சிறுகதை

உதவி செய்யவா? | ராஜா செல்லமுத்து

நிசப்தம் குடிகொண்டிருக்கும் ஒரு பகல் வேளையில் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடியே வேதனையில் மூழ்கிக்கிடந்தான் பாரதி. அவன் எண்ண அலைகள் எங்கெங்கோ அலைந்து திரிந்து மறுபடியும் ஊரடங்கு உத்தரவிலேயே வந்து நின்று சுழன்றது.

‘இருபத்தியோரு நாள்.. யப்பா.. நெனச்சாலே தல சுத்துது. அப்பிடி இப்பிடின்னு இருந்த பணத்த வச்சு இவ்வளவு நாள் ஒப்பேத்திட்டோம்.. இன்னும் பாதி நாள் கூட கடக்கல..  இருந்த காசு கரஞ்சு போச்சு.. இனிவர்ற நாள.. எப்பிடி சமாளிக்கிறது..’ என்ற வேதனையில் மூழ்கிக்கிடந்தவனின் யோசனையை

அவன் செல்போன் உடைத்தது.

‘‘டிரிங்.. டிரிங்..’’

ஐந்து ரிங்குகளுக்குப் பிறகு எடுத்து

‘‘ஹலோ..’’ என்றான்.

‘‘என்ன.. பாரதி.. எப்பிடி இருக்கீங்க..? ஊருக்கு போனீங்களா..? இல்ல சென்னையில தான் இருக்கீங்களா..?’’ என்று கேட்டான் ரஞ்சித்.

‘‘இல்ல.. சென்னையில தான் இருக்கேன்..’’

‘‘ம்ம்.. சாப்பாடு..?’’ என்று ரஞ்சித் கேட்கும் போதே பாதி வார்த்தை அவனுள் இஞ்சியது.

‘‘என்ன பண்ண..? எல்லாம் அடியேன் சமையல் தான்..’’

‘‘ஓகே.. ஓகே.. நல்ல காரியம் தான்.. அக்கம் பக்கத்து வீட்டுக்காராங்க எதுவும் கொடுக்க மாட்டாங்களா..?’’ என்று ரஞ்சித் கேட்டான்.

‘‘ம்க்கும்.. கேட்டாலும்.. நீ.. வேற எச்சிக் கையால காக்கா வெரட்ட மாட்டாங்க.. இதுல நம்மள வேற நலம் விசாரிப்பாங்களா.. எல்லாம் சுயநலம் பிடிச்சவங்க.. அதெல்லாம் கேக்க மாட்டாங்க.. ரஞ்சித் நாமளும் அத எதிர்பாக்கல.. கிராமத்தையும் நகரத்தையும் என்னால.. அழகா வேறுபடுத்திப்பாக்க முடியும் அதுனால.. அங்கிளோட அந்த அக்கறையான வார்த்தைக்காக நான் காத்திட்டு இருக்கிறதில்ல.. நம்ம வாழ்க்கை. நம்ம வயிறு.. அவ்வளவு தான்..

உங்கள மாதிரி நல்ல மனுசங்க.. நாலு பேரு.. அவ்வளவு தான்.. என்னோட உலகம். அதுல தான் சுத்துது நம்ம பூமி உருண்டை..’’ என்று பாரதி சொன்ன போது கட கடவெனச் சிரித்தான் ரஞ்சித்

‘‘உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..?’’ என்ற ரஞ்சித்

‘‘பாரதி ஒனக்கு நான் ஹெல்ப் பண்ணணும்னு நினைக்கிறேன்..’’ என்ற ரஞ்சித்தின் பேச்சிற்கு மறு வார்த்தை எதுவும் பேசாமல் இருந்தான் பாரதி.

‘‘ஆமா பாரதி ஒனக்கு பணம் தாரேன்.. நீ.. செலவுக்கு வச்சுக்கிரலாம்..’’ என்று மேலும் ஆசை வார்த்தைகள் அடுக்கினான்.

‘ஆஹா.. இந்தக் குறை நாளை எப்பிடி ஓட்டப் போறோம்னு வருத்தப்பட்டுட்டு இருந்தோம். கடவுளா.. நல்ல வழியை காட்டிட்டாரு..’ என்று மேலே பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். பிறகு விட்ட இடத்திலிருந்து மறுபடியும் பேச்சை ஆரம்பித்தான் ரஞ்சித்…

‘‘ஆமா.. பாரதி ஊரெல்லாம் கடையடைப்பு.. ஹோட்டல்.. அது இதுன்னு எதுவும் இருக்க வாய்ப்பில்ல.. உன்னிடம் பணமும் கையில இருக்க வாய்ப்பில்ல.. அதுனால.. நீ.. எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு நீ வரலாம்.. பணத்த வாங்கிக்கிரலாம்..’’ என்று போட்டான் ஒரு போடு.

‘‘என்னது.. ஒன்னோட வீட்டுக்கு வந்து வாங்கிக்கிரவா..?’’ என்று எதிர்பார்ப்புகள் படபடவெடித்தன

‘‘ஆமா.. பாரதி என்னோட வீடு மறைமலை நகர் கிட்ட இருக்கு.. நீ தாராளமா.. எப்ப வேணும்னாலும் வரலாம் என்கிட்ட இருந்து பணத்த கலைக்ட் பண்ணிக்கலாம்..’’ என்று சொன்னான் ரஞ்சித்.

‘‘ஏண்டா.. டேய் நீ.. தெரிஞ்சு தான் பேசுறியா..? இல்ல உதவி செய்ற மாதிரி.. அலங்கார வார்த்தைய அள்ளிவிட்டியா..?’’ என்று பாரதி கேட்டான்.

‘‘ஏன்..? ஏன்..?’’ என்று ரொம்பவே அவசரமாகக் கேட்டான் ரஞ்சித்

‘‘ஊரு உலகம் எப்பிடி இருக்கு? நீ.. பேசிட்டு இருக்க. உதவி செய்றன்னு சொன்னே. ஆனா.. இப்பிடி யொரு குண்டப் போடுவேன்னு தெரியாதுடா.

சாமி.. வேணும்னா.. என்னோட அக்கவுண்ட நம்பர அனுப்புறேன். அதுல போட்டுரு.. இங்க ஏடிஎம்ல நான் எடுத்துக்கிறேன்..’’ என்று பாரதி சொல்ல

‘‘ஐயோ.. நான் ஹவுஸ் அரஸ்ட் என்னைய வீட்ட விட்டு வெளிய அனுப்பமாட்டாங்க..’’ என்று உதட்டில் ஈரம் ஒட்டாமல் சொன்னான் ரஞ்சித்.

‘‘ம்ம் மொபைல் பேங்க இல்லையா..?’’ என்று பாரதி கேட்க

‘‘ஐயய்யோ.. என்கிட்ட மொபைல் பேங்க் இல்ல..’’ என்று ரஞ்சித் பின் வாங்கினான்.

‘‘ஏண்டா பொட்டிக்கடையில கூட போன்பே.. கூகுள் பே..அது இதுன்னு வச்சுருக்காங்க.. உன்கிட்ட எதுவுமே இல்லையா..?’’ என்றுபாரதி கேட்டான்.

எதுவும் தன்னிடம் இல்லை என்றே பதில் சொன்னான் ரஞ்சித்.

‘‘சரி.. ஓகே பாரதி என் கையில் பணம் இருக்கு. நீ.. எப்ப வேணும்னாலும் என்கிட்ட இருந்து பணத்த கலைக்ட் பண்ணிக்கலாம்.. என்று திரும்பத் திரும்ப

அதே வார்த்தையை சொன்னான் ரஞ்சித்.

‘‘டூவிலர்.. எதுவுமே என்கிட்ட இல்லடா.. நான் எப்படி உன் வீட்டுக்கு வர்றது.. என்று பாரதி சொன்னதை கவனத்தில் கொள்ளாமல்

‘‘என் கையில பணம் இருக்கு. நீ.. எப்ப வேணும்னாலும் வந்து கலைக்ட் பண்ணிக்கிரலாம் என்று ரஞ்சித் திரும்பவும் சொன்னான்.

அப்போது பாரதிக்கு அவன் மீது எரிச்சல் கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *