்பில் கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவை செயலருக்கு கவர்னர் எழுதியுள்ள கடிதத்தில், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில், சிவசேனை கட்சியின் 39 எம்.எல்.ஏ.,க்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். இதனால், அரசு சுமுகமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்று இயங்க வேண்டுமென்றால் அதற்கு முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதனால் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக வியூகம்

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கக் கோரி, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ள சிவசேனை எம்.எல்.ஏ.க்களும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தற்போது கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் புதிய அரசு அமைப்பதற்கான வியூகத்துடன், பாஜக தயார் நிலையில் உள்ளதாக மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “நாங்கள் விரைவில் மும்பை சென்று, கவர்னரை சந்தித்துப் பேசவுள்ளோம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்னுடன் வந்துள்ள 50 எம்.எல்.ஏ.க்களும், சொந்த விருப்பத்தின் பேரில் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளோம். சுயநலத்துக்காக வரவில்லை என்று கூறியுள்ளார்.

மும்பை செல்வதற்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் அவர் பாஜக தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் அசாமில் உள்ள அதிருப்தி அணியினர் இன்று கோவாவில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு அழைத்து வரப்படுவார்கள். அங்கிருந்து அவர்கள் நாளை மும்பைக்கு நேரடியாக அழைத்துவரப்பட இருப்பதாக தெரிகிறது.

சிவசேனை மனு

இதற்கிடையில் சிவசேனை சார்பில் கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவசேனை கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்துள்ள இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மாலை விசாரணைக்கு வர உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு, அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு என அடுத்தடுத்த நிகழ்வுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.