செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்துக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 23–

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் 28 ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘மாமன்னன்’. இந்த படம் ஜூன் 29ஆம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஏஞ்சல் பட நிறுவனம் வழக்கு

இருபது சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், தவறினால் 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *