செய்திகள்

உதயசூரியன் சின்னம் கேட்ட சிவசேனாவின் உத்தவ் தாக்கரே

மும்பை, அக். 10–

விரைவில் நடைபெறவுள்ள அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, தேர்தல் ஆணையத்திடம் உதயசூரியன் உள்ளிட்ட மூன்று சின்னங்களை உத்தவ் தாக்கரே கேட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனாவிற்கு தீராத சோதனை காலம். பால் தாக்கரே தொடங்கி வைத்த இந்துத்துவா கொள்கையை தூக்கி பிடித்து வளர்ந்த கட்சி, தற்போது யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் நிற்கிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று, பாஜக உடன் கைகோர்த்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிர்க்கட்சி போல ஓரங்கட்டப்பட்டு விட்டது. கட்சி தங்களுக்கு தான் என இருதரப்பினரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், அந்தேரி தொகுதி இடைத்தேர்தல் தேதி வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட, சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. அதுமட்டுமின்றி கட்சி பெயரையும் முடக்கியது.

உதயசூரியன் சின்னம்

இந்நிலையில் உத்தவ் தாக்கரே தரப்பு, கட்சிக்காக மூன்று பெயர்களையும், மூன்று சின்னங்களையும் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. அதன்படி, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா பிரபோதநாகர் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என அடையாளத்திற்காக மூன்று கட்சிப் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து திரிசூலம், உதயசூரியன், டார்ச் ஆகிய மூன்று சின்னங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் உதயசூரியன்.

தமிழ்நாட்டில் உதயசூரியன் சின்னத்தை யாராலும் கேட்க முடியாது. ஆனால் திமுக மாநில கட்சி என்பதால், வேறொரு மாநிலத்தில் கேட்க மற்றும் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கிறது.

ஏற்கனவே சிவசேனாவின் சின்னமான, வில் அம்பு சின்னத்தை, வேறொரு வண்ணத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பயன்படுத்தி வருகிறது. தேசிய கட்சியின் சின்னம் எனில், எந்த கட்சிக்கும் எந்த மாநிலத்திலும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *