செய்திகள்

உதயநிதி எப்படி வந்தார்? எடப்பாடி கேள்வி

என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றீர்களே?

காட்டுமன்னார்கோவில், மார்ச் 19

எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்னீர்களே, உதயநிதி எப்படி வந்தார் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:

நமது வெற்றி வேட்பாளர் முருகுமாறன், எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியை நன்கு அறிந்தவர். உங்கள் நன்மதிப்பைப் பெற்றவர். நல்ல மனிதர், சிறந்த வேட்பாளர். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்.

தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் தலைவர்களே இல்லையா. அண்ணன் துரைமுருகன், பெரியசாமி போன்ற முன்னோடி நிர்வாகிகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் பிரச்சாரத்திற்கு விடாமல், ஒரு குட்டிப்பையன் வந்துள்ளார். உதயநிதி, பெரிய அரசியல் ஞானி. அவர் வந்து பேசுகிறார். தி.மு.க கட்சியின் பரிதாப நிலையைப் பாருங்கள்.

தேர்தல் அறிவிப்பை எல்லாம் அவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். உதயநிதி வந்தால் ஓடி கார் கதவைத் திறக்கிறார்கள். வளைந்து நெளிந்து கும்பிடு போடுகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு எனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என கூறினார். ஆனால், தற்பொழுது உதயநிதிக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் கூறிய அனைத்தும் பொய். அவரது அரசியல் மூலதனம் பொய். மக்கள் உஷாராக இருக்கிறார்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது கருணாநிதி ஏழை எளிய குழந்தைகளை எல்லாம் பிச்சை எடுக்க வைத்து விட்டார் என அந்த திட்டத்தை விமர்சித்தார். ஆனால், பின்னாளில் அத்திட்டத்தில் முட்டை வழங்கினார். ஆக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த திட்டம் சரியான திட்டம் என்று ஏற்றுக் கொண்டார். அதே போல புரட்சித்தலைவி அம்மா கொடுத்த மிதிவண்டியை கலர் மாற்றிக் கொடுத்தனர் தி.மு.க.வினர். அண்ணா தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த எந்த திட்டத்தையும் நிறுத்த முடியாது.

திட்டங்கள்

காட்டுமன்னார் கோவில் பெரிய குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்துக் கொடுக்கப்படும். அதோடு காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் மறைந்த அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான, இந்திய மனித உரிமைக் கட்சியின் தலைவரும், அனைத்து சமுதாய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தென்னாட்டு அம்பேத்கார் ஐயா எல்.இளையபெருமாள் பிறந்த ஊரான காட்டுமன்னார் கோவில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

அரசு பணிமனை, அரசு டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டுவந்துள்ளோம். அரசு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் கொடுத்திருக்கின்றோம். ஸ்ரீமுஷ்ணம் புதிய வட்டம் உருவாக்கி தந்துள்ளோம். ஸ்ரீமுஷ்ணம் புதிய ஒன்றியத்தைக் கொடுத்துள்ளோம்.

அரூர் – குமாரமங்கலத்தின் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.500 கோடியில் புதிய கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முகாம் வாழ் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். சிறுபான்மையின மக்களை காக்கின்ற அரசாக அண்ணா தி.மு.க விளங்கிக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையின மக்கள் தங்களது முழு ஆதரவை அண்ணா தி.மு.கவிற்கு தாருங்கள். அம்மாவின் ஆட்சி தொடர கழக வெற்றி வேட்பாளர் முருகுமாறனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது, இடையே புகுந்த பசுமாட்டினைக் கண்ட முதல்வர், விவசாயிகள் அனைவரும் பசுவினை தெய்வமாக கருதுகின்றோம். அது ஏதோ தவறி உள்ளே வந்து விட்டது. அதற்கு வழிவிடுமாறும், அதனை யாரும் தாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ‘‘வாயில்லாத ஜீவன் பசுமாட்டினையும் பாதுகாக்கிறவர்” என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் முதல்வரைப் பார்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *