சிறுகதை

உதவி – எம்.பாலகிருஷ்ணன்

அந்தப் பாழாய்ப் போன கிழவி ஒரு குடம் தண்ணிக்காக என்னை இப்படி பேசிட்டாளே? என்று இரவு தூங்கும் நேரத்தில் தலையில் கை வைத்தவாறே புலம்பித் தள்ளினாள். மீனாட்சி புரண்டு படுத்தும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. ஒருவழியாக தூங்கி விட்டாள் மீனாட்சி.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மீனாட்சி குடியிருக்கும் தெருக்குழாய் ஒரு வாரமாக பழுதானதால் தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை. அதனால் அந்தத் தெருவில் குடியிருப்பவர்கள் தண்ணீர் லாரியைப் பயன்படுத்தி வந்தனர். அன்று தண்ணீர் லாரியும் வரவில்லை. சிலர் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் வரை சமாளிக்கும் அளவுக்கு தண்ணீர் பிடித்து விட்டார்கள். மீனாட்சி அந்த நேரத்தில் வெளியூர் சென்று விட்டதால் தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. அதனால் மீனாட்சி பக்கத்துத் தெருவிற்கு குடத்துடன் சென்றாள்.

அந்தத் தெருவின் தெருக்குழாயை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள் கண்ணம்மா கிழவி. அவள் அந்தத் தெருவில் ஒரு தலைவி போல் செயல்படுபவள். மீனாட்சி குடத்துடன் குழாய் அருகில் நின்றாள். அன்று குழாயடியில் சிறிது கூட்டமாய் காணப்பட்டது. இவளைக் கண்ணம்மா கிழவி பார்த்ததும் ஏண்டி நீ அடுத்த தெருக்காரி தானே! இங்கே எதுக்குடி குடத்தோட வர்றே போடி, அங்கிட்டு! என்று வார்த்தைகளால் விளாசினாள்.

உடனே மீனாட்சி, ’அக்கா, வீட்ல கொஞ்சம் கூட தண்ணி இல்லக்கா, தெருக்குழாய் வேற ரிப்பேரா போச்சி, இன்னும் சரிபண்ணல என்று அமைதியாக பேசினாள் மீனாட்சி. அதற்கு கண்ணம்மா கிழவி, அடியே ஒரு தடவ சொன்னா காதுல ஏறாதா? துப்புக்கெட்ட கிறுக்கி! நாங்களே தண்ணி பிடிக்க முடியல இதுல இவளுக்கு தண்ணி வேணுமாம் போடி என்று கடுமையாக பேசினாள்.

மீண்டும் மீனாட்சி, என்னக்கா ஒரு குடம் தண்ணிக்கா இப்படி பேசுறே?” என்று மீனாட்சி கூறியதும் பத்திரகாளியானாள் கண்ணம்மா கிழவி, அவள் மீனாட்சியின் அருகில் வந்து அவளை அடிக்க வருவது போல், யாரு வீட்டுக்குழாயின்னு நினைச்ச? என் கன்ட்ரோல்ல இருக்கிற குழாயி! குழாயி ரிப்பேர் ஆனாலும் நான் தான் பார்ப்பேன். எவளாவது அஞ்சி பைசா கொடுப்பாளா? நீ வந்து சவுடலா … பேசுறே! என்று கத்தியவாறே மீனாட்சியின்

கையிலிருந்து குடத்தைப் பிடுங்கி எறிந்தாள். குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் கண்ணம்மா கிழவியை திட்டினர். ஆனால் அதைக் கண்டுகொள்ளவில்லை.

மீனாட்சி அதிர்ச்சியடைந்து கண்ணம்மாவை பார்த்து நீயெல்லாம் ஒரு பொம்பளையா? தண்ணிக்காக கொடுமைக்காரியா நடந்துக்கிற! நீ கடைசி காலத்துல குடிக்க தண்ணி இல்லாம சாகப்போற! என்று சாபம் விட்டது போல் பேசி கீழே வீசி எறிந்த குடத்தை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். தெருவில் உள்ள அனைவரும் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு மாதம் உருண்டோடியது. அன்று மதியம் சரியான வெயில். உச்சி சூரியன் பூமியை எரித்தது. கண்ணம்மா ஒரு விசயமாக மீனாட்சி குடியிருக்கும் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். வெயில் வாட்டி எடுத்ததால் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. எல்லோரும் அவரவர்கள் வீட்டினுள் அடைந்து கிடந்தனர்.

கண்ணம்மா கிழவி, மீனாட்சி வீட்டருகே நடந்து வரும்போது அவளுக்கு திடீரென்று தலை சுற்றியது. கால்கள் இடறி கீழே விழுந்தாள். சூரியன் அவள் முகத்தை பதம் பார்த்தது. கண்ணம்மாவுக்கு கண்கள் இருண்டன. நினைவுகள் மறந்தன. அம்மா என்று சத்தம் போட்டு கீழே விழுந்தாள். அந்த தெருவில் ஆள் நடமாட்டமில்லாததால் அவளை யாரும் கவனிக்கவில்லை. யாரும் உதவி புரியவும் முடியவில்லை. தன்வீட்டிலிருந்து கவனித்த மீனாட்சி, விழுந்தது கண்ணம்மா கிழவி என்று தெரிந்தும் அவளை உடனே தூக்கி, தன் வீட்டுத் திண்ணையில் படுக்க வைத்தாள். ஓடிச்சென்று வீட்டினுள் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கண்ணம்மா கிழவியின் முகத்தில் தெளித்தாள். கண்கள் விழித்ததும் அவளின் வாயைத் திறந்து சொம்பு தண்ணீரைக் குடிக்க வைத்தாள்.

கண்ணம்மா கிழவிக்கு நினைவு திரும்பியது. மீனாட்சியை உற்றுப் பார்த்து கண்ணீர் விட்டாள். ஒரு குடம் தண்ணீருக்காக இவளை விரட்டியடித்தோம். இன்று இவளே நமக்கு தண்ணீர் கொடுத்து உதவினாளே, மீனாட்சியின் கையைப் பற்றிக் கொண்டாள். என்னை மன்னித்து விடு என்றாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *