சிறுகதை

உண்மைகள் புரியும்போது | கெளசல்யா ரங்கநாதன்

Spread the love

“என்னங்க, என்னங்க…கொஞ்ச நாட்களாகவே உங்க நடவடிக்கைகள் சரியில்லையோனு தோணுது.. வேணாம்க.. 40 வயசில நாய் குணம்பாங்க”

“அப்படி என்ன தப்பு கண்டுபிடிச்சுட்டே என் மேலே”?

“வேணாங்க.. அந்த அசிங்கத்தை என் வாயால வேற சொல்லணுமா””

“இதுக்கெல்லாமா டப்பிங் வாய்ஸா கொடுக்க முடியும்?”

“இந்த கிண்டல், கேலியெல்லாம் எங்கிட்ட வேணாம்.. பீ சீரியஸ்.. உங்களுக்கே அசிங்கமாயில்லை உங்க செய்கைகள்?”

“என்னனு சொன்னாதானே விளக்கமா நான் பதில் சொல்ல முடியும்”.

“உங்களுக்காக ஆப்டா ஒரு பதில் சொல்லத்தெரியாது?.. கண்ணன்னு பேராச்சே.. அந்த மாயக்கண்ணன்னு நினைப்பாக்கும்?”

“இன்னைக்கு நீ மௌனவிரதம் இருக்கிற நாளாச்சே.. ஏன் இப்படி சம்பந்தா, சம்பந்தமில்லாம எதை, எதையோ….” “உளறிக் கொட்டறேன்னு சொல்றீங்களா?”….

“என் கேள்விக்கென்ன பதில் சொல்லுங்க..?”

“அதான் உன் கேள்வியிலேயே பதிலும் இருக்கே”.

“என்னதான் சொல்ல வர்ரிங்கனு புரியறாப்பல சொல்லுங்களேன்.. நான் என்ன உளறிக் கொட்டறேனா! …பத்திக்கிட்டு வருதுங்க”.

“த பாரு.. எனக்கு உங்கிட்ட இப்ப வெட்டி அரட்டையெல்லாம் அடிக்க நேரமில்லை.. சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமா சொல்லு”.

“பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. நான் சந்தேகப்பட்டது சரியாய் போச்சு.. எப்ப பார்த்தாலும் அவ நினைப்புத்தானா உங்களுக்கு?”

“ஐயோ கண்டிராவியே.. எவ அவனுதான் சொல்லி தொலையேன்”..

“அதான் உங்களையும் அறியாமல் இப்ப அவ பெயரை சொல்லிட்டீங்களே.. அவ ஏற்கனவே கலியாணமானவ.. வேணாம்க”

“இது என்ன புதுக்கூத்து.. என்ன, என்னவோ கதை கட்டி விடறே”..

“இது உண்மையா இல்லாட்டி நல்லாதான் இருக்கும்.. ஆனா என் கண்களால நான் பார்த்துட்டேனே, ஒருமுறை, இரண்டு முறைகள்னா ஏதோ ஏதேச்சையானதுனு நினைச்சு மனசை சமாதானப்படுத்திக்கலாம்.. ஆனா அடிக்கடி, திருட்டுத்தனமா… உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையாங்க? அவ வீட்டுக்காரர் பார்த்துட்டா அப்புறம் நம்ம மானம், மரியாதையெல்லாம் காத்தோட பறந்துடும்.. ஊரே கைகொட்டி சிரிக்கும்..”

“என்னதான் நீ சொல்ல வரே?

“நம்ம அபார்ட்மென்ட்ல தர்ட் ஃபிளோர்ல இருக்கிற அந்த ரத்தினத்தை நீங்க அடிக்கடி கிரவுண்ட் ஃபிளோர்ல இருக்கிற நம்ம ஃபிளாட்டிலிருந்து லுக் விடறது நல்லாவா இருக்கு.. இல்லைனு பொய் மட்டும் சொல்லாதீங்க.. உங்க பலவீனத்தை தனக்கு சாதகமாக்கிக்கிட்டுத்தான் அந்த ரத்தினம்மா மூணாவது ஃபிளோரிலிருந்து கீழே குப்பைகளை அடிக்கடி கொட்டறாங்க.. என்னங்க, நம்ம ஃபிளாட் வாசல்லதானே நகராட்சி குப்பை தொட்டியே வச்சிருக்காங்க..

அன்னன்னிக்கு சேர்ர குப்பைகள், சாப்பிட்ட மிச்சங்கள்னு எல்லாத்தையும் அவங்க வீட்டில ஒரு டஸ்ட்பின் வச்சு அதில சேர்த்துவச்சு குப்பை வண்டி வரப்ப அதிலயோ, இல்லைனா கீழே இறங்கி வரப்ப மாநகராட்சி குப்பை தொட்டிலயோ போடக் கூடாது.. கீழேயும் வீடு இருக்குனுகூட தெரியாத பிறவிகளா என்ன? இதையெல்லாமா மத்தவங்க சொல்லிக் கொடுக்கணும்.. ஏற்கனவே டெங்கு அது, இதுனு ஊரே நாறிக்கிடக்குது.. சுற்றுப்புறத்தை நல்லா வச்சுக்க வேணாமா நாம? முதல்ல நம்ம வீட்டை, நம்ம காம்பவுண்டை, அப்புறம் தெருவை, தெருவைனா,, தெருக்கள்ள கண்ட இடத்தில் வேஸ்ட் பேப்பர்களையோ, குப்பைகளையோ போடறது கண்ட, கண்ட இடங்களில்

சிறுநீர் கழிக்கிறதுனு எல்லாம் நாம் செய்யாம வச்சுக்கிட்டாலே கொசுத்தொல்லை, அதனால பல நோய்கள் வராம தடுக்கலாம் இல்லையா? இப்ப CLEAN INDIA MOVEMENTஐ நம்ம பாரத பிரதமர் கையில எடுத்துக்கலையா? நம்ம ஒவ்வொருத்தருக்கும் பொறுப்புணர்ச்சி வேணாமா, சொல்லுங்க?”

“யார் இல்லைனு சொன்னது?”

” அதான் சொன்னேனே, நம்ம பிளாக்கில் மூணாவது மாடியில் இருக்கிற உங்க அபிமான ரத்தினம் அங்கேயிருந்தே கீழே குப்பை கொட்டறதை.. நம்ம பெண் அன்னைக்கு ஸ்கூலுக்கு கிளம்பிக்கிட்டிருக்கிறப்ப, அவங்க வீசியெறிந்த குப்பை முழுக்க நம்ம குழந்தை மேல விழுந்து, அது அழுதுக்கிட்டே வந்து வேற யூனிபார்ம் போட்டுக்கிட்டு போக வேண்டியதாயிருச்சு.. அப்பவாவது அந்தம்மா, கீழே கூட இறங்கி வர வேணாம்; மேலே இருந்தாவது தன் செய்கைகளுக்கு ஒரு ஸாரி கேட்டிருக்கலாம்ல.. அப்படியே வெறிக்க பார்த்துக் கிட்டிருந்தாங்க.. எனக்கு வந்த கோபத்தில் நாக்க பிடுங்கிக்கிறாப்பல நாலு வார்த்தை கேட்டுடலாம்னு தோணிச்சு.. ஆனா நாகரீகம் கருதி என்னை அடக்கிக்கிட்டேன்.. இன்னொரு நாள், நம்ம வீட்டுக்கு வந்த என் சினேகிதி ஒருத்தி அந்தம்மா மேலேயிருந்து வீசியெறிஞ்ச வாழைப்பழ தோல்ல வழுக்கி விழ இருந்தா.. அப்பவும் கோபத்தை அடக்கிக்கிட்டேன்.. ஏன் தெரியுமா? உங்க மனம் கவர்ந்த அந்த ரத்தினம்மாள் மனசு நோகக் கூடாதுல்ல..

அதனால.. ஆனா என்னைக்குமே நான் இப்படி பொறுமையாய் இருப்பேன்னு நினைச்சிராதீங்க.. அப்படியொரு நாள் நான் burst ஆயிட்டா, கத்தி, கூச்சல் போட்டு, அவங்க வீட்டுக்காரரை வெளியில் வரவழைச்சு டோஸ் விடுவேன்.. அபார்ட்மென்ட் செயலர் கிட்டவும் சொல்லி முறையிடுவேனாக்கும்.. ”

“அசடு.. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிராதே.. பாவம் அந்தம்மா .. உடனே கண்டமேனிக்கு மனசை அலை பாய விடாதே.. அந்தம்மா ஏன் அப்படி செய்யறாங்கனு தெரியுமா உனக்கு? அவங்க மனநிலை பிறழ்ந்தவங்க.. காரணம், அவங்க புருஷனுக்கு ஏற்கனவே இன்னொருத்திகூட தொடர்பு இருக்குன்றதாலவும் காலேஜில படிச்சுக்கிட்டிருந்த அவங்களோட ஒரே பெண் யார்கூடவோ ஓடிப்போனதையும் ஜீரணிக்க முடியாததாலதான்..

இப்ப சொல்லு.. அவங்க புருஷங்காரனை பார்த்து சுலபமா இதுபத்தி முறையிட்டுடலாம் தான்.. குடிகாரனான அவன் பாவம் இவங்களை போட்டு மொத்தியெடுப்பான்.. பாவம்.. இந்தம்மாவை பெத்தவங்களோ, சொந்தக்காரங்கள்னோ, யாருமில்லாததால இவங்க வெம்பி, வெதும்பி சில சமயங்களில் தான் என்ன செய்யறோம்னு கூட தெரியாமதான் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்க….இதுதாம்மா நிசம்.. அப்புறம் நீ என்ன வேணா செஞ்சுக்க”..

என்னை மன்னிச்சிடுங்க என்றாள் .

உண்மைகள் புரியும்போது சில ரணங்கள் வந்த சுவடு தெரியாமல் ஆறிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *