செய்திகள்

உத்தரகாண்டில் இன்றுமுதல் பொது சிவில் சட்டம் அமல்

Makkal Kural Official

டேராடூன், ஜன. 27–

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ந்தேதி நாட்டிலேயே முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது.

தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இது ஒரு பிரசாதம்

“பொது சிவில் சட்டத்துக்கான விதிமுறைகள், அதை அமல்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் உள்பட சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. பொது சிவில் சட்டம் சமூகத்தில் சீரான தன்மையை கொண்டு வரும். அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள், பொறுப்புகளை உறுதி செய்யும். நாட்டை வளர்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, இணக்கமான, தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்ற பிரதமர் மோடி நடத்தும் யாகத்தில் மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவது ஒரு பிரசாதம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உத்தரகாண்ட் தலைமை செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டத்துக்கான இணையதளம் ஒன்றை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்க உள்ளார்.

#UP #Common Civil Law #Uniform Civil Code #tamilnews

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *