செய்திகள்

‘உடலில் வலிமை, உள்ளத்தில் வலிமை இருந்தால் வாழ்வை வெல்லலாம்; சோதனைகளில் சாதனை படைக்கலாம்’’: மா.சுப்பிரமணியன்

* 25 ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டேன்

* கால் முறிந்து 6 இடங்களில் எலும்பு நொறுங்கி படுக்கையில் கிடந்தேன்

‘‘21 மாநிலங்களில் 21 கி.மீ. மாரத்தான் ஓடி விட்டேன்; இன்னும் 15 மாநிலங்களே பாக்கி; முடித்துக் காட்டுவேன்’’

சென்னை, மே.20–

‘‘உடலில் வலிமை, உள்ளத்தில் வலிமை இருந்தால்… வாழ்க்கையில் எதிர்ப்படும் எத்தனையோ சோதனைகளையும் சமாளிக்கலாம்; சாதனை படைக்கலாம். எதற்கும் நெஞ்சுரம் வேண்டும்’’ என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதிபடக் கூறினார்.

‘‘இந்தியாவில் என் கால் படாத மாநிலமே இருக்கக் கூடாது என்பதில் தணியாத தாகத்தில் இருக்கிறேன். அதற்காகவே நான் 21 கி.மீ. தூரம் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவில் மொத்தம் 36 மாநிலங்கள் உள்ளன. இதில் இதுவரை 21 மாநிலங்களில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடி இருக்கிறேன். இன்னும் 15 மாநிலங்களே பாக்கி. அதையும் வெற்றிகரமாக முடித்து விட்டால்… என் கனவு நனவாகிவிடும்’’ என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார் மா.சுப்பிரமணியம்.

‘‘சமீபத்தில் டெல்லியில் தி.மு.க. அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது நானும் டெல்லி போய் இருந்தேன். அந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நொய்டாவிலும், பாட்னாவிலும் (பீகார்) மாரத்தான் ஓட்டம் ஓடி திரும்பினேன்’’ என்பதையும் மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.

‘கவிதை உறவு’ அமைப்பின் பொன் விழா மற்றும் எழுத்தாளர் – கவிஞர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனின் பவள விழா நிகழ்ச்சி, தி.நகர் வாணி மஹாலில் நேற்று முன்தினம் மாலை மிகச்சிறப்பாக நடந்தது. நிகழ்வில், ‘கவிதை உறவு களஞ்சியம்’ என்ற நுாலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் பெற்றுக் கொண்டார்.

கவிதை உறவு ஆண்டு மலரை, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன் வெளியிட, நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தன் மாரத்தான் ஓட்டம் பற்றிய விவரத்தை பெருமிதத்தோடு கூறினார்.

இளமைத் தோற்றம்

வயது என்ன?

‘‘இங்கே என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நல்லிகுப்புசாமி செட்டியார் வயது என்ன? என் இளமையின் ரகசியம் என்ன என்று ஒரு கேள்வியை கேட்டார். எனக்கு 62 வயதாகிறது. இளமையோடு இருப்பதாகச் சொல்வதைக் கேட்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதில் தந்து, தன் கடந்த காலம் பற்றிக் குறிப்பிட்டார்.

‘எனக்கு திடீரென்று நீரிழிவு நோய் வந்து பாதிக்கப்பட்டேன். அது 1995–96ம் ஆண்டுகாலக்கட்டம். அப்போதெல்லாம் இன்றைய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. உடனிருந்தவர்கள் பயமுறுத்திவிட்டார்கள். அதிகபட்சம் 15,20… ஒரு சில ஆண்டுகளே… என்று பயமுறுத்தி விட்டார்கள். நான் கொஞ்சமும் கலங்கவில்லை. உடற்பயிற்சி – உடல் வலிமை, உள்ளத்தில் வலிமையோடு இருந்தேன். வெற்றி பெற்றேன். அந்தத் துணிச்சல் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது’ என்றார்.

சில ஆண்டுக்கு முன் கால் முறிந்து 6 இடங்களில் எலும்புகள் நொறுங்கின. படுத்த படுக்கையில் கிடந்தேன். இனி நடக்கவே முடியாது என்று அதைரியம் ஊட்டினார்கள். அதையும் உடைத்துக் காட்டவே நடந்தேன். ஓடினேன்… மாரத்தான் ஓட ஆரம்பித்தேன். இதுவும் சாத்தியமா… என்று என்னைப் பார்த்து பலரும் பிரமித்தார்கள். அடுத்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவே நான் இப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். மோட்டிவேஷன்… உந்துவிசையாக இருக்கிறேன்’ என்று மா.சுப்பிரமணியன் சொன்னபோது, அரங்கில் எழுந்த கைத்தட்டல் அடங்க ஒரு நிமிடம் ஆனது.

சுயநலத்துக்காக எழுதவில்லை: நீதிபதி ஜெகதீசன்

ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன் பேசுகையில், ”ஏர்வாடி ராதாகிருஷ்ணன், 75வது பிறந்த நாளை கொண்டாடும் போது, 75 நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் எழுத்து ஆர்வம் அதிகம் கொண்டவர். சுயநலத்திற்காக எழுதவில்லை. கவிதை உறவு இதழையும் சுய நலத்திற்காக நடத்தவில்லை. அவரது இதழ் வாயிலாக பல கவிஞர்களை உருவாக்கிஉள்ளார்,” என்று மனம் திறந்து பாராட்டினார்.

விழாவில் எழுத்தாளர் சுப்ரபாலனுக்கு கலைமாமணி விக்கிரமன் விருது; மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர் மற்றும் எழுத்தாளரான லேனா தமிழ்வாணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; கவிஞர் வெண்ணிலாவிற்கு எழுத்துச் செல்வர் விருது.

கவிஞர்கள் தவசீலன் மற்றும் நன்னன்குடி அவ்வை ஆகியோருக்கு கவிதைச் செல்வர் விருது; முதியோர் நல மருத்துவர் சாந்திக்கு மனிதநேய மாமணி விருது; கண்ணதாசன் மகன், காந்தி கண்ணதாசனுக்கு பதிப்புச் செல்வர் விருது; கவிஞர் இளங்கோவுக்கு -தமிழ்ப்பணிச் செம்மல் விருது; ஈரோடு அரங்க.சுப்ரமணியன் மற்றும் கல்பாக்கம் ரேவதி ஆகியோருக்கு தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், மரபு கவிதை, புது கவிதை என ஒவ்வொரு பிரிவுகளிலும் போட்டியில் வென்றவர்களுக்கு (பிரபல முன்னணிக் கவிஞர் நெல்லை ஜெயந்தா உள்பட) பரிசு மற்றும் பொற்கிழி வழங்கப்பட்டது.

முடிவில் வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் ராமநாதன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்இயலன், கல்பாக்கம் ரேவதி, தொலைபேசி மீரான் தலைமையில் நண்பர்கள் குழுவும், ‘கேபிட்டல் கிச்சன்’ குமாரும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.