50 ஆயிரம் ரோஜாக்களால் மர வீடு, கார்ட்டூன் பொம்மைகள் வடிவமைப்பு
நீலகிரி, மே 14–
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்றும் நாளையும் நடைபெறும் 17-வது ரோஜா கண்காட்சியில் 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு மர வீடு மற்றும் கார்ட்டூன் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று தொடங்கும் ரோஜா கண்காட்சியில் பார்வைக்கு வைக்க ரோஜாக்களை கொண்டு மர வீடு, மான், பனிமனிதன், கார்ட்டூன் பொம்மைகள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக ரோஜா கண்காட்சி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது.
4,500 ரகங்களில் 40 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண ரோஜாக்கள் பூத்துக்குலுங்குவதால் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
மலைகளின் அரசி ஊட்டியில், மலர்களின் அரசி ரோஜாவுடன் கண்காட்சி தொடங்கும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. அங்குள்ள பிரையன் பூங்காவில் காலையில் இதழ் விரித்து மாலையில் இதழ் மூடும் கலிபோர்னியா பாபி மலர்கள் பூத்துகுலுங்க துவங்கியிருக்கிறது. இதழ் மூடி விரியும் தன்மையால் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.