சிறுகதை

உதவித் தொகை – கரூர் அ. செல்வராஜ்

வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் வருகைக்காக 2 மணி நேரம் பொறுமையாகக் காத்திருந்தார் முத்துசாமி.

அழைப்பு மணி ஓசை கேட்டதும் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து சென்று கதவைத் திறந்த முத்துசாமி தன் எதிரில் முகத்தில் புன்னகை ததும்ப நின்று கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரைப் பார்த்து முக மலர்ச்சியோடு கைகூப்பி ‘சார் வணக்கம், உள்ளே வந்து உங்க வீட்டிலே உட்காருங்க சார்’’ என்று அன்போடு வரவேற்றார்.

வரவேற்பை ஏற்றுக்கொண்டு வீட்டின் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்த விஜயகுமார் தனது வீட்டில் 3 வருடமாகக் குடியிருந்து வருகிற முத்துசாமியிடம் வழக்கம் போல ‘முத்து! நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டார்.

அதற்கு முத்துசாமி ,

‘விஜி சார்’

‘சொல்லுங்க முத்துசாமி’

‘விஜி சார், ஆண்டவன் புண்ணியத்திலே நானும், என் வீட்டாரும் பூரண சுகத்தோடு இருக்கோம். ஆனா… ஒரே ஒரு மன வருத்தம் இருக்குது. அது என்னன்னா… இந்த வீட்டு வாடகை பாக்கி. 3 மாச வீட்டு வாடகை பாக்கி மொத்தமா 15 ஆயிரம் இருக்குது. அதைக் கொடுக்க முடியலே. அதுக்கான காரணத்தை உங்ககிட்ட போன்லே சொன்னேன். பொறுத்தது பொறுத்தீங்க, இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டும் பொறுமையா இருங்க. எப்படியாவது வாடகை பாக்கியை கொடுத்து முடிக்கிறேன்’ என்று சொன்னார் முத்துசாமி.

முத்துசாமியின் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் விஜயகுமார்,

‘முத்து சார்… நான் இங்கே வந்தது வீட்டு வாடகை பாக்கியை வசூல் செய்யறதுக்கு இல்லே. உங்களுக்கும் உன் மகன் ஜெயச்சந்திரனுக்கும் நன்றி சொல்லிட்டுப் போகவே வந்தேன்’

‘விஜி சார், எனக்கும் என் மகனுக்கும் நன்றி சொல்ல வந்தீங்களா? எனக்கு ஒண்ணுமே புரியலையே? கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க சார்’

‘முத்து என் பேரன் பிரவீனுக்கு 12 வயசு. இப்ப ஸ்கூல் லீவா இருக்கிறதாலே அவன் கிராமத்திலே இருக்கிற பாட்டி வீட்டுக்குப் போயிருந்தான். அந்தக் கிராமத்திலிருக்கிற ஒரு கிணற்றிலே நீச்சல் பயிற்சி செஞ்சிருக்கான். நீச்சல் கயிறு திடீருன்னு அறுந்ததாலே கிணற்றுக்குள்ளே அவன் விழுந்துட்டான். நீச்சல் பயிற்சி தந்தவராலே என் பேரனைக் காப்பாற்ற முடியலே. அந்த நேரத்திலே வந்த ஒரு வாலிபத் தம்பி கிணற்றிலே குதிச்சு நீந்தி என் பேரனைக் காப்பாத்திட்டாரு. என் பேரனின் உயிரைக் காப்பாத்தின வாலிபத் தம்பியைப் பத்தி நல்லா விசாரிச்ச போது தான் விவரம் தெரிஞ்சது. அந்த வாலிபத் தம்பி உங்க மகன் ஜெயச்சந்திரன்னு. உங்கள் மகன் கிராமத்துக்குப் போன விஷயம் சம்மந்தமா விசாரிச்ச போது வீட்டு வாடகை பாக்கிப் பணம் 15 ஆயிரத்தை கிராமத்திலிருக்கிற ஒரு பாணக்காரரிடம் கடனா கேட்கப் போனதாகத் தெரிஞ்சுது. முத்து. உங்க மகன் ஜெயச்சந்திரன் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் உடனே என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அவன் படிச்ச படிப்புக்குத் தகுந்த மாதிரி என் நண்பன் கம்பெனியிலே வேலை வாங்கித் தற்றேன். வீட்டு வாடகை பாக்கியைப் பத்தி இப்ப ஏதும் கவலைப் படாதீங்க. உங்க மகன் செஞ்ச உதவியைப் பாரக்கும்போது எனக்கு வாடகைப் பாக்கி பணம் பெரிசாத் தெரியலே. ஒரு உயிரைக் காத்த உங்க மகனுக்கு அந்தப் பணம் நல்ல வாழ்க்கையைத் தொடங்கக் கொடுத்த ‘உதவித் தொகை’ ஆக பயன்படட்டும்’ என்று சொல்லிவிட்டு முத்துவிடமிருந்து விடை பெற்றார் விஜயகுமார்.

முத்துவுக்கு ஒரே ஆச்சரியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *