செய்திகள்

உடல்தகுதி தேர்வில் பலியானாோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Makkal Kural Official

ராஞ்சி, செப் 2

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மரணித்துள்ள நிலையில், உடற்தகுதித் தேர்வை மாலையில் நடத்த முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் முழுவதும் ஆகஸ்ட் 30 ந்தேதி, 7 மையங்களில் காவலர் உடற்தகுதித் தேர்வு நடந்துள்ளது. இதில் 1,27,772 இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில், 21,582 பெண்கள் உட்பட 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 22 ந்தேதி தொடங்கிய ஆட்சேர்ப்பு செயல்முறை, பல கட்டங்களாகச் நாளை (செப்டம்பர் 3 ந்தேதி) வரை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் உடற்தகுதித் தேர்வில் 10 கிலோ மீட்டர் தூரம் உச்சி வெயிலில் ஓடிய 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்த நிலையில், பணியிலிருந்த காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணத்துக்கு காரணம்?

உடற்தகுதித் தேர்வில் இறந்தவர்கள், ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கலாம் அல்லது தேர்வுக்கு முன்பாக எனர்ஜி பானங்களை குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நின்றதும், சுட்டெரிக்கும் வெயிலும் கூட மரணத்துக்கு வழிவகைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

“துரதிர்ஷ்டவசமாக இறந்த 11 பேர் குறித்தும் இயற்கைக்கு மாறான மரணம் (unnatural death) என வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மரணத்துக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. உண்மையான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியிருக்கிறார். மேலும் பிற்பகலில் நடைபெறும் ஓட்டம் முதலான உடற்தகுதித் தேர்வுகளை, மாலை 4:30 மணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *