நிதிக் கூட்டாட்சியை பாஜக அரசு சிதைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு
சென்னை, அக். 11–
நிதி பகிர்வு மூலம் அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியை ஒன்றிய பாஜக அரசு சிதைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை ஒன்றிய அரசு நேற்று விடுவித்தது. இந்த வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு 31,962 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதை விட இது 4 1/2 மடங்கு அதிகமாகும். இதனையடுத்து ஒன்றிய பாஜக அரசின் நிதி பகிர்வில் பாரபட்சம் இருப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக பொதுச்செயலாளரும், எம்.பியுமான ரவிக்குமார், அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியை பாஜக அரசு சிதைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
உ.பி.யை விட 5 மாநிலங்களுக்கு குறைவு
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
‘நிதி கூட்டாட்சியை (Fiscal Federalism) சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசு , ஒன்றிய பாஜக அரசு வரி வருவாயிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்துக்கு மட்டும் 31,962 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 7,268 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி 28,152 கோடி ரூபாய் தான். அதைவிட உத்தரப்பிரதேசம் என்ற ஒரு மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிதி அதிகமாகும். அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறேன்’ என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.