சென்னை, ஜூன் 29–
உடல் உறுப்பு தானம் செய்த ரோஸ்மேரி என்பவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், ஷாவாலஸ் காலனியை சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் உடல்நலக் குறைவால் காடாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 24–ந் தேதி அன்று இறந்துவிட்டார். ரோஸ்மேரி என்பவரின் குடும்பத்தினர், அன்னாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார்கள். குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் ரோஸ்மேரி என்பவரின் கல்லீரல் மற்றும் நுரையீரல்தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்கவும், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவின் பேரிலும் உடல் உறுப்பு தானம் செய்த ரோஸ்மேரி என்பவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வேளச்சேரி வட்டாட்சியர் ராதிகா மற்றும் துணை வட்டாட்சியர் கிருஸ்துராணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இந்நிகழ்வில் காவல் துறையினர், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள்ளும் கலந்து கொண்டனர்.
#அரசு மரியாதை