டேராடூன், ஜூன் 15–
உத்தரகண்ட்டில் இன்று அதிகாலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானத்தில் அதில் பயணித்த விமானி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து இருந்து கேதர்நாத்துக்கு ஆர்யன் ஏவியேசன் ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை (ஜூன் 15 ) ஞாயிற்றுக்கிழமை சென்றது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உள்பட 7 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5:20 மணி அளவில் ருத்ரபிரயாக் மாவட்டம், கெளரிகண்ட் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அந்தப் பகுதி போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் சம்பவ நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
7 பேர் பலி
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மோசமான வானிலை காரணமாக கௌரி மாய் கார்க்கிற்கு மேலே உள்ள காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் அதில் பயணித்துள்ளது தெரியவந்தது.
இதில், உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. அதில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா ராஜ்குமார் ஜெய்ஸ்வால் (வயது 35), காசி (வயது 25), குஜராத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சுரேஷ் ஜெய்ஸ்வால் (வயது 41), உத்தரகாண்ட் மாநிலம் , கேதார்நாத்தைச் சேர்ந்த விக்ரம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வினுத் தேவி (வயது 66), துஷித் சிங் (வயது 19) ஹெலிகாப்டர் கேப்டன் ராஜ்வீர் சிங் சவுகான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, ஹெலிகாப்டர்கள் சேவையின் நோடல் அதிகாரி ராகுல் சௌபே கூறியதாவது:– ஆரியன் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கேதார்நாத் தாமில் இருந்து குப்த்காஷி தளத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது, பள்ளத்தாக்கில் வானிலை திடீரென மோசமடைந்தது. விமானி ஹெலிகாப்டரை பள்ளத்தாக்கிலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, அவரால் முடியவில்லை. இதனால், துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட அறிக்கையில், உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து சாத்தியமான மீட்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறி உள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 274-பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி குறையாத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.