சினிமா செய்திகள்

‘உத்தம புத்திரன்’ சிவாஜிகணேசனும் உணர்ச்சிப் பிழம்பான சிவகுமாரும்!

2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்

‘உத்தம புத்திரன்’ சிவாஜிகணேசனும் உணர்ச்சிப் பிழம்பான சிவகுமாரும்!

* முதல் சந்திப்பில் பாமர ரசிகன்

* 7ம் ஆண்டில் இணைந்து நடித்த பெருமைக்குரியவன்

 

சரியாக 62 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (9 10.6.1958) நடந்திருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தை சொல்லும் ஓவியம் தான் இரட்டைவேட சிவாஜிகணேசன். வரைந்திருப்பவர்: நடிகர் சிவகுமார். (அந்நாளில் பழனிச்சாமி).

‘உத்தம புத்திரன்’ படத்தில் நாயகன் வில்லன் இரட்டைவேடத்தில் சிவாஜியை தத்ரூபமாக வரைந்த அந்தப் படத்தை சிவாஜியிடம் நேரில் கொடுத்தபோது, உணர்ச்சிப் பிழம்பானார்.

‘‘சென்னைக்குப் போய் சிவாஜியை சந்திக்க முடிந்தால்… அவரை சந்தித்த பிறகு செத்தே போகலாம்… என்ற ஒரு கனவோடு இருந்தவன் நான்’’ என்று உணர்ச்சி வசப்பட்டு சொன்ன சிவகுமார், இதுகுறித்து மக்கள் குரல் பத்திரிகைக்கு அளித்த விசேஷ பேட்டியில் கூறியதாவது:

‘‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய die-hard fan நான். அதாவது அவருக்கு வெறிபிடித்த ரசிகன் நான் என்பது தமிழ்நாட்டிலுள்ள சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றாகவேத் தெரியும்.

அந்தக் காலத்தில் நான் அதிகம் படமே பார்த்ததில்லை. ஆனால் பராசக்தி படத்தில் சிவாஜி பேசும் கோர்ட் சீன் வசனம் முழுவதும் பத்து வயதிலேயே எனக்கு அத்துப்படி. முழு வசனத்தையும் மனப்பாடம் பண்ணி இருந்தவன். அதே மாதிரி 1954 ல் மனோகரா படத்தில் வரும் தர்பார் சீனில் சிவாஜி பேசும் அத்தனை வசனத்தையும் 12 வயதிலேயே மனப்பாடம் பண்ணி இருந்தவன்.

சென்னைக்கு வரும் நேரத்தில் சிவாஜியின் வணங்காமுடி, உத்தமபுத்திரன் படங்களை கோவையில் பார்த்தவன். சிவாஜியின் நடிப்பை பார்த்து ரசித்து, கிட்டத்தட்ட அவர் மீது பைத்தியம் பிடித்தவன் மாதிரி இருந்தவன்.

சிவாஜிங்ற மனுஷனை எங்களுக்கு தெரியாது. ஆனால் சிவாஜி எங்களுக்கெல்லாம் கந்தர்வ புருஷன் மாதிரி. சென்னைக்குப் போய் சிவாஜியை சந்திக்க முடிந்தால்… அவரை சந்தித்த பிறகு செத்தே போகலாம் என்ற ஒரு கனவோடு இருந்தவன்.

1958 ம் வருஷம் ஜூன் மாதம் 9 ஆம் தேதி. என்னுடைய மாமா கண்ணு மச்சான், மாமா பையன், நான் மூன்று பேரும் சென்னைக்கு புறப்பட்டு வந்தோம். அப்போது மயிலாப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் 110 ம் எண்ணுள்ள உள்ள அறையில் தங்கினோம்.

பல சினிமா படங்களில் தான் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனைப் பார்த்திருக்கிறேன்.

ஸ்டேஷன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த செவர்லெட் கார் டாக்ஸியில் ஏறி நேராக உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வந்து இறங்கினோம்.

ஜார்ஜ் மன்றோ சிலை; வாய் பிளந்து ரசித்தேன்

வருகிற வழியில் ஐந்தாம் ஜார்ஜ் சிலை, மன்றோ சிலை ஆகிய சிலைகளை எல்லாம் பார்த்த போது வாய் பிளந்து ரசித்தேன். ஏதோ வெளி நாட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. அசந்து போனேன் . சொர்க்கத்தில் மிதப்பதைப் போல ஒரு உணர்வில் திளைத்தேன்.

ஓவியத்தின் மீது ‘கசமுசா’ கையெழுத்து

ராயப்பேட்டை சண்முக முதலித் தெருவில் முட்டுச் சந்தில் இருந்த கடைசி வீட்டில் குடியிருந்த சிவாஜி கணேசன் வீட்டுக்கு, சென்னைக்கு வந்த அடுத்த நாள் போனோம். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனிடமிருந்து அந்த வீட்டை சிவாஜி கணேசன் அப்போது வாங்கியிருந்தார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு சம்பந்தமாக லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் கோர்ட்டில், மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடிந்து, என்எஸ் கிருஷ்ணனுக்கு 2 வருடம் 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு இருந்த கடனை அடைப்பதற்கு இந்த வீட்டை விற்கும் முடிவுக்கு என் எஸ் கிருஷ்ணன் வந்து இருந்தார். முன்பின் தெரியாத சேட் ஒருவரிடம் அந்த வீட்டை விற்பதற்கு பதிலாக, யாருக்காவது தெரிந்த சக நடிகர்களுக்கு விற்கலாமே என்ற முடிவில் இருந்தவரிடமிருந்து இந்த வீட்டை வாங்குவதற்கு சிவாஜி முன்வந்தார்.

‘‘சிவாஜி நம்ம பையன்… தாராளமாக கொடுக்கலாம்…’’ என்ற முடிவுக்கு என் எஸ் கிருஷ்ணன் வந்தார். அப்போது, ‘‘கையில் 40 ஆயிரம் ரூபாய்தான் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு வீட்டை எனக்கு விற்பனை செய்வீர்களா…’’ என்று சிவாஜி கேட்க, ரூ.20,000 குறைந்த நிலையிலும், கடனை வேறு விதத்தில் எப்படியும் அடைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் சிவாஜிகணேசனுக்கே என் எஸ் கிருஷ்ணன் அந்த வீட்டை கொடுத்தார்.

தலைகால் புரியாமல் இனம் புரியாத சந்தோஷம்

அந்த வீட்டில்தான் முதல் முதலில் நான் சிவாஜி கணேசனை நேரில் சந்தித்தேன். அன்று நேரில் அவரைப் பார்த்தபோது எனக்கு தலைகால் புரியவில்ல. அவருடைய கண் பவர்ஃபுல் கண், அர்ரெஸ்டிங் ஐ. அவர் பார்த்த முதல் பார்வை என் உடம்புக்குள் ஊடுருவியது போல உணர்ந்தேன்.

குளித்து முடித்த கையோடு ஆடை அணிந்தபடி என் முன்னால் வந்து நின்றார் சிவாஜி. அழகான சுருட்டை முடி; ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் கலர் என்னை விட கொஞ்சம் கம்மி என்ற ஒரு சந்தோஷம் எனக்கு, மனசுக்குள்.

‘‘மெட்ராசுக்கு படம் போட வந்திருக்கான்…’’ என்று என்னை சிவாஜிகணேசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், கண்ணு மச்சான் மாமா. அடுத்த நிமிடம், நான் வரைந்து கையில் தயாராய் வைத்திருந்த சிவாஜி கணேசனின் படத்தை அவரிடம் நீட்டினேன்.

அது உத்தமபுத்திரன் படத்தில் சிவாஜி ஏற்றிருந்த இரட்டை வேடங்களை சித்தரிக்கும் படம். ஒன்று விக்கிரமன் வேடத்தில் சிவாஜி. இன்னொன்று பார்த்திபன் வேடத்தில். பேசும்படம் பத்திரிக்கையில் இரண்டு பக்கங்களில் தனித்தனியாக வந்திருந்த அந்த படங்களைப் பார்த்து அதை ஒன்றாக சேர்த்து ஒரே பக்கத்தில் நான் வரைந்திருந்தேன்.

எழுத்தாணி பிடிப்பது மாதிரி பேனாவைப் பிடித்தார்

அந்தப் படத்தை என் கையிலிருந்து வாங்கினார் சிவாஜி. ரசித்தார், சிரித்தார். அடுத்த நிமிடம் என் கையிலிருந்த பேனாவை வாங்கினார். அதை எழுத்தாணி பிடிப்பது மாதிரி மோதிர விரலுக்குள் விட்டு, நான் வரைந்து இருந்த அந்த ஓவியத்தின் மீது எழுத ஆரம்பித்தார். ஆனால் அந்த நேரம் என் பேனா எழுதவில்லை.

உடனே, தங்கவேலு… என்று குரல் கொடுத்தார். சட்டென்று அவரது அண்ணன் தங்கவேலு கட்டபொம்மன் மீசையுடன் (லுங்கி கட்டி இருந்த நிலையில்) சிவாஜிக்கு பக்கத்தில் வந்து நின்று அவரிடம் பேனாவை கொடுத்தார்.

அதை வாங்கிய சிவாஜி கணேசன், நான் வரைந்திருந்த ஓவியத்தின் மீது கசமுசா என்று கையெழுத்திட்டார். அதில்

சிவாஜி என்று இருந்தது. உன்னிப்பாக பார்த்தால் தான் அவர் கையெழுத்து அந்தப் படத்தில் தெரியும்.

படம் போட சென்னைக்கு வந்து இருக்கிறான் என்று சொன்னதை கிரகித்துக் கொண்ட சிவாஜி, அப்போது ஓவியக்கலை சினிமா பேனர் வரையும் நிறுவனமான மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து படி என்று சொல்லி அங்கு அனுப்பி வைத்தார். நானும் அங்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அது மட்டும் போதாது, ஓவியத்தில் மேலும் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என நினைத்து, மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து பத்தாவது மாதத்திலேயே வெளியே வந்தேன். பின்னர் எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பின் அங்கு பட்டம் பெற்றேன்.

சிவாஜி பத்மினி கந்தர்வ காதலர்கள்

எந்த சிவாஜிகணேசனை பார்க்கவேண்டும் என்று ஆசை ஆசையாக சென்னைக்கு பட்டணப் பிரவேசம் செய்தேனோ, அதே சிவாஜி கணேசனோடு முதன்முதலாக ஜெமினியின் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் 1965 ஆம் ஆண்டு சேர்ந்து நடித்தேன். அந்த காலத்தில் சிவாஜியும் பத்மினியும் கந்தர்வ காதலர்கள் மாதிரி.

அவர்களை பார்த்து விட்டால் போதும் என்று ஒரு துடிப்பு அந்த நாட்களில் எங்களுக்கு.

சென்னைக்கு வந்து சிவாஜி கணேசனை பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. அன்று முதல் அந்த முதல் சந்திப்பில் இருந்து இன்றுவரை நிரந்தரமாக என் ரத்தத்தில் ஒட்டி இருக்கும் ஒரே நடிகர் சிவாஜிகணேசன் தான்…’’

இவ்வாறு சிவகுமார், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

  • வீ.ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *