செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் மகா கும்பமேளா துவங்கியது

Makkal Kural Official

திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கும்: மோடி வாழ்த்து

பிராயாக்ராஜ், ஜன. 13–

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில் மகா கும்பமேளா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி, மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய 4 இடங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கும்பமேளா நடைபெறும்.

இருந்தாலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் சிறப்பு வாய்ந்தது.

கும்பமேளா நடைபெறும் நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதை இந்துக்கள் தங்களது வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறு நீராடுவதால் இப்பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் சிறப்பாக, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிரகங்கள் நேர்கோட்டில் சேரும்போது மகா கும்பமேளா நடக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளவும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள், துறவிகள், அகோரிகள் மற்றும் பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். இதில் பங்கேற்க 35 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் இன்று முதலாவதாக நடக்கும் ஸ்நானம் பவுஷ் பூர்ணிமா ஸ்நானம் ஆகும். இன்று அதிகாலை 3.20 மணியளவில் இருந்து திரிவேணி சங்கமத்தின் கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். காலை 9.30 மணி வரை சுமார் 60 லட்சம் பேர் நீராடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனவரி 15ல் மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் மவுனி அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரவரி 12ல் மாசி பூர்ணிமா ஸ்நானம் மற்றும் பிப்ரவரி 26ல் மஹா சிவராத்திரி ஸ்நானம் என்றும் பக்தர்களாலும் துறவிகளாலும் கடைப்பிடிக்கப்படும் முக்கிய சிறப்பு நாட்கள் ஆகும். இந்த நாட்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் மிக முக்கியப் பிரமுகர்கள் (விஐபி) யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கும்ப மேளா அன்று அகாராஸ் பாரம்பரிய ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். ஊர்வலத்தின் போது யானைகள், குதிரைகள், தேர்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இந்நிகழ்வின் போது நாக சாதுக்கள் கலந்து கொண்டு பல மத சடங்குகளை பின்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவையொட்டி 55க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினர் களத்தில் உள்ளனர்.

பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் 7 முக்கிய வழித்தடங்களில் 102 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வரும் வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக 5 வஜ்ரா வாகனங்கள், 10 ட்ரோன்கள் மற்றும் சதித் திட்டங்களை முறியடிக்கும் 4 குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நீருக்கடியில் செயல்படும் 113 ட்ரோன்கள், 2,700 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் உட்பட நவீன தொழில்நுட்பங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரெயில்வே, தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் என மத்திய அரசும் மகா கும்ப மேளாவுக்கான ஏற்பாட்டில் பங்களித்துள்ளது.

பிரதமர் வாழ்த்து

மகா கும்பமேளாவையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:–

“பாரதத்தின் பெருமை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் தொடங்கியுள்ளது. இது நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனித சங்கமத்தில் எண்ணற்ற மக்களை ஒன்றிணைக்கிறது. மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது. நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது. பிரயாக்ராஜ் கோலாகலமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எண்ணற்ற மக்கள் அங்கு வந்து புனித நீராடி ஆசி பெறுகிறார்கள். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *