செய்திகள்

உணவு பாதுகாப்பு, உணவு பழக்கங்கள்: மாணவர்கள் கட்டாயம் அறிய வேண்டும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

Spread the love

சென்னை, ஜூன்.8–

முதலாம் ஆண்டு உலக உணவு பாதுகாப்பு தினத்தில் மாணவர்கள் உணவு பாதுகாப்பு குறித்தும் உணவு பழக்கங்கள் குறித்தும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அறிவுரை வழங்கினார்.

சென்னை சேத்துப்பட்டு யூனியன் கிறிஸ்டியன் பள்ளியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பாரம்பரிய உணவு கண்காட்சி, நடமாடும் உணவு ஆய்வகத்தை பார்வையிட்டார். உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காட்சி பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, உலக உணவு பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றார்.

விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–

ஒவ்வொரு மாணவருக்கும் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளில் 1,347 பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,392 ஆசிரியர்கள் பயிற்சியின் மூலம் கற்ற தகவல்கள் 48,162 மாணவர்களுக்கு கலந்துரையாடல் முறையின் மூலம் கற்பிக்கப்பட்டுள்ளது. உணவில் உள்ள கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட 2,970 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,186 ஆசிரியர்களுக்கு இச்சோதனை குறித்து பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் மூலம் இதுவரை 3.53 லட்சம் பள்ளி மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 130 சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டு இதன் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை வழங்கிட உணவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.40 லட்சம் சுற்றுலா பயணிகள் பயனைடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமாக உணவு இருக்கும் பட்சத்தில், அதனை வீணாக்காமல் அதனைப் பெற்று, யாருக்கு உணவு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு பயன்படும் வகையில் “நோ புட் வேஸ்ட்” தன்னார்வ தொண்டு நிறுவனம் பகிர்ந்தளிக்கிறார்கள். சென்னையில் நான்கு ‘நோ புட் வேஸ்ட்’ (No Food Waste) வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதர மாநகராட்சிகளில் தலா 1 வாகனம் வீதம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1.5.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் உணவு தரம் குறித்து வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்க 9444042322 என்ற கைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் புகார்கள் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 8750 புகார்கள் வரப்பெற்று அனைத்து புகார்களுக்கும் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பில் உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட, புகார் மற்றும் குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கென தனி வலைதளம் மற்றும் கைபேசி செயலி (Website & Mobile App) விரைவில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் வனஜா, சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவி, யூனியன் கிறிஸ்டியன் பள்ளி செயலாளர் வினோத் சைமன், முதல்வர் சுந்தரத்தாய் லஸாராஸ், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

* * *

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் வழங்கப்பட்டுவிட்டது

உலக உணவு பாதுகாப்பு தின உறுதிமொழியை ஏற்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினர் இந்தியா வருகின்றனர். வரும் 10–ந்தேதி முதல் 15ம் தேதி வரை அவர்கள் ஆய்வு நடத்துகின்றனர். தோப்பூரில் 220 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டது. திட்டமிட்டபடி அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *