ஆர். முத்துக்குமார்
பிரதமர் மோடி நமது பாரம்பரிய சிறப்புகளான யோகா கலைக்கும் உணவு தானியமான மில்லட்டிற்கும் மிகப்பெரிய விளம்பரத் தூதராக செயல்பட்டு அவற்றுக்கு மேலும் அங்கீகாரத்தை ஈட்டியுள்ளார்.
யோகா என்றாலே இந்தியா என்ற எண்ணத்தை சர்வதேச அளவில் தடம் பதிக்க வைத்த பெருமை பிரதமர் மோடிக்கு நிச்சயம் உண்டு. பல ஆயிரம் ஆண்டுகளாக நமது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் இந்த யோகா கலை இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்ற பிறகு இதன் சிறப்புக்களை ஆய்வு செய்வதும் அதிகரித்து வருகிறது.
எந்த விசேஷ கருவிகளின் உதவியுமின்றி காற்றோட்டம் நிறைந்த ஒரு இடத்தில் யோகா உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். அதனால் நாடெங்கும் பொதுவெளிகளில் குறிப்பாக பூங்காக்களில் கடற்கரையில் பலர் ஒன்று கூடி தினமும் யோகா பயிற்சியை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட யோகா மிகமுக்கிய உடற்பயிற்சியாக அறிவிக்கப்பட்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல இடங்களில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீபமாக சர்வதேச அளவில் பெரிய நகரங்களில் புத்தம் புதிதாக பல நூறு யோகா பயிற்சி நிலையங்கள் உருவாகி விட்டது! இங்கு மாதம் பல நூறு டாலர்கள் கட்டணம் செலுத்தி பயில்கிறார்கள்.
மொத்தத்தில் யோகா மீது அதிகரித்து வரும் மோகம் காரணமாக மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பயிற்சியாக உயர்ந்து விட்டது.
இன்றைய அவசரமும் பதட்டங்களும் நிறைந்த வாழ்வு முறையில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாது திணறுபவர்களுக்கு யோகா பயிற்சி மிக வசதியான ஒன்றாகும். மேலும் கொரோனா பெரும் தொற்றின் கோரப் பிடியில் இருந்து வெளி வந்து விட்டாலும் அதன் தாக்கம் முற்றிலும் நீங்கி விடவில்லை என்பதையும் மறந்து விடக் கூடாது.
யோகாவில் பிரதானமாக மூச்சுப் பயிற்சி அடங்கியிருப்பதால் அதில் மூச்சு குழாய்களையும் சுவாசப் பையையும் உறுதி செய்யும் அம்சங்கள் இருக்கிறது. கோவிட் பாதிப்பு அண்டாமல் இருக்கவும் தொற்று பரவல் தடைப்படவும் மிக அவசியம் உதவும் உடற்பயிற்சி யோகாவாகும்.
மனநோய்களிலிருந்து விடுபட அருமருந்து நிச்சயம் யோகா பயிற்சியாகும். அதிகாலையில் யோகா பயிற்சி செய்து முடித்த சில நிமிடங்களில் நமது உடலும் உள்ளமும் துள்ளி எழுந்து புத்துணர்ச்சியுடன் செயல்பட துவங்கி விடும்.
நமது உடல் சோர்வு நீங்கி விட்டால் சுயத்தையும் சுற்றத்தையும் நம்பிக்கையுடன் நோக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவோர் தங்களது உடல் வலிமை உயர்த்த யோகாவையே நாடுகிறார்கள். சர்வதேச நட்சத்திர விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமாக யோகா பயிற்சியாளர்கள் மாதச் சம்பளத்தில் பணி அமர்த்தப்பட்டும் இருப்பார்கள்.
யோகாப் பயிற்சியை ஜவஹர்லால் நேரு பிரபலப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் கூறிய நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உலகம் முழுவதும் யோகாவைப் பிரபலப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டியுள்ளார்.
மோடியின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என கடந்த 204 ம் ஆண்டு ஐ.நா. சபை அறிவித்தது. இதையடுத்து 9 வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகாப் பயிற்சி செய்யும் படத்துடன் சர்வதேச யோகா தினம் என நேற்று பதிவிடப்பட்டது.
இப்படியாக நமது பாரம்பரிய யோகா இன்று உலகமே வியந்து பாராட்டி தங்களது சொந்த மண்ணில் செழித்தோங்கி வளர்ந்து வரும் நிலையில் நம் மண்ணில் யோகாவின் சக்திகள், நுணுக்கங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் ஊக்கம் தர வேண்டும்.
ஆரோக்கியமான தேசமாகவும் சக்திவாய்ந்த பொருளாதாரமாகவும் உயர யோகா மிக உதவியான கருவியாக மாறி விட்டது.