டெல்லி, செப். 20
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்படுவதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரமடைந்த 1947 ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறியதாவது:–
தமிழில் மொழிபெயர்ப்பு
‘அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட இந்தி, வங்காளம், தமிழ் உள்பட 22 மொழிகளில் தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் பணியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. விசாரணையின்போது ‘மின்னணு உச்சநீதிமன்ற அறிக்கைகளில் (இ-எஸ்சிஆா்)’ உள்ள தீர்ப்புகளில் இருந்து, வழக்குரைஞர்கள் நடுநிலையான மேற்கோள்களை வழங்கலாம். இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களை அடைவதை இது உறுதிப்படுத்தும். மொழிபெயர்க்கப்பட்ட தீர்ப்புகள் இறுதி ஆய்வு செய்யப்படுகிறது. இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடைபெற்று வருகின்றன எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.