போஸ்டர் செய்தி

உடுமலையில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானை பிடிபட்டது

உடுமலை, பிப். 15–

உடுமலை பகுதியில் கடந்த 15 நாளாக முகாமிட்டிருந்த காட்டு யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் 15வது நாளாக பொதுமக்களை அச்சுறுத்தியும் விளைநிலங்களுக்கு சேதம் ஏற்படுத்தியும் வந்த சின்னதம்பி யானை வனத்துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

காலை 5 மணிக்கு தொடங்கிய நடவடிக்கை 5 கட்டமாக நடந்தது. முதல் 4 முறை செலுத்தப்பட்ட ஊசிகளில் ஒன்று மட்டுமே யானையின் உடலில் பட்டது. மற்ற மூன்று ஊசிகள் தவறியது.

பிளிறிய சின்னதம்பி

கடைசி முயற்சியாக செலுத்தப்பட்ட ஊசி யானையின் உடலில் பின்புறமாக பட்டது. இதனை தொடர்ந்து, யானை பிளிறியவாறு கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கொண்டது.

தொடர்ந்து அரை மணி நேரத்தில் மயக்க நிலையை அடைந்தது. தொடர்ந்து கும்கி யானைகள் மூலம் சின்னதம்பி யானையின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு லாரிகளில் ஏற்ற தயார் செய்யப்பட்டது.

இதற்கென, கேரள மாநில வனத்துறை மூலம் வயநாடு பகுதியிலிருந்து யானைகள் ஏற்றும் வண்டிகள் கொண்டுவரப்பட்டிருந்தது.

முகாமில் வைத்து பராமரிப்பு

இது குறித்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, உயர்நீதிமன்ற உத்தரவு படி, வெற்றிகரமாக யானைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடித்திருக்கிறோம்.

இந்த யானை டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு முறையாக பராமரிக்கப்படும். அரசின் உத்தரவுப்படி கூட்டுமுயற்சியால் இந்த யானையை பிடித்திருக்கிறோம்.

மருத்துவர்கள் கூற்றுப்படி 8 மில்லி போதை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்கு சின்னத்தம்பி யானை முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என கூறினார்.

கடந்த 15 நாளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சின்னதம்பி யானை பிடிபட்டு உள்ளது அப்பகுதி மக்களை நிம்மதியடைய செய்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *