உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி
டெல்லி, மே 16–
உத்தரகாண்ட் காட்டுத் தீ குறித்த வழக்கில், தேர்தல் பணிக்கு
வனத்துறை அதிகாரிகளை அனுப்பியது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரகாண்டில் பல ஆண்டுகளாக காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக வழக்கறிஞர் ரிதுபர்ன் யூனியல் என்பவர், `காடுகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளை காட்டுத் தீயில் இருந்து பாதுகாக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 398 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய் மற்றும் எஸ். வி. என் பஹாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் உத்தரகாண்ட் அரசு சார்பில் ஆஜரான அம்மாநில துணை அட்வகேட் ஜெனரல் ஜதீந்தர் குமார் சேத்தி, “இந்த அனைத்து தீ விபத்துகளும் மனிதனால் அல்லது மனித தவறுகளால் உருவாக்கப்பட்டவை. காட்டுத் தீ தொடர்பாக இதுவரை மொத்தம் 388 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
உச்சநீதிமன்றம் கேள்வி
தொடர்ந்து நீதிபதிகள், “இந்த கோர காட்டுத்தீ விபத்துகளின் நிவாரணத்திற்காக ரூ.9 கோடி கேட்ட போது வெறும் 3.14 கோடி மட்டும் வழங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், “இத்தகைய காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெறும்போது, வனத்துறை அதிகாரிகள் ஏன் தேர்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டனர்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், `காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மாநில அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன, காலியாக உள்ள வனத்துறை பணியிடங்களை நிரப்பாதது ஏன்? போன்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், 17 ஆம் தேதிக்குள் மாநில தலைமைச் செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக உத்தகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “காடுகளில் தீ ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பைருல் மரம் (கை வினைப் பொருட்கள் செய்யப்பயன்படும் ஒரு வகை மரம்). அதை அகற்றுவதற்காக, பொதுமக்களுடன் இணைந்து பிரசாரம் செய்து வருகிறோம். ‘பைருல் கொண்டு வாருங்கள், பணம் பெறுங்கள்’ என்ற பிரசாரத்தின் கீழ், ஏராளமானோர் பைரு சேகரித்து, ஒரு கிலோ ₹50 வீதம் அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதன் பரவலான விளைவும் காணப்படுகிறது.
தற்போது இந்த பிரசாரத்தால் காட்டுத் தீ சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதோடு, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்களும் வருமானம் ஈட்டி வருகின்றனர் என கூறியுள்ளார்.