செய்திகள்

உண்டியலில் சேமித்த பணத்தை அனுப்பிய சிறுமி

Spread the love

விழுப்புரம், மார்ச்.29-–

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகவும், அரசு மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரத்தை சேர்ந்த 2½ வயது சிறுமி, கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காகவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காகவும் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.

-விழுப்புரம் மேற்கு சண்முகபுரம் தெருவை சேர்ந்த ஆடிட்டர் ரகுநாதன் –- ஷாலினி தம்பதியரின் மகள் ஸ்பூர்த்தி. இவளுக்கு சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவளது பெற்றோர் அவ்வப்போது ரூ.5, ரூ.10 என கொடுத்து வந்தனர். அந்த பணத்தை சிறுமி ஸ்பூர்த்தி, உண்டியலில் சேர்த்து வைத்தாள். இந்த சூழலில் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரை தொலைக்காட்சி மூலம் கண்ட சிறுமி, அவர்களுக்கு உதவுவதற்காக தான் உண்டியலில் சேமித்து வைத்த ரூ.4,400–-ஐ வழங்கும்படி தனது பெற்றோரிடம் கூறினாள்.

மகளின் வேண்டுகோளின்படி ரூ.2 ஆயிரத்து 200-ஐ பிரதமரின் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கும், ரூ.2 ஆயிரத்து 200-ஐ தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கும் அவளது தந்தை ரகுநாதன், ஆன்-லைன் மூலம் அனுப்பினார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமி கருணை உள்ளத்தோடு நிதி உதவி வழங்கியது விழுப்புரம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *