சிறுகதை

உண்மை! | இரா.இரவிக்குமார்

உண்மையைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தான் ராகுல்.

எதிர்வீட்டு மாமா அவனுடன் வேலைபார்க்கும் பிரியாவைப் பற்றிக் கேட்டார். அவளது குணநலன்கள் குடும்பத்திற்கு ஏற்றவைதானா என்று அவன் மேலிருந்த பல வருட பழக்கத்தின் நம்பிக்கையால் கூப்பிட்டு விசாரித்தார்.

“மாமா, தங்கமான குணம். நல்ல குடும்பம். நம்ம ரகுவுக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவள்” என்று கூசாமல் பொய் சொன்னான் ராகுல்.

“ராகுல், நாளை ரகு ஸ்டேட்ஸிலிருந்து பதினைந்து நாள் லீவில் வரான். அதற்குள் ரெண்டு மூணு நல்ல இடம் பாத்து ஒண்ண முடிக்கணும். பிரியா பயோடேட்டாவில உன் ஆபிஸ் பேர் இருந்ததால உங்கிட்ட கேட்டேன். இந்த இடத்தவிட மத்த ரெண்டு இடமும் பெரிய நல்ல இடம். ரகு ஃபாரின் மாப்பிள்ளங்கறதால் சீர்செனத்தி எல்லாம் நல்லா செய்வாங்க! அங்க முடியலனா இந்த இடத்தப் பேசி முடிக்கத்தான் எல்லாம் கேட்டு வச்சுக்கறேன்!” என்றார் மாமா.

“நல்ல ஐடியா மாமா” என்றான் பதிலுக்கு ராகுல். அவன் நாம் பெரிய தப்பு பண்ணுகிறோமோ துரோகம் இழைக்கிறோமா என்று மனதில் நினைத்து மருகினான். சரி மூன்றாவது இடமாகத்தானே பார்க்கப் போகிறார்கள். முதலிரண்டு இடத்திலே ஒன்று ரகுவுக்கு முடிந்தால் தான் தந்த பொய்யான தகவலால் எந்தப் பாதிப்பில்லாமலும் தான் பொறுப்பாகாமலும் போய்விடும் வாய்ப்பு இருப்பதால் தன் மனதைத் தானே தேற்றிக்கொண்டான்!

ஆபிஸில் பிரியாவிடம் அவன் எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை.

அன்று ரகு வந்து பத்து நாட்கள் ஓடி மறைந்தபின் மாமா இவனிடம் பேசினார்.”ராகுல், முதலிரண்டு இடங்கள் சரிப்பட்டு வரவில்லை. அவங்க எல்லாம் செய்யத் தயார். ஆனா பொண்ணுங்க பாக்க சுமார்தானு ரகு வேண்டாங்கறான். நாளை உன் பிரியாவைப் பாக்கப் போறோம்!”

“மாமா, என்ன என் பிரியாங்கறீங்க? என் ஆபிஸ்ல வேலைபாக்கற பிரியானு சொல்லுங்க!” என்று அவரைத் திருத்தினான் ராகுல்.

“டேய் ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னேன். இப்ப முக்கியமா ஒண்ணு உங்கிட்ட கேக்கணும். பிரியா பாக்கறதுக்கு எப்படி இருப்பா? லட்சணமா… இல்ல போய்ப் பாக்கறதே வேஸ்டா போயிடுமா! ரகு பாத்த பெண்கள மோசம்னு சொல்ல முடியாது. இவன் தன்ன மாதிரி பொண்ணும் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறான். அதான் கேக்கறேன்!”

“மாமா ஒவ்வொருத்தர் பார்வையும் வேறுபடுமே! இதில நான் எப்படிச் சொல்ல முடியும்?”

“அப்படியில்ல ராகுல். நீயும் ரகு மாதிரி அழகானவன். அவனப் போலவே நீயும் மனசில ஒருத்திய நெனச்சு வச்சிருப்பியே!”

“மாமா, நாளைக்குத்தான் அங்கப் போகப்போறீங்களே. ரகு கண்டிப்பா ஓகே சொல்வான்!” என்றான் ராகுல்.

“உன் வாய் முகூர்த்தம் அப்படியே ஆகணும்டா!” என்று மகிழ்ச்சியடைந்தார் மாமா.

மறுநாள் இரவு பிரியா வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து விட்டுத் திரும்பிய ரகுவும் மாமாவும் மகிழ்ச்சியுடன் ராகுலிடம் தங்களுக்குப் பெண் மிகவும் பிடித்துவிட்டதாகவும் பெண் வீட்டார் தங்கள் முடிவை ஓரிரண்டு நாட்களில் சொன்னதும் நிச்சயம் பண்ணப் போவதாகச் சொன்னதும் இடி விழுந்தது போலானான் ராகுல்.

முதல் முறையாக தான் பிரியா பற்றிய உண்மையை மறைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான்.

அன்று பகல் முழுவதும் ஆபிஸில் பிரியா எப்போதும் போல எதுவுமே நடக்காத மாதிரியே இருந்தாள். மாலை வீட்டிற்குப் புறப்படுவதற்கு முன் தன் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் அடக்க மாட்டாமல் அவளிடம் ராகுல் கேட்டே விட்டான்.

“பிரியா, வீட்ல ஏதாவது விசேஷமா?”

“எத வெச்சிக் கேக்கறே?” என்றவளிடம்…

“முகத்தில எப்பவும் இல்லாத மகிழ்ச்சி தெரியுது!” என்றான்.

ஏதோ புரிந்துகொண்டவள் போல அவள் தன் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு தொண்டையைச் செருமியவாறு சொன்னாள்,

“நேத்து என்னப் பொண்ணுப் பாக்க மாப்ள வீட்லந்து வந்திருந்தாங்க. என்ன அவங்களுக்கு ரொம்பப் புடிச்சுப்போச்சு! எங்க சம்மதத்துக்காகக் காத்துட்டிருக்காங்க!”

“அப்படியா?”

“என்ன ராகுல் ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறே? என்னப் பத்திப் பெருமையா அவங்ககிட்ட நீதான் சொல்லியிருக்கே. உண்மையச் சொல்லப் பயமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல!” என்று திக்குமுக்காடிய ராகுலிடம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் வீட்டிற்குக் கிளம்பினாள் பிரியா.

அவள் போகும்போதே ‘கொஞ்ச நேரம் பொறுத்து என்ன நடக்கப் போகுதுனு பார்’ என்று சொல்லிய வண்ணம் அவன் பார்வையிலிருந்து மறைந்தாள்.

இரவு எட்டு மணிக்கு மேல் எதிர்வீட்டு மாமா ராகுலை அவனது வீட்டிற்கு வந்து தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார். ராகுல் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பிரியா மாமாவின் வீட்டிலிருந்த சோபாவில் மிடுக்காக அமர்ந்திருந்தாள்.

“என்ன ராகுல் நீயும் இவங்களும் காதலிக்கறது உண்மையா?” என்று மாமா கேட்க ராகுல் பேந்தப் பேந்த விழிக்க…

“அங்கிள், இல்லைனு சொல்ல இவருக்குத் தைரியம் இருக்கா என்ன? இப்படி ஒரு தொடை நடுங்கிய நான் காதலிச்சதுக்காக ரொம்ப வருத்தப்படுறேன்! இத வளரவிட்டா நான் பின்னால ரொம்ப வருத்தப்பட நேரிடும்! இப்பவே இவர் வீட்டுக்குப் போய் எங்க காதல ராகுல் அப்பா, அம்மாவிடம் சொல்லி சம்மதத்த வாங்குறேன்!” என்று சோபாவிலிருந்து எழுந்து வந்த பிரியா ராகுலின் கையைப் பற்றி அவனுடன் அவனது வீட்டிற்கு நடந்தாள்.

“நல்லாயிரும்மா! ஏதாவது உதவினா என்னக் கூப்பிடு!” என்று அவளிடம் எதிர்வீட்டு மாமா பின்புறமிருந்து குரல் எழுப்ப…

“தேவையிருக்காது அங்கிள்… நானே பாத்துக்கறேன்!” என்ற அந்தப் புதுமைப் பெண்ணின் தைரியமான பதில் குரல் அங்கே பலமாக ஒலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *