சிறுகதை

உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை | ராஜா செல்லமுத்து

நாகராஜ் இப்போது எது சொன்னாலும் பலித்தது. அவனை ஒரு அதிசயப் பிறவியாகவே பார்த்தனர் சுற்றியிருந்தவர்கள்.

‘‘உனக்கு இந்த வருசம் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்..’’ என்று திருமணமாகாதவர்களைப் பார்த்துச் சொன்னால் அது அப்படியே நடக்கும். ‘‘இந்தத் தடவை உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும்..’’ என்று வேலைக்குத் தேடிக் கொண்டிருப்பவர்களிடம் சொன்னால் அதுவும் உடனே நடக்கும்.

இப்படி நாகராஜ் சொல்வதேல்லாம் நடப்பதால் அவனை எல்லோரும் தெய்வமாகவே பார்க்க ஆரம்பித்தனர்.

‘‘நாகராஜ் நீ.. சொல்றது எல்லாமே நடக்குதுப்பா.. இது எப்பிடி..? பேசாம.. நீ குறி சொல்ல ஆரம்பிச்சயின்னா.. எக்கசக்கமா சம்பாதிக்கலாம்..’’ என்று ஒரு ஐடியாவைக் கொடுத்தான் நண்பன்.

‘‘ச்சே.. அதெல்லாம் வேண்டாம்.. நம்ம நாக்குல வர்ற நாலு நல்ல வார்த்தையை நாலு மக்க மனுசங்கிட்ட சொன்னா போதும்.. அவங்க சந்தோசப்படுறாங்கள அதுவே போதுமானது..’’ என்றான் நாகராஜ்.

‘‘என்னப்பா.. நீ.. ஒன்னைய எப்ப எல்லாருமே சாமி மாதிரி பாத்திட்டு இருக்காங்க.. இத வச்சு பணம் பண்ணி பெரிய எடத்துக்கு போக நீ வேணாம்னு அடம்பிடிக்கிறயே..!’’ என்று மறுபடியும் அந்த நண்பன் சொல்ல

‘‘இல்ல வேண்டாம்..’’ என்றே மறுத்தான் நாகராஜ்.

அவனின் மீது அவனுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

‘என்ன இது எல்லாரும் இப்படியே சொல்றாங்க.. நாம சொல்றது எல்லாமே பலிக்குதா..? இது எனக்கே பெரிய ஆச்சரயமா இருக்கே..’ என்று நாகராஜ் தனக்குத்தானே கிள்ளிப்பார்த்துக் கொண்டான்.

‘நமக்குள்ள எந்த சக்தி இப்பிடி இயக்குது. இது கடவுளோட கட்டளையா..! தான் இருக்கும் போல..’ என்ற நாகராஜ் தனக்குள்ளேயே பெருமிதம் கொண்டான்.

‘‘நாகராஜ் உன்கிட்ட இருக்கிற இந்த சக்திய வச்சு காசு சம்பாரிச்சுப்புடலாம்டா..’’ என்று இன்னொரு நண்பன் உசுப்பினான்.

‘‘எப்பிடி..?’’ என்ற நாகராஜ் கேட்டான்.

‘‘எத்தனையோ.. பேர் குறி சொல்றேன்னு சும்மா சொல்லிட்டு காசு பணம் பறிச்சுக்கிறானுக.. தன்ன பெரிய ஜீவாதம்மான்னு காட்டிக்கிறானுக.. ஒனக்கு என்னடா.. நீ சொல்றது எல்லாம் பலிக்குதே.. உன்னைய வச்சு பணம் சாம்பாதிக்கிறது பெரிய விசயம் இல்லடா.. நீ உம்ன்னு சொல்லு.. ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சிரலாம்.. அப்பெறம் பாரு பணம் நம்ம காட்டுல கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது பாரு..’’ என்று உசுப்பேற்றினான்.

‘‘ம்ம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.. போடா.. என்னைய என்ன நெனச்ச.. இதுக்கு முன்னாடி என்னோட நிலைமை என்னன்னு ஒனக்கு தெரியுமில்ல.. அப்பிடி தெரிஞ்சிருந்தும் என்னோட முன்னாடி வாழ்க்கைய இது தான்னு தெரிஞ்சுட்டு நீ இப்படி பேசுறது எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா..’’ என்று நாகராஜ் சொல்ல அதற்குள் இன்னும் இரண்டு பேர் இணைந்து கொண்டனர்.

‘‘..நாகராஜ் சாமிகள் எங்களுக்கு ஒரு பிரச்சனை அத நீங்க தான் தீத்து வைக்கணும்.. அத விட நாங்க ஒரு காரியத்த முடிக்க நினைக்கிறோம். அதையும் நீங்க தான் சரியா கணிச்சி சொல்லணும்..’’ என்று வந்தவர்கள் சொன்னார்கள்.

நாகராஜ் கடகடவெனச்சிரித்தான்

‘‘ஏன்..? இப்படி சிரிக்கிறீங்க..?’’ என்று கேட்டனர்.

‘‘இல்ல.. இன்னைக்கு என்னைய பாத்து இவ்வளவு மரியாதை குடுக்குறீங்க.. என்னோட பேச்ச ரொம்ப மதிக்கிறீங்க . ஆனா நான் ஒரு காலத்தில எப்படி இருந்தேன்னு தெரியுமா..? இப்ப இருக்கிறதுக்கு அப்படியே ஆப்போசிட் எதிர்மறையா இருந்தேன்..’’ என்று நாகராஜ் சொன்னான்.

‘‘என்ன இப்பிடி சொல்றீங்க..?’’ என்று எல்லோரும் ஆச்சர்யமாகக் கேட்டனர்.

‘‘ஆமாங்க.. இப்ப நான் பேசுற உண்மையில ஒரு சதவீதம் கூட நான் பேசல.. வாயில வாரதெல்லாம் பொய் புரட்டு, பித்தலாட்டம், பொய்ய சொல்லியே தான் பொழப்பு நடத்துனேன்.. கொஞ்ச நாள்லேயே பொய் தான் என்னோட வாழ்க்கையா போச்சு.. இப்படியே போயிட்டு இருந்த என்னோட இந்த வாழ்க்கை ஒரு கட்டத்தில வெறுத்துப் போச்சு.. பொய் என்னோட உசுருக்கு உலை வைக்க ஆரம்பிச்சிருச்சு. ஆஹா.. பொய்தானே நம்ம இந்த நிலைக்கு கொண்டு வந்துச்சுன்னு ரொம்பவே பீல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இனிமே பொய்யே பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுல இருந்து ஒரு பொய் கூட நான் சொன்னதில்ல. இப்ப வரைக்கும் என்னோட நாவுல இருந்து ஒரு பொய்யும் வராது. உண்மை பேசுறத ஒரு தவம் மாதிரி பண்ண ஆரம்பிச்சேன். அதுல இருந்து பொய்யே பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். உண்மைய தவிர வேற எதுவும் பேசக்கூடாதுன்னு முடிவு செய்தேன். அத ஒரு வேள்வி மாதிரி பண்ண ஆரம்பிச்சேன் இப்பப்பாருங்க.. என்னோட நாவுல இருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தையும் இப்ப வேத வாக்கா மாறிருச்சு.. முன்னாடி என்னயை வெறுப்பா பாத்த எல்லாரும் இப்ப கையெடுத்துக் கும்பிடுறாங்க.. உண்மைக்கு எவ்வளவு மரியாதைன்னு பாருங்..க பொய் சொல்லி அஞ்சுபத்து சம்பாரிச்சிட்டு இருந்த நான் இப்ப மரியாதை மேல மரியாதை வாங்கிட்டு இருக்கேன்.. தயவு செஞ்சு எல்லாரும் உண்மைய பேசுனீங்கன்னா.. நீங்களும் என்னைய மாதிரி ஆயிரலாம்..’’ என்று நாகராஜ் சொல்ல எல்லோரும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனார்கள்.

உண்மையின் உண்மைத் தன்மையை உணர்ந்தவர்கள் பொய்யை மூட்டை கட்டி வைத்துவிட்டு உண்மைக்கு உதடு திறக்க ஆரம்பித்தனர்.

இந்தப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நாகராஜை எல்லோரும் நன்றியோடு வணங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *