சிறுகதை

‘உதவி செய்யப் போய்….’ | ராஜா செல்லமுத்து

Spread the love

* பஸ் நிறுத்தத்திற்கு கொஞ்சம் தள்ளி நடந்து வந்து கொண்டிருந்தாள் கலா. இன்னும் கொஞ்ச தூரம் தான் அதுக்குள்ள பஸ் வந்திரக்கூடாது என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்த படியே நடந்து வந்தவளின் நம்பிக்கையில்

‘ நச் ‘ என்ன இடி விழுந்தது.

‘ ஆகா, பஸ் வாரது மாதிரி இருக்கே. அதுக்குள்ள நாம பஸ் ஸ்டாண்டுக்கு போயிருவமா? வெட்டிப் பய சும்மா வெட்டிக் கதையே பேசி நம்மோட நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டான். இல்லேன்னா இந்நேரம் பஸ் பிடித்திருக்கலாம்’ என்று மனதிற்குள் புலம்பியவாறே வரும் பஸ்சை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள்.

பிடிச்சிரலாம்? இல்ல நாம போறதுக்குள்ள பஸ் போயிறுமோ? பல குழப்பங்களில் நடந்தவளின் நம்பிக்கை நசுங்கியே போனது.

அவள் பஸ் நிலையத்தை அடைவதற்குள் பஸ் வந்து நின்றது.

‘ம்ஹுக்கும், கண்டிப்பா, பஸ்ஸ பிடிக்க முடியாது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை தான் இந்த ஏரியாவுக்கு பஸ் வருது. இந்த பஸ்ஸ விட்டோம்னா அடுத்து ஒரு மணி நேரத்துக்கு நிக்க வேண்டியிருக்குமே’ என்ற கலா அப்பவும் தன் முயற்சியை விடாமல் பஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

‘ம் ஹும்… முடியாது போல. நம்ம போறதுக்குள்ள பஸ் போயிருமோ அவசரம் அவசரமாக ஓடியவளை நோக்கியே பஸ் வந்து கொண்டிருந்தது. ஓடும் பஸ்ஸை கை நீட்டி மறைத்துப் பார்த்தாள். டிரைவர் வேறு பக்கம் கவனம் செலுத்துவது போலவே பார்த்துக் கொண்டு கலாவைக் கடந்து போனான்.

பாவிப்பய… லேசா நின்னா கொறஞ்சு போவானா என்ன? என்னமோ போட்டிக்கு போய் பரிசு வாங்க போறது மாதிரியே இவ்வளவு வேகமாக ஓட்டிட்டு போறான்’ என்ற கலா, ஓடும் பஸ்சையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

” மேடம்…. மேடம் ” என்ற குரல் கேட்டு திரும்பினாள் கலா. டூவீலரில் ஒருவர் வந்து நின்ற இளைஞன் அவனின் பெயர் பிரகாஷ்.

என்ன பஸ் போயிருச்சா? என்றவனை ஒரு மாதிரியாக பார்த்தாள் கலா.

‘ ஆமா ‘

‘ வாங்க, என்னோட வண்டில ஏறுங்க. நான் உங்கள அடுத்த ஸ்டாப்புல ஏற்றி விடுறேன் ‘ என்ற பிரகாஷ் கலாவை ஏற்றிக்கொண்டு தன் டூவீலரை முடுக்கினான்.

இந்த ஏரியாவுல பஸ் ரொம்ப லேட்டா தாங்க வரும் . இந்த பஸ்சை விட்டோம்னா அடுத்து ஒரு மணி நேரத்திற்கு பஸ்ஸே வராது.

‘ சரி வாங்க ‘ என்ற பிரகாஷ் தன் டூவீலரை வேகமாக மூடினான்.

விரையும் இந்த இரு சக்கர வாகனம், ஏற்கனவே சென்ற பஸ்ஸை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

பிடிச்சிரலாம்? என்ற கலாவின் வார்த்தைக்கு

‘ கண்டிப்பா பிடிச்சிரலாம்ங்க ‘ என்ற உத்தரவாதத்தை கொடுத்து விரைந்த போது தன் இடுப்பில் ஏதோ அழுத்துவது போல் தெரிய வர என்ன என்று வண்டியை ஓட்டிக்கொண்டே தொட்டுப் பார்த்தான். அது கட்டியாக இருக்க, கொஞ்சம் மிரண்டவன் வண்டியை பட்டனை நிறுத்தினான்.

வாய் பேசுவதற்கு வார்த்தைகள் ஏதும் வரவேயில்லை.

என்ன பயமா இருக்கா? என்று கலா கேட்டபோது, பிரகாஷுக்கு கண்ணீரே கனத்து நின்றது.

எவ்வளவு வச்சிருக்க ? என்று வயிற்றில் வைத்த கத்தியை கொஞ்சம் அழுத்தினாள்.

இல்லை என்று ஒற்றை வார்த்தையை மட்டுமே உதித்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் கடகடவென வழிந்தது.

லிப்ட் கொடுத்து உன்னை கூப்பிட்டு வந்தது தப்பா? என்று பிரகாஷ் கேட்டபோது, ‘‘நான் உங்கிட்ட கேட்டேனா? நீயாத் தானே என் கிட்ட கேட்டே. இப்பக் குடு, செல்போன், 4G ஸ்மார்ட் போனா? என்ற கலா செல்போனைப் பிடுங்கிக் கொண்டு இருந்த பர்ஸையும் பறித்துக் கொண்டாள்.

‘‘இத வேற எங்கயாவது சொன்னேன்னா ….., சும்மா இருந்த என்ன டூவீலர் ஏத்தி தப்பா பேசி, என்னைய , தப்பான எடத்துக்கு கூப்பிட்டேன்னு கத்தி ஊரை கூட்டி விடுவேன்’ என்ற கலா சொன்னதும் வாய் விட்டே அழுதான் பிரகாஷ்.

போடா பெருசா லிப்ட் குடுக்கிறானாம் லிப்டு…. போடா என அத்தனையும் பிடுங்கி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் கலா

பறிகொடுத்த பிரகாஷ் நிலைகுத்திய கண்களோடு அந்த இடத்திலேயே நின்றான்.

மறுநாள் அதே நேரம் அதே இடம்.

பஸ்ஸை முன்னால் போக விட்ட கலா,

ஐயய்யோ, பஸ்ஸ விட்டா அடுத்து ஒரு மணி நேரம் கழிச்சு தான் பஸ் வரும். இப்ப என்ன பண்ணலாம்’ என உண்மையில் பஸ்ஸைத் தவற விட்டவள் போலவே புலம்பியவாறே நடந்தாள் கலா.

ஒரு டூவீலர்காரன், ஹலோ மேடம்… பஸ்ஸ விட்டுட்டீங்களா? என்று அவன் கேட்க,

‘ஆமா’ எனத் தலையாட்டினாள்.

‘வாங்க’ சீக்கிரம் ஏறங்க பஸ்ஸ பிடிச்சிரலாம்’ சொன்னவரின் இரு சக்கர வாகனத்தில் சிரித்துக் கொண்டே ஏறினான் கலா.

” ஆராயாமல் செய்யும் உதவி ஆபத்தில் முடியலாம்…”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *