சிறுகதை

உண்மையை மறைத்தது ஏன்? – ஆவடி ரமேஷ்குமார்

சேலத்திலிருந்து தாமோதரனுக்கு போன் வந்தது.

எடுத்தார்.

“ஹலோ… சொல்லுங்க சம்பந்தி..”

“இனிமேல் சம்பந்திங்கிற வார்த்தைக்கு மதிப்பில்லைங்க தாமோதரன். நீங்க பொண்ணு பார்த்தது, நாங்க மாப்பிள்ளை வீடு பார்த்தது எல்லாம் ஓ.கே. அடுத்த வாரத்துல நிச்சயதார்த்தம் பண்ணலாம்னு பேசி வச்சிருந்தது கேன்சல். இந்த கல்யாணம் நடக்காது. சாரி.நான் போனை வச்சிடறேன்” டக்கென்று சிவாச்சலம் போனை வைத்துவிட்டார்.

அதிர்ந்தார் தாமோதரன்.

காரணத்தை சொல்லாமல் விளக்கம் ஏதும் கேட்காமல் இப்படி முகத்தில் அடிப்பது போல் போனை கட் செய்து விட்டாரே… இனி எப்படி காரணத்தை தெரிந்து கொள்வது? அப்படி என்ன கோபம்?

சிவாச்சலத்திற்கு போன் செய்ய தயக்கமாய் இருந்தது.

தரகருக்கு விசயம் தெரிந்திருக்குமா? தணிகாசலத்துக்கு போன் செய்தார்.

“சொல்லுங்க சார்”

“தணிகாசலம் சார், இப்ப சேலத்திலிருந்து சிவாச்சலம் பேசினார். நிச்சயதார்த்தத்தை கேனசல் பண்ணிட்டேன்னு மொட்டையா சொன்னார். இந்த கல்யாணம் நடக்காதுனு சொல்லிட்டு சட்டுனு போனை வச்சிட்டார். இது சம்பந்தமா உங்க கூட ஏதாவது பேசினாரா?”

“நேத்து விசாரிச்சார்”

“என்ன விசாரிச்சார்?”

“உங்க மகன் வினித் உங்களுக்கு சொந்தப்பிள்ளை இல்லியாமே. தத்துப் பிள்ளையாமே….. உண்மையா சார்?”

தாமோதரனுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது அந்த கேள்வி.

ஓ….இந்த உண்மையை நாம் சம்பந்தியிடம் சொல்லாததை எப்படி கண்டுபிடித்தார்?

“ம்… ஆமாம் சார். வினித் என் தத்துப்பிள்ளை தான். உங்க கிட்டயும் சம்பந்திகிட்டயும் மறைச்சதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அதான் சொல்லல”

“போங்க சார். என் தரகர் வேலையை கேவலப்படுத்திட்டீங்களே. எனக்கு அது தெரியாது. தாமோதரன் சார் அந்த உண்மையை என்கிட்ட சொல்லல சார்னு சொன்னேன். அதுக்கு கண்டபடி திட்டிப் போட்டார். அவமானமா இருக்கு”

“சாரி…. சாரி… தணிகாசலம். எங்க நிலைமை அப்படி. சரி அவருக்கு எப்படி இந்த உண்மை தெரிஞ்சது?”

“அதை என்கிட்ட அவர் சொல்லல. என்னை, என்னய்யா தரகர் நீனு ஒருமையில திட்டியதால என்னால் மேற்கொண்டு விசாரிக்க முடியல. உங்க கூட பேசவும் விருப்பமில்ல. அதான் இந்த விசயத்துல மௌனமாயிருக்கிறேன்”

“சரிங்க தணிகாசலம். நான் நேர்ல போய் சம்பந்திகிட்ட தன்னிலை விளக்கம் கொடுத்திட்டு வந்தர்றேன். மறைச்சது தப்புதான். சாரி. நன்றிங்க”

மனைவி கௌசல்யாவிடம் சொன்னதும் பதட்டமடைந்தாள்.

“ச்சே! சொல்லியிருந்திருக்கலாமோ” என்று புலம்பினாள்.

“மருமகள் சுபத்ரா மயிலாட்டமா அழகா இருப்பாளே… அந்த தங்கச்சிலை இனி நமக்கு இல்லையா?… கடவுளே!”

மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் போலிருந்தது. அவளை சமாதானப்படுத்தி விட்டு மதியம் சென்னை சென்ட்ரலிலிருந்து கோவை எக்ஸ்பிரஸில் புறப்பட்டார் தாமோதரன்.

சேலம்.

“வாங்க” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வரவேற்றார் சிவாச்சலம்.

“என்னையும் என் மனைவியையும் நீங்க மன்னிக்கனும்” என்று ஆரம்பித்து காரணத்தை சொல்ல ஆரம்பித்தார் தாமோதரன்.

“எங்களுக்கு பத்து வருஷமா குழந்தையில்ல. என் மனைவி நர்சா ஒரு தனியார் ஆஸ்பத்திரியில வேலை பார்த்தாங்க. அங்க பிரசவத்துக்கு வந்த ஒரு கர்ப்பினிக்கு என் மனைவி தான் பிரசவம் பார்த்தாங்க. ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த நேரமெல்லாம் என் மனைவி தான் குறிச்சு வச்சாங்க. அடுத்த நாள் அந்த குழந்தையோட அம்மா யாருக்கும் தெரியாம ஆஸ்பத்திரியை விட்டு ஓடிட்டாள். தேடிப் பார்த்தாங்க. கிடைக்கல. என்ன செய்வதுனு ஆஸ்பத்திரி நிர்வாகம் குழம்பி போனது. இது ஏதோ தப்பான உறவுல பிறந்த குழந்தை போல் இருக்கு. அதான் பெத்து போட்டுட்டு ஓடிட்டாள். தகப்பனையும் காட்டிக் கொடுக்காம தப்பான முகவரியை கொடுத்திருக்காள்னு விசாரிச்சதுல தெரிஞ்சது. அப்போது என் மனைவி ஆஸ்பத்திரி நிர்வாகத்துகிட்ட எங்களுக்கு பத்து வருஷமா குழந்தை இல்லாததை சொல்லித் தத்து கொடுக்கும்படி கோரிக்கை வைக்க, என் மனைவியின் சேவை மனப்பாண்மையை பாராட்டி ஆஸ்பத்திரி நிர்வாகம் சட்டப்படி தத்து கொடுத்து விட்டது. வினித்தின் பிறப்பு ரகசியம் வெளியில் தெரியாமல் இருக்க நான் வீட்டை மாற்றினேன். சில வருடங்களுக்கு பிறகு சொந்த பந்தங்களுக்கு தெரியாமல் இருக்க பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வந்திட்டோம். இன்னிக்கு வரைக்கும் வினித்திற்கு இந்த உண்மை தெரியாது. இப்ப கட்டிக்கப் போற பொண்ணுக்கு வினித்தோட பிறப்பு ரகசியம் தெரிஞ்சிருக்கனும். அதை சொன்னா வினித்துக்கும் தெரிஞ்சிடும். அவன் மன உளைச்சலுக்கு ஆளாவான்ங்கிற பயம் எங்களுக்கு வந்தது. அதான் குழப்பமான மனநிலையில் உண்மையை சொல்லாமலே இருந்து விடுவதுனு முடிவெடுத்தோம். சரிங்க. இனி நீங்க எங்களை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நான் வரேன் சார்”

சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தார் தாமோதரன்.

சிவாச்சலம் பதிலுக்கு ஏதும் பேச முடியாமல் சிலையாகிப் போனார்.

தாமோதரனை தடுத்து நிறுத்தவும் இல்லை.

இரண்டு நாட்களுக்கு பிறகு.

சிவாச்சலத்திடமிருந்து போன் வந்தது. தயக்கத்துடன் எடுத்தார் தாமோதரன்.

“வணக்கம் சம்பந்தி” என்று கணீர் குரல் ஒலித்தது.

உற்சாகமானார் தாமோதரன்.

“வணக்கம்….வணக்கம்…. சம்பந்தி”

“ரெண்டு நாள் ரொம்ப யோசிச்சோம். உங்க நேர்மை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பவித்ராவுக்கு உங்க மகனை ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதனால் ‘அவரையே கட்டி வைங்கப்பா’னு கூச்சப்படாம சொன்னாள். அப்புறம் எங்களோட மூத்த பொண்ணு மும்பைல இருக்கிறாள். அவளுக்கு ஏழெட்டு வருஷமா குழந்தையில்ல. அவள்கிட்ட விசயத்தை சொன்னோம். நான் நிராகரிச்சதுக்கு ரொம்ப கோபப்பட்டாள். நீங்க பெத்த மகனாகவே நினைச்சு வளர்த்து படிக்க வச்சு நல்ல சம்பளத்துல வேலை வாங்கிக் கொடுத்து, பிறப்பு ரகசியத்தை இது நாள் வரை யாருக்கும் தெரியாமல் கட்டிக்காத்துட்டு வர்றதை அவள் பெருமையா சொல்லி, பவித்ராவுக்கு ஏத்த மாப்பிள்ளை.முடிச்சிடுங்க னு சொன்னாள். அதான் முடிவை மாத்திக்கிட்டோம். அப்புறம் இந்த ரகசியம் எனக்கு எப்படி தெரிய வந்ததுனா… முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் எனக்கு போன் பண்ணி இந்த விசயத்தை சொன்னார். நீங்க யாருனு கேட்டதுக்கு போனை கட் பண்ணிட்டார். உங்க கூட பேசின பிறகு அந்த நம்பரை நோட் பண்ணி எனக்கு தெரிந்த போலீஸ்காரர்கிட்ட கொடுத்து அவரை ட்ரேஸ் பண்ணினோம். அவர் உங்க பங்காளினு தெரிய வந்தது. அவர் பேர் எல்லாம் வேண்டாம்……. சரி. வர்ற வெள்ளிக்கிழமை நம்ம நிச்சயதார்த்தத்தை எங்க வீட்டுக்கருகில் உள்ள விநாயகர் கோவில்ல வச்சுக்குவோம். சந்தோஷமா சம்பந்தி?”

தாமோதரனுக்கு ஆனந்த கண்ணீர் வழிந்தது.பேச நா எழவில்லை. ஸ்பீக்கரில் கேட்டதால் அருகில் நின்றிருந்த கௌசல்யாவும்

“கடவுளே… அந்த மயில் நமக்குத்தானா? நன்றி கடவுளே!” என்று ஆனந்த கண்ணீர் வடித்தாள்.

“என்ன சம்பந்தி பதிலையே காணோம்?”

“ஆனந்த கண்ணீர். பேச முடியலை. டபுள் ஓ.கே.ரொம்ப நன்றிங்க. வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்ததுக்கு சந்தோஷமா புறப்பட்டு வர்றோம் சம்பந்தி”

“சரிங்க போனை வச்சிர்றேன்”

கட் செய்தார் சிவாச்சலம்.

முகத்தில் புன்னகை பூக்கள்

மலர குதூகலித்தனர் தாமோதரனும் கௌசல்யாவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *