ஆர். முத்துக்குமார்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான, மர்ம கதையில் வரும் திடீர் அதிர்ச்சிகள், மகிழ்ச்சிகளுக்கு பஞ்சமின்றி ஒருவழியாக இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது.
கால் இறுதி போட்டிகள் ஒருவழியாக யார் யார் அரையிறுதிக்கு செல்வார்கள் என்று தீர்மானித்தது.
இந்தியாவுக்கு அக்கட்டத்தில் ஜிம்பாப்வேயுடன் இருந்த மோதலில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி என்று இருந்தது.
ஆனால் அன்று காலை தென்ஆப்பிரிக்காவை கத்துக்குட்டிகளாக இருந்த நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடி ஜாம்பவான் அணியை தோற்கடித்து விட்டது!
எந்த பாணி கிரிக்கெட் உலக கோப்பையையும் இதுவரை வெல்லாத ஒரு அணி தென்ஆப்பிரிக்கா என்பதை இம்முறையாவது மாற்றுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் இப்படி கால் இறுதியில் தோற்று விட்டதால் அக்கணமே இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து விட்டனர்!
அன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மோதிய பாகிஸ்தானும் பங்களாதேஷை வென்றால் தான் அரையிறுதியில் இடம் என்ற நிலையையும் ஏற்படுத்தியது.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இப்படி வெளியேற வேண்டிய விளிம்பில் இருந்த பாகிஸ்தான் சிறப்பாக ஆடி தெய்வாதீனமாக அரையிறுதியில் நியூசிலாந்தை சந்திக்க இருக்கிறது.
ஆக பாவம், தென்ஆப்பிரிக்கா, வென்று அரையிறுதி செல்லுமுன், ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதை உறுதி செய்வது போல் தோற்று வெளியேறி பாகிஸ்தானுக்கு மறுஜென்மம் எடுத்து அரையிறுதியில் புது நம்பிக்கையுடன் விளையாடத் தயாராகி விட்டது.
இந்தியாவும் நியூசிலாந்தும் வெவ்வேறு பிரிவுகளில் முதல் இடத்தில் இருப்பதால் முதல் அரையிறுதியில் 9–ம் தேதி நியூசிலாந்து பாகிஸ்தானுடன் மோதுகிறது.
மறுநாள் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகிறது. இதில் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் கிரிக்கெட் ஆடும் நாடுகளில் சாமானிய நாடுகளிடம் தோற்று இருப்பதால் அரைஇறுதியில் வலுவான அணிகளான நியூசிலாந்தும் இந்தியாவும் வெல்லும் வாய்ப்புகளை கொண்டு இருப்பது உண்மை தான்.
ஆனால் நெதர்லாந்து அணியிடம் வலுவான தென் ஆப்பிரிக்காவே தோற்றது அல்லவா? அதேபோல் யாருக்கு தோல்வி என்பதை அன்றைய ஆட்டத்தில் எப்படி இருக்கப்போகிறது என்ற மர்மம் தான் டி20 உலக கிரிக்கெட் ஆட்டத்தின் சிறப்பாகும்.
ஆனால் நம் அணியில் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் கோலி, சூர்யகுமார், ரோஹித், ராகுல் இருப்பதுடன் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப்பண்டோ அல்லது தினேஷ் கார்த்திக்கோ யார் அணியில் இருந்தாலும் அவர்களும் பேட்டிற்கிற்கு வலு சேர்ப்பார்கள்.
பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அர்ஷ்தீப், புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் விக்கெட் வீழ்த்துவதுடன் அதிரடியாக ஆடி வெற்றி இலக்கை தொட வைக்க முடியும் என்று பல ஆட்டங்களில் நிரூபித்து உள்ளவர்கள் ஆவர். 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அதிக ஸ்டிரைக் ரேட் (100க்கும் அதிகமான பந்துகளைச் சந்தித்து) வைத்துள்ள வீரர் என்ற சாதனைக்கும் சூர்யகுமார் சொந்தக்காரர் ஆகி உள்ளார். இந்தத் தொடரில் அவர் 193.96 ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார். 2010ல் ஆஸி. வீரர் மைக் ஹஸ்ஸி 175.70 ஸ்டிரைக் ரேட்டையும் 2012–ல் எல்.ரைட் 169.29 ஸ்டிரைக் ரேட்டையும் 2022ல் கிளவுன் பிலிப்ஸ் 163.86 ஸ்டிரைக் ரேட்டையும் 2007ல் கெவின் பீட்டர்சன் 161.81 ஸ்டிரைக் ரேட்டையும் வைத்திருந்தனர்.ஒருவேளை பாகிஸ்தான் இறுதிக்கு வந்துவிட்டால் இத்தொடரின் துவக்க கட்டத்திலேயே பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா நம்பிக்கையுடன் மோதும்.
நியூசிலாந்தும் இந்தியாவுடன் ஆடிய டி20 போட்டிகள் 59 ஆகும். அதில் இந்தியா 21 ஆட்டங்களில் ஜெயித்தும் 12 ஆட்டங்களில் மட்டும் தோற்றுள்ளது. 26 ஆட்டங்கள் சமநிலையில் டிராவாகி உள்ளது.
இது எல்லாம் இந்திய ரசிகர்கள் விரும்பும் சாதகமான தகவல்கள்! ஆனால் பாகிஸ்தான் இதுவரை ஆடியுள்ள 212 டி20 ஆட்டங்களில் 129 போட்டிகளில் வென்று டி20 வெற்றி பெற்ற நாடுகள் பட்டியலில் முன்னிலையில் இருப்பதை மறந்து விடக்கூடாது.
நடப்பு தொடரில் அபாரமாக விளையாடும் அணி நிச்சயம் நியூசிலாந்தாகும்! ஆஸ்திரேலியாவை 111 ரன்களில் சுருட்டி மிகப்பெரிய வெற்றியை கண்ட அணியாகும்!
ஆக இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளுமே வெற்றிக் கோப்பையை பெறும் தகுதி வாய்ந்த அணிகள் என்பதால் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் எப்படி வென்று கோப்பையை வெல்வார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
எல்லா ஆட்டமும் வெற்றி தோல்விகள் கத்தியில் நடப்பது போல் எவர் பக்கமும் சாயலாம்! எந்த ஆட்டமும் ஒரு பக்கம் சாய்ந்து எளிதில் வெல்லும் சாத்தியக்கூறு கிடையாது!