சிறுகதை

உதவுவதில் சுயநலம்- மு.வெ.சம்பத்

பானுவுக்கு ராம்குமாருடன் திருமணமாகி இன்றுடன் முப்பது வருடங்கள் ஓடி விட்டன. இவர்களுக்கு ஒரே மகள் லீலா. லீலாவை மருத்துவம் படிக்க வைத்தனர். படிப்பு முடிந்ததும் அவள் விருப்பப்படி ஒரு சின்ன மருத்துவமனையையே அவளுக்காகக் கட்டிக் கொடுத்தார்கள் பானுவும் ராம்குமாரும்.

மருத்துவமனையில் லீலாவின் பொறுமையான அணுகுமுறை மற்றும் நோயாளிகளின் பேச்சைப் பொறுமையாகக் கேட்டு வைத்தியம் செய்யும் முறை இவற்றால் லீலாவின் மருத்துவமனைக்கென்று ஒரு தனி முத்திரை மக்கள் மத்தியில் விழுந்தது.

தான் படித்த மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு சரியான வைத்தியத்தை லீலா மேற்கொண்டதால் நோயாளிகள் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. மருத்துவமனையில் சில நேரங்களில் பணி செய்பவர்களால் சில பிரச்னைகள் எழும் போதெல்லாம் லீலா மிகவும் துவண்டு விடுவாள்.

பானு வீட்டில் சரசு பம்பரமாக சுழன்று வேலை செய்து அந்த வீட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தாள். சமையல் வேலை, வீட்டைப் பராமரிப்பதில் நேர்த்தி, வீட்டிலுள்ள பெரியவர்களை அன்பாக கவனித்துக் கொள்ளுதல் என இன்னும் பல வேலைகளை காலை 7 மணிக்கு ஆரம்பித்து சரியான முறையில் முடித்து விட்டு தினமும் சரியாக மாலை 6 மணிக்கு வீட்டிற்கு கிளம்பி விடுவாள். சரசு பெண் நர்ஸிங் கோர்ஸ் சேர்ந்தாள். பானு சரசுவிடம் உனது மகளுக்கு நான் முதலில் ஒவ்வொரு வருடமும் பணம் கட்டி விடுகிறேன். அதை மாதத் தவணையாக உனது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து விடுவேன் என்றதும் சரசு தன் மகள் படிப்பிற்குத்தானே என ஒத்துக் கொண்டாள்.

அடுத்து பானு வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கும் ரவி இந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது. ரவி பையன் கம்ப்யூட்டர் இளங்கலை படிக்கிறான். பானு சரசுவிற்கு போட்ட கண்டிஷனையே ரவிக்கும் போட்டுப் பணம் தந்தாள்.

தற்போது சரசு மற்றும் ரவி மகள் மற்றும் மகன் கடைசி வருடம் படிப்பில் இருந்தனர். சரசு மற்றும் ரவி பானுவிடம் பணம் கேட்க பானு பிடி குடுக்காமல் பார்க்கலாம் என்று கூறி நகர்ந்தாள். இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்கள். சரசுவும் ரவியும் தனித்தனியாக இது பற்றி லீலாவிடம் கூறினார்கள். லீலா பணம் கட்ட வேண்டிய டிமாண்டைத் தாருங்கள் என்று வாங்கிக் கொண்டாள். அவர்கள் கொடுக்கும் போது இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறதென்றனர்.

இதற்குப் பிறகு பானு மற்றும் லீலா பணம் கட்டுவதைப் பற்றி சரசு மற்றும் ரவியிடம் பேசாதது கண்டு இருவருக்கும் யாரிடம் கேட்பதென்ற யோசனையில் ஆழ்ந்தனர். கடவுள் விட்ட வழியென பேசிக் கொண்டனர்.

அன்று மருத்துவமனையிலிருந்து சீக்கிரம் வந்த லீலா சரசு மற்றும் ரவியை நீங்கள் வீட்டிற்குச் செல்லலாமெனக் கூறினாள். அம்மா பானுவிடம் ஏனம்மா இந்த தடவை அவர்கள் மகன் மற்றும் மகள் படிப்புத் தொகையைக் கட்டவில்லையெனக் கேட்டாள். பானு சற்று மௌனம் சாதித்தாள். லீலா என்னம்மா யோசிக்கிறீர்கள் என்று கேட்க, கடைசி வருடம் கட்டி விட்டால் அதன் பிறகு அவர்களுக்கு வேலை கிடைத்தால் இவர்கள் நமது உதவியை கொஞ்ச நாளில் மறந்து விடுவார்கள் என்றாள்.

லீலா உடனே அம்மா நாம் ஒத்துக் கொண்டதை செய்து தான் ஆக வேண்டும், அதனால் நான் அவர்களுக்காக பணத்தைக் கட்டி விட்டேன், ஆனால் இன்னும் அவர்களிடம் கூறவில்லை என்றாள். பானு ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள், லீலா அம்மாவிடம் சரசு மகளை நமது மருத்துவமனையில் நர்ஸ் ஆகவும் ரவி மகனை நமது மருத்துவமனை கணினி பிரிவிலும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டால் நம்பகமான ஆட்கள் ஆகி விடுவார்கள் அல்லவா? அதனால் தான் நான் பணம் கட்டினேன் என்றாள். தற்போது நமது மருத்துவமனை விரிவாக்கம் செய்ய உள்ளதால் இவர்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றதும் பானு மகிழ்வுடன் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாய்கிறதென்ற பழமொழி உனக்குத் தான் பொருந்தும் என்றாள்.

அங்கு வந்த ராம்குமார் மனதிற்குள் உதவுவதில் சுயநலம் கூடாதெனக் கூறிக் கொண்டு சிறு புன்னகையை உதிர்த்து விட்டு விட்டிற்கு வெளியே வந்தார்.

அப்போது வீதியில் சரசு மற்றும் ரவி சற்று உரத்த குரலில் லீலா அம்மா பணம் கட்டி விட்டதாக எனது மகன் கூறினான் என ரவி கூறினான்.

சரசுவும் எனது மகளுக்கு சின்னம்மா பணம் கட்டி விட்டதாக எனது மகள் கூறினாள் என இருவரும் சிரிப்புடன் கூறினர்.

அவர்களைப் பார்த்த ராம்குமார் குட்டியாடு தப்பி வந்தா குள்ள நரிக்கு கொண்டாட்டம் ; குள்ள நரி மாட்டுக்கிட்டா அவனவனுக்குக் கொண்டாட்டம் என்று வாய் விட்டு பாடினார்.

Leave a Reply

Your email address will not be published.