செய்திகள்

உத்தரகாண்ட் மாநில தொழிலதிபர் திருமண விழாவில் 320 டன் குப்பை: நீதிமன்றத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

Spread the love

டேராடூன், ஜூலை 19–

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் அஜய் குப்தா, அதுல் குப்தா ஆகியோரின் இல்லத் திருமண விழாவில் 320 டன் குப்பை சேர்ந்ததாக அந்த மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அஜய் குப்தா மற்றும் அதுல் குப்தா ஆகியோரின் இல்லத் திருமணங்கள், உத்தரகாண்ட் மாநிலம் கமோலி மாவட்டத்திலுள்ள ஆலி என்ற மலைப்பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்தது.

தென்னாப்பிரிக்காவில் தற்போது தொழிலதிபர்களாக இருக்கும் இவர்களின் இல்லத் திருமண விழா, மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், யோகா குரு ராம்தேவ், மாநில பா.ஜ.க தலைவர் அஜய் பட் உட்பட பல்வேறு தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் வருகை தந்தனர்.

அந்தத் திருமணத்தில் அளவுக்கு அதிகமாகக் குப்பைகள் உற்பத்தியானதாகவும் அதை அவர்கள் முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றும் கூறி, பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 17 ந்தேதி அதை விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் ரங்கநாதன் மற்றும் அலோக் குமார் வர்மா, மாநில அரசு, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரண்டும் சேர்ந்து இந்தத் திருமணம் உண்டாக்கிய சூழலியல் சீரழிவுகள் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

அந்த ஆய்வறிக்கையில், திருமணம் முடிந்தபோது எவ்வளவு கழிவுகள் உற்பத்தியாயின, அதனால் அங்குள்ள நீர்நிலைகள் எந்தளவுக்கு மாசடைந்தன, கழிவுகளை அப்புறப்படுத்தும்போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை முறையாகத் தரம் பிரித்துதான் அப்புறப்படுத்தினார்களா என்ற கேள்விகளுக்கு விடை இருக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

320 டன் குப்பை

விசாரணையின்போது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், திருமணத்தின் முடிவில் 320 டன் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், திருமண விழா நடைபெற்ற 4 நாள்களும் அங்கு 200 ஊழியர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கென்று கழிவறை வசதிகளைச் செய்துகொடுக்கத் தவறியதால், அந்த நான்கு நாள்களுமே திறந்தவெளியில்தான் இயற்கை உபாதைகளைக் கழித்துள்ளனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.

அப்போது பெய்த மழையில் அந்த மனிதக் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு, அருகிலிருந்த தாவுலி கங்கா என்ற நதியை மாசடையச் செய்துள்ளது.

இந்த அறிக்கையைப் பார்வையிட்ட நீதிபதிகள், தாவுலி கங்காவின் மாசுபாட்டு அளவைக் கணக்கிடுமாறும், அதைச் சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடுமாறும் கூறியுள்ளனர். அந்தச் செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வாங்கி ஏற்பட்ட சூழலியல் மாசுபாட்டைச் சரிசெய்யலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *