செய்திகள்

உடனடியாக போரை நிறுத்துங்கள்: ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

ஜெனீவா, மார்ச் 1–

ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை ஆகும்.

அதன்படி ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் கூறுகையில் ‘‘ உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கிருக்கும் ரஷ்யப் படைகள் நிபந்தனைகளின்றி வெளியேற வேண்டும்.

அணுசக்தி தற்காப்பு பிரிவை தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவிட்டது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கான நெருக்கடி ஆகும்.

அணு ஆயுத மோதல் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. இதன் மூலம் ஒரு பயனையும் அடைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். போர் நிறுத்த நடவடிக்கையை உக்ரைன், ரஷ்யா மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.