செய்திகள்

உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் கொண்டு வந்த தந்தை – மகள் கைது

Makkal Kural Official

சென்னை, நவ. 5

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விட்டு செல்ல முயன்ற தந்தை, மகளை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவிஸ்ரீ (18). கல்லூரி மாணவி. அவரது தந்தை பாலசுப்பிரமணியம் (46). இருவரும் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் நேற்று மாலை வந்துள்ளனர். ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் இருவரும் இரண்டு சூட்கேசுகளுடன் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் ரயில் இறங்கிய இடத்திலேயே சூட்கேஸை விட்டுவிட்டு நைசாக நழுவியுள்ளனர். அதைப்பார்த்த பொது மக்கள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரும், கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாரும், கறுப்பு நிறம் கொண்ட சூட்கேஸ் அருகே வந்து பார்த்த போது அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் ஆய்வாளர் சசிகலா மற்றும் அவரது குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து தப்பி ஓடிய 2 பேரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் ராஜேந்திரன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். உடன் வந்தது அவரது 17 வயது மகள் என்பதும் தெரியவந்தது. பாலசுப்பிரமணியம் பொற்கொல்லர் தொழில் செய்து வருவதும் தெரியவந்து.

சூட்கேஸில் துண்டு துண்டாக

வெட்டிய உடல்

இரவு முழுவதும் போலீசார் நடத்திய விசாரணையில் பாலசுப்பிரமணிம் கூறியதாவது:

நெல்லூரைச் சேர்ந்த மூதாட்டி மன்னம் ரமணி (65) என்பவரை நகைக்காக ஆசைப்பட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து பெட்ஷீட்டை தலையில் போட்டு மூடி, கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். மேலும் அவர் அணிந்திருந்த தாலி சரடு மூன்று சவரன், கருப்பு பூசல் 2 சவரன் மற்றும் இரண்டு கம்மல் ஒரு சவரன் மொத்தம் 6 பவுன் நகையை உருக்கி வீட்டில் மறைத்து வைத்தோம். மேலும் அந்த மூதாட்டியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்தோம். பிறகு, ரயிலில் ஏறி சென்னைக்கு வர திட்டமிட்டு சூளூர்பேட்டையில் ரயிலில் ஏறினோம். ரயில் மீஞ்சூர் வந்தபோது, இங்கு இறங்கி சூட்கேஸை வைத்துவிட்டு சென்றுவிடலாம் என திட்டமிட்டோம். சூட்கேஸுடன் இறங்கி பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு, தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டுவிட்டோம் என்று பாலசுப்பிரணியம் கூறினார்.

இதனையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை வழக்கு பதிந்து, தந்தை, மகள் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *