செய்திகள்

உணவு தட்டுப்பாட்டிலிருந்து எந்த நாடும் தப்ப முடியாது

ஐ.நா. பொதுச்செயலர் தகவல்

நியூயார்க், ஜூன் 25–

உலக அளவில் உணவு தட்டுப்பாட்டால் நடக்க இருக்கும் பேரழிவிலிருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் எப்போதும் இல்லாத அளவுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று, கடுமையான பருவநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் – ரஷ்யா போரானது உலகளவில் பல பொருளாதார வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள், உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல நாடுகளில் உரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். அதனால் பல நாடுகளில் அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்த நாடும் தப்ப முடியாது

இந்நிலையில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பணக்கார, வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், “இந்த ஆண்டு பல நாடுகள், உணவு பஞ்சம் அறிவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பல நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

உலக அளவில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் கடும் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வந்தது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இந்த நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், “ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உரம் எரிபொருள் விலை உயர்வினால் அறுவடைகள் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த உணவு பிரச்சனை உலக அளவில் பெரும் உணவு கட்டுப்பாட்டு பிரச்சினையாக உரு மாறும். இந்த உணவு தட்டுப்பாடு ஏற்படுத்தும் பேரழிவிலிருந்து எந்த நாடும் தப்ப முடியாது. இதை சமாளிக்க ஐ.நா. அதிகாரிகள் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.