முழு தகவல்

உடல் உறுப்பு தானம்: யார் செய்யலாம்!

உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்பு கண்தானமும் செய்வது மிகச் சிறப்பானது என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். 18 வயது முதல் 60 வயது வரையில் உள்ள ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம். நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.

25 உறுப்புகள் தானம்

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.

எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.

முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை

நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெக்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.

1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.

உடல் உறுப்பு பிரித்தெடுப்பது பற்றி அறிய… https://tinyurl.com/y347mrqn இணைப்பில் பாருங்கள்.

தமிழ்நாட்டில் எப்போது தொடக்கம்?

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் (டிரான்ஸ்டன்) என்ற முன்னோடி அமைப்பை 12.12.2014 அன்று முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1382 கொடையாளர்களிடமிருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

உறுப்புகள் தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், அவர் இருக்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இன்னொரு வழிமுறையும் உண்டு. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையை தமிழக அரசு இதற்கென்றே அமைத்துள்ள https://tinyurl.com/y5hbpyc9 , https://tinyurl.com/yxuwhvfj என்ற இணையதளத்துக்குப் போய் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த அட்டையில் பெயர், ரத்தப் பிரிவு, சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல்… என, எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும். உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துகொண்டவர்கள் கண்டிப்பாகத் தங்கள் குடும்பத்தினரிடம், அவரது விருப்பத்தைத் தெரிவித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும்.

உறுப்புகளின் காலம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து ஒவ்வொரு உறுப்பும் எத்தனை மணி நேரம் வரையில் எடுத்துப்பயன்படுத்தலாம் என்றால், இதயம் – 6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம் (Kidney) – 72 மணி நேரம் வரையிலும், கல்லீரல் (Liver) – 24 மணி நேரம் வரையிலும், நுரையீரல் (Lungs) – 4 – 6 மணி நேரம் வரையிரலும், கணையம் (Pancreas) – 24 மணி நேரம் வரையிலும், கண் விழித்திரை (Corneas) – 14 நாள்கள் வரையிலும், எலும்பு மஜ்ஜை (Bone Marrow) -5 நாள்கள் வரையிலும், தோல் (Skin) – 5 வருடங்கள் வரையிலும், எலும்பு (Bone) – 5 வருடங்கள் வரையிலும், இதயத்தின் வால்வுகள் ( Heart valves) – 10 வருடங்கள் வரையிலும் பதப்படுத்தி வைத்திருந்து மற்றவருக்குப் பயன்படுத்த முடியும்.

எனவே, உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குப் பதிவு செய்வதோடு உரிய நேரத்தில் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதும் அவசியம். எவ்வளவு விரைவாக உடல் உறுப்புகள் மாற்றப்படுகிறதோ, அந்த அளவுக்கு பயனாளி உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உடல் தானம் குறித்து முதல்வர் வேண்டுகோள் உள்ளிட்ட விவரங்களுக்கு… https://tinyurl.com/yxnxswdg இணைப்பில் பாருங்கள்.

உடல் உறுப்பு தானம் குறித்து ஆங்கிலத்தில் அறிய… https://tinyurl.com/y3458jtc

இதுகுறித்த முழுமையான விவரங்களுக்கு.. https://tinyurl.com/yxpe6box

தொகுப்பு: மா இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *